Category Archives: SAMACHEERKALVI NEWS

25 காரணங்கள் என்னென்ன? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்

சமச்சீர் கல்வி வழக்கில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர் . நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்:

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று 25 காரணங்களை கூறிய தீர்ப்பு அளிக்கிறோம்.
அவை வருமாறு:
1.தமிழகத்தில்தரமான கல்வி சமமான கல்வி தர கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் கல்வி கற்கும் குழந்தைகள் மத்தியில் பொருளாதார சமூக கலாச்சார வேறுபாடுகள் இருக்க கூடாது என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது.
2.கடந்த 2010ம் 2011ம் கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் பாடம் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011&2012 கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழகஅரசு கூறியதை ஏற்க முடியாது.
3.சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக்களை கூறியுள்ளது. இதை கடந்த அரசு பின்பற்றவில்லை. எனவே சமச்சீர் கல்வியை தள்ளிவைத்தோம். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.
4.கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் சில மாற்றங்களை செய்ய சட்டத்தில் தனியாக வழியுள்ளது. இதற்காக நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க முடியும். இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான்.
5.கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தமிழக அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க முடியாது.
6.புதிய அரசு கடந்த மே 16ம் தேதி பதவி ஏற்றது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 17 மற்றும் 18ம் தேதி சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் , தனியார் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தன. இந்த கோரிக்கைகளை கொடுத்த அமைப்புகள் தான் ஏற்கனவே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதை அரசு பரிசீலணைக்கு எடுத்து இருக்க கூடாது.
7.தமிழகஅரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ம் பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் கல்வியை தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியில்ரீதியான உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதன்அடிப்படையில் தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
8.தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாட திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
9.சமச்சீர் கல்வியை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்ததை எதிர்த்து பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இதை அடுத்து தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
10.சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு முதலில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. உச்ச நீதிமன்றம் அரசு மனுவை விசாரித்து, சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்க்க 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால் கமிட்டி சரியாக செயல்படவில்லை.
11.கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை,என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படி பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
12.தற்போதைய கல்வித்துறை செயலாளர் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு, 10 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடபுத்தகங்களை அச்சடி ஒப்புதல் வழங்கினார். இந்த புத்தகங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ததும் அவர் தான் என்று தெளிவாக தெரிகிறது.
13.தமிழக அரசின் நிபுணர்கள் குழு சில குறைபாடுகளை தான் கூறியுள்ளது தவிர சமச்சீர் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை.
14.சமச்சீர் கல்வி சட்டம் 2010ம் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளி வந்ததால் மற்ற வகுப்புகளுக்கும் சட்டப்படி இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம்.
15.பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியை திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம்.
16.ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு அதை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாதