Category Archives: TAMIL NADU BUDGET 2011-12

தமிழக அரசின் நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், 2011-2012ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்டத்தை, 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 4 ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன் வைத்து ஆற்றும் உரை

# தமிழக அரசின் நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், 2011-2012ஆம் ஆண்டிற்கானதிருத்த வரவு-செலவுத் திட்டத்தை, 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 4 ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன் வைத்து ஆற்றும் உரை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே
 “”””எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 
  திண்ணியர் ஆகப் பெறின்”” 
திருவள்ளுவரின் இந்த வாக்கை மெய்ப்பிக்கும் வண்ணம், எங்களது நெஞ்சம் நிறைந்த அன்புத் தலைவி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் மன உறுதியுடனும், தளராத முயற்சியுடனும் அயராது செயல்பட்டு, தான் எண்ணியதை எண்ணியவாறு, தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று தமிழகத்தை மீண்டும் செழுமையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மகத்தான பணியை ஏற்றுள்ளார்கள்.  அவர்களது கனிவான ஆசியுடன், 2011-2012 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை இந்த அவையின் முன் வைக்க விழைகிறேன்.    மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் செயல்திறன் மிக்க தலைமையின் கீழ் பொறுப்பேற்றிருக்கும் இந்த புதிய அரசின் முதல் வரவு-செலவுத் திட்டம் இது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.  தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படும் எங்கள் தலைவி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித்தந்த தமிழக மக்களுக்கு எந்நாளும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.  தமிழக மக்கள் இந்த அரசின் மேல் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, மிகுந்த எதிர்பார்ப்பு ஆகியவற்றின் காரணமாக மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உறுதியளித்தபடி மக்கள் நல, வளர்ச்சித் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தி ஒரு திறமையான, சிறப்பான நிர்வாகத்தை தரும் பெரும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.  

# தமிழ்நாடு, திறமையான தொழிலாளர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில் வளர்ச்சியில் முற்போக்கான மாநிலமாகத் திகழ்கிறது. தற்போது மாநிலத்தில் 38,601 தொழில் நிறுவனங்கள் உள்ளன.  விரைவான தொழில் வளர்ச்சி காரணமாக, மாநிலத்தில் திறன்மிகு மனிதவள தேவைக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  ஆனால், அதே சமயம் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக 68 இலட்சம் இளைஞர்கள் பதிவு செய்துஉள்ளனர்.  இந்திய தொழில் கூட்டமைப்பு  வெளியிட்ட ஆய்வறிக்கையில், 2015 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், 130 முதல் 150 இலட்சம் வரை திறன்மிக்க பணியாளர்களுக்கான கூடுதல் தேவை ஏற்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.  இத்தகைய திறன்மிக்க
தொழிலாளர்களுக்கான தேவை, உற்பத்தி சார்ந்த தொழில்கள், நெசவுத் தொழில், மோட்டார் வாகனத் தொழில், சில்லரை வணிகம், தகவல் தொழில்நுட்பத்துறை, மின்னணு உற்பத்தி, நிதி சார்ந்த சேவைத் துறைகள் போன்ற துறைகளில் இருக்கும் எனக் கருதப்படுகிறது.  தேசிய தகவல் தொலைத் தொடர்பு நிறுவனக் கூட்டமைப்பு மதிப்பீட்டின்படி, ஆண்டுதோறும், பட்டம் பெற்று வெளியேறும் 3.5 இலட்சம் பட்டதாரி மாணவர்களில் 20 விழுக்காடு மட்டுமே வேலைவாய்ப்பைப் பெற தகுதி உடையவர்களாக உள்ளனர் என்றும், தகவல் தொடர்புத் திறன்  கணினி அறிவு போன்ற மென் திறமைகளில்அவர்களுக்கு போதிய திறமையின்மையே இதற்குக் காரணங்கள் என்றும் தெரிவிக்கிறது.  

# மாநில அரசு,  தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம்  மூலமாக தனியார் தொழில்நிறுவனங்களோடு இணைந்து வேலைவாய்ப்புக்குரிய திறன் தேவையில் உள்ள குறைவைக் கண்டறிந்து, அதற்கேற்ப சான்றிதழ் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கு உகந்த பயிற்சிகளை வழங்கும் பாடத்திட்டங்களை வடிவமைக்கும்.  அரசு கலை-அறிவியல் கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கலை-அறிவியல் கல்லூரிகளிலும் மென்திறன் பயிற்சியும், வாழ்வாதாரத் தொழிற் பயிற்சி வழங்கும் அமைப்புகள் மூலமாக, அனைத்து அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் தொழில் திறன் பயிற்சியும் வழங்கப்படும்.  இத்தகைய பயிற்சிகள் மூலமாக, 2011-2012 ஆம் ஆண்டில் 1.5 இலட்சம் இளைஞர்கள் மென்திறன், தொழில்நுட்பத் திறன் போன்றவற்றைப் பெறுவார்கள்.  திறன் மிகுந்த பயிற்சியாளர்களை தொடர்ந்து உருவாக்கும் நோக்குடன் பயிற்றுவிப்போர் திறன் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றை தனியார் தொழில் நிறுவனங்களுடன் அரசு இணைந்து உருவாக்கும்.  தமிழ்நாடு மாநிலத் திறன் பதிவுத்தொகுப்பு  தொடங்கப்பட்டு, அதன்மூலம், நமது மாநிலத்தில் தொழில் திறன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படும்.  முதற்கட்டமாக அரசு தொழில்நுட்பப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்கள் விவரங்களும், வேலைவாய்ப்புக்கு உகந்த பயிற்சிமூலம் திறன் வளர்ப்புப் பயிற்சி பெற்றவர்கள் விவரங்களும் பதிவு செய்யப்படும்.  

# தற்போது தமிழ்நாட்டில் 62 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ளன.   தமிழ்நாட்டில் திறன் மிகுந்த தொழிலாளர்களின் தேவை அதிக அளவில் உள்ளதால் இத்தகைய பயிற்சி மையங்கள் அரசின் சார்பில் கூடுதலாகத் தொடங்கப்பட வேண்டியுள்ளன.  இந்த ஆண்டு 10 புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.  இத்தகைய பயிற்சி நிலையங்கள் இல்லாத ஒவ்வொரு வட்டங்களிலும் ஒரு தொழிற் பயிற்சி நிலையத்தைத் தொடங்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மின்னணு பாடமுறை, பணிச்சூழலின் மாதிரி அடிப்படையிலான பயிற்சி போன்றவற்றின் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படுத்தப்படும்.  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் பலர் ஏழை எளிய மாணவ மாணவியர்கள் என்பதால் அவர்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு சீருடைகளும், ஒரு செட் காலணியும் இலவசமாக வழங்கப்படும்.  இதற்கென 4.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.  இத்தகைய பயிற்சி பெறும் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், பொதுமக்களிடையே இம்மாணவர்கள் பற்றிய உயர்வான கண்ணோட்டத்தை ஏற்படுத்தவும் அப்பயிற்சி நிலையங்களிலிருந்து தேர்ச்சி பெற்று வெளிவரும் மாணவர்களுக்கு அரசு முத்திரையுடன் கூடிய திறன் அடையாள அட்டை வழங்கப்படும். 

# வாழ்வாதார தொழிற் கல்விப் பயிற்சிக்கு பொதுவாக உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இத்தகைய கல்விப் பயிற்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கி தரம் உயர்த்தப்பட வேண்டுமென இந்த அரசு கருதுகிறது.  எனவே, உயர் தொழில்நுட்பமான வானூர்தி பராமரிப்பு, உற்பத்தி சார்ந்த தொழில்கள், கப்பல் மற்றும் அது சார்ந்த சேவைகள் போன்ற உயர் தொழில்நுட்பங்களில் இளைஞர்களை பயிற்றுவிக்க உலகத்தரம் வாய்ந்த ஒரு
பயிற்சி மையத்தை தனியார் பங்கேற்புடன் இந்த அரசு அமைக்கும்.  மாணவர்களிடையே சிறப்புத் திறன் வளர்க்கும் மையமாக இது விளங்குவதுடன், உலக அளவில் மதிக்கக்கூடிய வகையில் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கவும், அதனால் மாணவர்களுக்கு உள்ளூரிலும், உலக அளவிலும் பணி செய்யும் வாய்ப்புக்கான புதிய வழிகள் ஏற்படுத்தவும் இதுவழிவகுக்கும்.  இந்த அறிவிப்பினால் இளைஞர்களின் நலனுக்காக அளிக்கப்பட்டிருந்த இன்னொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படுகிறது. 

# தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் திட்டம் வேலைவாய்ப்பைப் பெருக்குவதுடன் சீரான பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகிறது.  இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக உருவாகும் போது ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி காண அவர்களுக்கு உரிய உதவிகளைச் செய்யத் தகுந்த நிறுவன அமைப்புகள் தேவைப்படுகின்றன.  இதைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சீரமைக்கப்படும்.  இந்த நிறுவனம் திறம்பட செயல்பட்டு இளைஞர்களை ஊக்குவிக்கவும், குறிப்பாக முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.  இதற்காக தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய பயிற்சிகள் தொடங்கப்படும்.  இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வதற்கான நவீன வகுப்பறைகள், நூலகம், கணினி மையம், கூட்ட அரங்கம், தங்கும் விடுதிகள் போன்ற வசதிகளை உள்ளடக்கிய நவீன பயிற்சி வளாகம் நான்கு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.  இந்த தொழில் முனைவோர் அமைப்பு நிறுவனம்,   40நிதி நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளின் உதவிகளோடு ஒரு மூல
நிதியை உருவாக்குவதோடு, தனியார் தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டு 
முதலீட்டாளர்களுடன் இணைந்து பணைய மூலதன நிதியையும் உருவாக்கும். 

# உலகளவில் தகவல் தொழில்நுட்பத்திற்கும், அதனைச் சார்ந்த சேவை நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு ஒரு முக்கிய முதலீட்டு இடமாக அமைந்துள்ளது.  இம்மாநிலத்தில் 2010-11 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 40,000 கோடி ரூபாயாகும்.   தகவல் தொழில்நுட்பமும், அதனைச் சார்ந்த தொழில்களும் வளர்ச்சியடைய இந்த அரசு அனைத்து வசதிகளையும் தொடர்ந்து செய்து தரும்.  குறிப்பாக, இரண்டாம் நிலை நகரங்கள், ஊரகப் பகுதிகளில் இந்நிறுவனங்களைத் தொடங்குவதற்கு அனைத்து வசதிகளையும் செய்து தரும்.  இரண்டாம் நிலை நகரங்களில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்புகளை முழு அளவில் பயன்படுத்தும் பொருட்டு காலியாக உள்ள இடங்களைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.  கணினி வன்பொருள் துறையில் முதலீட்டினை ஈர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்த
அரசானது புதிய தகவல் பரிமாற்ற தொழில்நுட்பக் கொள்கை 2011-ஐ உருவாக்கும்.  இக்கொள்கையானது மென்பொருள், வன்பொருள் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாகவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் அமையும். 


# திருக்குறளையும் மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் கவிதைகளையும், ஆங்கிலம், அரபு, சீன மொழிகளில் மொழிபெயர்த்து இணையதளத்தில் வெளியிடும் பொருட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் அறிஞர்கள், பிற தமிழறிஞர்கள்,  பிற மொழி அறிஞர்கள் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும்.  அத்தகைய மொழி பெயர்ப்பிற்காகத் தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 48.50 இலட்சம் ரூபாயும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு 10 இலட்சம் ரூபாயும் இந்த திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

# குழந்தைகளுக்கான 2009 ஆம் ஆண்டு இலவச-கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, கல்வி ஓர் அடிப்படை உரிமையாக அரசியல் சாசனப்படி கட்டாயமாக்கப் பட்டுள்ளது.  மத்திய அரசின் இந்தச் சட்டத்தைப் பின்பற்றி இந்த அரசு, அனைத்துக் குழந்தைகளையும் தொடக்கப் பள்ளிகளிலும், இடைநிலைப் பள்ளிகளிலும் சேர்த்து தரமான கல்வியை வழங்கும்.  அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து 100 விழுக்காடு மாணவர்களும் தொடக்கக் கல்வி பெறுவதற்கு வழிவகை செய்வதே இந்த அரசின் குறிக்கோளாகும்.  இந்த இலக்கை எய்துவதற்காக அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட “”””அனைவருக்கும் கல்வித் திட்டம்”” சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தொடக்கக் கல்வியை மிகவும் பயனுள்ளதாக ஆக்குவதற்காக இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தவும், மனித வள மேம்பாட்டின் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக 2011-2012 ஆம் ஆண்டில் 498.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மைக் குழுக்களும்  அமைக்கப்பட்டுள்ளன.  இக்குழுக்களை வலுப்படுத்துவதற்காக 2011-2012 ஆம் ஆண்டுக்கு இத்திட்டத்திற்கு 27.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  பள்ளிக்குச் செல்லாமல் 56,113சிறார்கள் உள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது.  தீவிர முயற்சிகள் மூலம் இவர்கள் அனைவரையும் இந்த ஆண்டே பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.  

# பள்ளிக் கல்வியில் ஆண், பெண் கல்வி விகிதாச்சாரத்தில் உள்ள இடைவெளியை சரி செய்வதற்கான வழிவகைகளை அரசு வகுத்து வருகிறது.  2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் கல்வி கற்றோர் விகிதாச்சாரம் 80.33 விழுக்காடாக உள்ளது. இதில் ஆண்களின் கல்வி விழுக்காடு 86.81 ஆகவும் பெண்களின் கல்வி விழுக்காடு 73.86 ஆகவும் உள்ளது.  பெண்களுக்கான தேசிய தொடக்கக் கல்வித் திட்டம் 11 மாவட்டங்களில் கல்வியில் பின்தங்கியுள்ள 38 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தங்கிப் பயிலக் கூடிய வகையில் இடைநிலைக் கல்வியை வழங்கும் கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா திட்டத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 45 வட்டாரங்களில் உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  உயர்நிலை, மேனிலைக் கல்வி பயிலும் மாணவியருக்கு உண்டி-உறைவிட வசதி செய்து தருவதற்காக 13 மாவட்டங்களில் உள்ள 44 வட்டாரங்களில் 44 மாணவியர் தங்கும் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.  பெண்களுக்கு தொடக்கக் கல்வி வழங்கும் தேசியத் திட்டம், கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா, மாணவியர் தங்கும் விடுதிகள் ஆகிய திட்டங்களின் மூலம் 2,58,715 மாணவியர்
பயனடைகின்றனர்.   பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்குடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பட்டப் படிப்பும், பட்டயப் படிப்பும் படித்த பெண்களுக்கான திருமண உதவித் தொகையை 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தியதுடன், நான்கு கிராம் தங்கக் காசும் மனமுவந்துவழங்கியுள்ளார்கள்.  பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுக்கு நிகரான கல்வி புகட்ட ஊக்கமளிப்பதோடு கல்வி கற்பதில் விரைவில் பாலின சமநிலையை எட்டவும் இது உதவும் என நம்புகிறேன். 

# தொடக்கக் கல்வி நிலையில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வருவதால் மேனிலைக் கல்வி நிலையிலும் மாணவர் சேர்க்கை உயர்ந்து வருகிறது.  மேனிலைக் கல்வியின் தரத்தையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்காக, 2009-2010 ஆம் ஆண்டு முதல் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.  குறிப்பாக, இத்திட்டம், நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துவதையும் இடைநிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக தற்போதுள்ள 51இடைநிலைப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 2011-2012 ஆம் ஆண்டில் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2009-2010 ஆம் ஆண்டில் மேனிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 1.39 விழுக்காடாக இருந்தது.  மேனிலைப் பள்ளிகளிலிருந்து இடை நிற்றலை இன்னும் குறைப்பதற்கு பத்தாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.  அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பத்தாம் வகுப்பு, மேனிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தலா 1,500 ரூபாயும், மேனிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தலா 2,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக மாநில அரசால் வழங்கப்படும்.  இத்தொகை மாணவ மாணவியர்களின் பெயரில் மின்விசை நிதி நிறுவனம் போன்ற பொதுத் துறை நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக வைப்பீடு செய்யப்பட்டு, அவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும் பொழுது அத்தொகை அவர்களுக்கு வழங்கப்படும்.   இத்திட்டத்தின் கீழ் 394.04 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 24,94,649 மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள்.  இத்திட்டத்தின் மூலம் மேனிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் மேலும் குறையும் என நம்புகிறேன். 

# 2011-2012 ஆம் ஆண்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு இரண்டு செட் சீருடைகள் வழங்கப்படும்.  இதற்கு கூடுதலாக 59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 2012-2013 ஆம் ஆண்டு முதல் பள்ளிக் குழந்தைகளுக்கு நான்கு செட்  சீருடைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கு ஆண்டிற்கு 177 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.    ஆறாம் வகுப்பும் அதற்கு மேலும் பயிலும் மாணவர்களுக்கு அரைக் கால்சட்டைக்குப் பதிலாக முழுக் கால்சட்டையும், மாணவியர்களுக்கு பாவாடை தாவணிக்குப் பதிலாக சல்வார் கமீசும் வழங்க முடிவு  செய்யப்பட்டுள்ளது.  இந்த உடை மாற்றம் பள்ளி மாணவ மாணவியரிடையே பெருத்த வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன்.  தற்போதுள்ள கூலி விவரத்தைக் கருத்தில் கொண்டு தையல் கூலியும் உயர்த்தி வழங்கப்படும்.  அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் காலணிகள் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.  

# சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும்.  இதில், பள்ளிக் கல்வி சார்ந்த அனைத்து இயக்குநரகங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கட்டடங்களில் இடம் பெறுவதுடன் கூட்ட அரங்குகள், பயிற்சி மையங்கள், கலந்துரையாடல் மையங்கள், புகைப்படக் காட்சிக் கூடத்துடன் கூடிய கல்வி தொலை தொடர்பு மையம் போன்ற நவீன வசதிகளும் ஏற்படுத்தப்படும்.  இந்த ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்காவில் ஏற்படுத்தப்படும் அடிப்படை வசதிகள், ஆசிரியர்களின் பயிற்சித் தேவைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மாணவர்கள் பாடப் புத்தகங்களுக்கு அப்பாலும் கல்வியறிவு பெறக்கூடிய வகையில் அமையும்.  

# அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய தரமான உயர் கல்வியை வழங்குவதே இந்த அரசின் குறிக்கோளாகும்.  உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய உயர்கல்வி மையமாக தமிழகத்தை உருவாக்குவதே இந்த அரசின் விருப்பமாகும்.  நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கும், கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கும் உயர் கல்வி வசதி மேலும் கிடைக்கச் செய்ய மாநில அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த நோக்கத்தை அடையும் வகையில் குறைந்தபட்ச தகுதியாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம்  குறிப்பிட்டுள்ள அளவுகோலிலிருந்து மாறுபட்டு அக்குறியீடுகளைத் தளர்த்தி பின்பற்ற இந்த அரசு முயற்சி  மேற்கொண்டுள்ளது.  இதன் மூலம் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும் கிராமப்புற மாணவ மாணவியர்களும் உயர்கல்வியைப் பெருமளவில் பெற முடியும்.  இத்தகைய தளர்த்தப்பட்ட குறியீடுகளைப் பின்பற்றும்படி மாண்பமை உயர் நீதிமன்றமும் இந்த மாநிலத்திற்கு ஓர் இடைக்கால ஆணை பிறப்பித்துள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.  தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி;தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம்; விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி; நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம்; வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர்; திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, நன்னிலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெம்மேலி; விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர்; திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் என பதினோறு இடங்களில் புதிதாக அரசு கலை-அறிவியல் கல்லூரிகளை அந்தந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் தொடங்கி வைத்தார்கள்.  தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றை புதிதாகத் தொடங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணம் இந்த அரசால் தொடர்ந்து வழங்கப்படும்.  2011-2012 ஆம் ஆண்டில் இதற்காக, 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

# அடிப்படை ஆய்வு, செயல்முறை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், மாணவர்கள் பரிவர்த்தனை, இரட்டைப் பட்டங்கள் வழங்குதல், கல்வி பயிற்றுநர்களுக்கு உதவி போன்ற பணிகளை நமது பல்கலைக் கழகங்கள் உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களுடனும், உலகத் தரமிக்க பிற நிறுவனங்களுடனும் இணைந்து மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளவும், கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளவும் ஊக்குவிக்கப்படும்.  இதற்கான, கட்டமைப்பு வசதிகள் தேவையான அளவு மேம்படுத்தப்படும்.  இப்பல்கலைக் கழகங்களில்பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், சீன மொழிகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு, காண்ஒளி கணினி வழிக் கலந்துரையாடல் வசதியுடன் கூடிய வகுப்பறைகளும், மொழி ஆய்வுக் கூடங்களும் உருவாக்கப்படும்.  வெளிநாட்டு பல்கலைக் கழகங்களிலிருந்து புகழ் பெற்ற விரிவுரையாளர்களும், ஆசிரியர்களும் வரவழைக்கப்பட்டு நமது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயிற்சியளிக்க வழிவகை செய்யப்படும்.  உலக அளவில் புகழ்பெற்ற வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில் நமது பாடத் திட்டங்களை உலகத் தரத்தில் உருவாக்கும் வகையில் இந்தப் பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டம் உருவாக்கும் பிரிவு ஒன்றையும் மாநில அரசு ஏற்படுத்தும்.  இம்முயற்சிகள் நமது கல்வி நிறுவனங்களை உலக அளவில் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக மாற்ற ஒரு தொடக்கமாக அமையும் என நம்புகிறேன்.  

# அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து +1, +2 மாணவ மாணவியர்களுக்கும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள்.  இந்நாட்டு இங்கர்சால் என்றும் தென்னாட்டு பெர்னாட்ஷா என்றும் போற்றப்பெறும் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த பொன்னாளான செப்டம்பர் 15 ஆம் நாளன்று இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படும்.  ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் குறிப்பாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் நன்மைகளைப் பெறும் வகையில் கணினிப் பயன்பாட்டில் அவர்களது அறிவுநுட்பமும், திறனும் மேம்படச் செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.  2011-2012 ஆம் ஆண்டில் தகுதியுள்ள மாணவர்களுக்கு 9.12 இலட்சம் மடிக்கணினிகளை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளோம்.  இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென 912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

# சமூகப் பொருளாதார அளவுகோல்களைப் பொறுத்த வரையில் குறிப்பாக, சுகாதார அளவுகோல்களில், தமிழ்நாடு மிக உயர்ந்த நிலையில் உள்ளது.   அகில இந்திய அளவில் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரம் பிறப்புகளுக்கு 50 ஆகவும், பேறு காலத்தில் பெண்களின் இறப்பு விகிதம் ஒரு இலட்சம் பிறப்புகளுக்கு 212 ஆகவும் இருந்த போதிலும் நமது மாநிலத்தைப் பொறுத்தவரையில் பச்சிளங் குழந்கைளின் இறப்பு விகிதம் 28 ஆகவும், பேறு காலத்தில் பெண்களின் இறப்பு விகிதம் 80 ஆகவும் உள்ளது.  மகப்பேறு வசதிகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெற்ற தாய்மார்களின் எண்ணிக்கை 2010-2011 ஆம் ஆண்டில் 26.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது.  2011-2012 ஆம் ஆண்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 4,761 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்கோளை எய்தும் நோக்குடன் தேசிய ஊரக சுகாதார நலத் திட்டம், தமிழ்நாடு சுகாதார நலத் திட்டம் என்ற இரண்டு மாபெரும் திட்டங்கள் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  

# தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் நம்பகத்தன்மையுடைய போக்குவரத்து வசதிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன.  தற்போது 21,169 மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.  அரசு போக்குவரத்து நிறுவனங்களின் தற்போதைய நிதிநிலை மிக மோசமான நிலையில் உள்ளது.  எனவே, அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குக்கூட மாநில அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.  பணியாளர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வழிவகை செய்து தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், போக்குவரத்துக் கழகங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.   போக்குவரத்துக் கழகங்களுக்குக் கூடுதல் வருவாய் ஏற்படுத்தும் வகையில் தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்தம் வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு 2011-2012 ஆம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள்
வாங்கப்படும்.  இதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் பங்கு மூலதன உதவிக்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு இழப்பீடாக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்க 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

# ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1,073 பள்ளிகளும்,  1,294 விடுதிகளும் இயங்கி வருகின்றன.  2001-2002 முதல் 2007-2008 ஆம் ஆண்டு வரையில் ஏற்பளிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் கட்டுமானப்பணி முடிக்கப்படாமல் உள்ள 35 விடுதிக் கட்டடங்களை விரைவாக கட்டி முடிப்பதற்குக் கூடுதலாக 6.43 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.   இன்னும் 93 விடுதிகள் தனியார் கட்டடங்களில் இயங்கி வருகின்றன.  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி இந்த 93 விடுதிகளுக்கும் கட்டடங்கள் கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும்.  2011-2012 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் விடுதிகள் கட்ட 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  1,080 விடுதிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு 83.40 கோடி ரூபாய் ஏற்கெனவே அனுமதியளித்துள்ளது. 

# ஆதிதிராவிட பள்ளி மாணவ மாணவியருக்கு தற்போது வழங்கப்படும் மாத உணவுப்படி 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக உயர்த்தப்படும்.  இதேபோன்று கல்லூரி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் உணவுப்படி 550 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தப்படும். 2011-2012 ஆம் ஆண்டில் பத்து நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், பத்து உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாகவும் நிலை உயர்த்தப்படும்.  கழிவறை வசதிகளை 779 பள்ளிகளில் ஏற்படுத்துவதற்காக, சிறப்பு மானியமாக 15.58 கோடி ரூபாய் அனுமதிக்கப்படும்.  பத்து இலட்சம் ஆதிதிராவிடர் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மெட்ரிக் படிப்பிற்கு மேற்பட்ட உயர்படிப்பிற்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக, இந்த திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில், 238.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக, 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

# தமிழ்நாட்டின் மொத்த மக்கட்தொகையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 73.50 விழுக்காடாகும்.  பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது.  இம்மாநிலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு  50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து வருகிறது.  இந்திரா சஹானி – யூனியன் ஆப் இந்தியா ஆகியோருக்கு இடையேயான வழக்கில் மாண்பமை உச்ச நீதிமன்ற அரசமைப்பு நடுவர் ஆயம், 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு செய்யப்படக்கூடாது என தீர்ப்பளித்ததனைத் தொடர்ந்து, ஏற்கெனவே சட்டப் பிரிவு 31-க்ஷ யின் கீழ் அரசமைப்புச் சட்டம் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்டு  நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்பட்ட தமிழக அரசுதான் 1994 ஆம் ஆண்டு சட்டம் 45-ஐ கொண்டுவந்தது.  இச்சட்டத் திருத்தத்திற்கு எதிரான மனுக்களை ஏற்று, மாண்பமை உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் உரிய அளவீட்டு எண்ணிக்கை விவரங்களை சமர்ப்பித்து, அந்த எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு அளவினை ஆணையம்  நியாயமெனக் கருதினால் அவ்வாறே முடிவு செய்யலாம் என பணித்தது.  நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள் தலைமையிலான ஆணையம், 8.7.2011 அன்று அரசுக்கு அளித்த அறிக்கையில், தற்போது பல்வேறு தரப்பினருக்கு அளிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு நியாயப்படுத்தப்பட்டுள்ளது.   ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் காக்கும் வகையில் அரசு 11.7.2011 அன்று ஆணை வெளியிட்டுள்ளது.  இதனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு உட்பட நமது மாநிலத்தில் பின்பற்றப்படும் மொத்த இட ஒதுக்கீடு 69 விழுக்காடு அளவைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சமூக நீதியைக் காக்கும் இந்த மகத்தான முடிவு நிச்சயமாக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   

# பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவ மாணவியர்களுக்கு இலவசக் கல்வியையும், மெட்ரிக் படிப்பிற்கு முந்தைய, மெட்ரிக் படிப்பிற்கு மேற்பட்ட படிப்புகளுக்கான படிப்பு உதவித் தொகையையும் இந்த அரசு வழங்கி வருகிறது.  இதற்காக 2011-2012 ஆம் ஆண்டிற்கு, 89.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம், தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.  2011-2012 ஆம் ஆண்டில், 112.08 கோடி ரூபாய் செலவில் ஆறு இலட்சம் மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

# மூன்று தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், மூன்று நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், முன்று உயர்நிலைப் பள்ளிகளை மேனிலைப் பள்ளிகளாகவும் ஆக மொத்தம் ஒன்பது  கள்ளர் மறு சீரமைப்புப் பள்ளிகளை நிலையுயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.  தற்போது, கள்ளர் மறுசீரமைப்பு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பராமரிப்பு மானியம் ஆண்டொன்றிற்கு நான்கு இலட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.  இப்பிரிவு மாணவர்கள் பயன்பெறும் வகையில், நடப்பாண்டில், மாவட்டத்திற்கு ஐந்து பள்ளிகள் வீதம் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பாலர் பள்ளியுடன் கூடிய பதினைந்து ஆங்கில வழிப் பள்ளிகள் தொடங்கப்படும்.  இப்பிரிவில் 285 கள்ளர் மறு சீரமைப்புப் பள்ளிகளுக்கென இந்த  திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  

# பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில், அரசால் 1,238 விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இவற்றில் 148 விடுதிகள் இன்னும் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன.   வாடகைக் கட்டடங்களில் இயங்கிவரும் எஞ்சிய அனைத்து விடுதிகளுக்கும் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.  விடுதிக் கட்டடங்கள் கட்டுவதற்காக 2011-2012 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தற்போது அளிக்கப்படும் மாத உணவுப்படி  450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாகவும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 550 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதனால் அரசுக்கு 19 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
# அரசுப் பணியாளர்களின் ஒத்துழைப்பும், ஈடுபாடும் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும், வளர்ச்சிப் பணிகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு இன்றியமையாதவை என இந்த அரசு கருதுகிறது.    இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 27,091 கோடி ரூபாய் பணியாளர்கள் ஊதியச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  ஊதிய முரண்பாடுகளைக் களைய முந்தைய அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்திய பின்பும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அரசுக்கு கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.  இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால், இந்த அரசு ஊதிய  முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கைகளைக் கவனமுடன் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்.   

# தமிழகத்தில் தற்போது 6.53 இலட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.  இணையான பணிகளுக்கு சமமான ஊதியம் எனும் அடிப்படையில் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் திருத்தி வழங்கப்பட்டு வருகிறது.  ஓய்வூதியதாரர்களின் வயது அதிகமாகும்போது ஓய்வூதியமும் அதிகமாகும் வண்ணம் ஓய்வூதியத் தொகையினை மத்திய அரசு வழங்குவதுபோல் தமிழக அரசும் வழங்கி வருகிறது.  இதனால் ஓய்வூதியச் செலவினங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன.  2011-2012 ஆம் ஆண்டில் 11,942 கோடி ரூபாய் ஓய்வூதியச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.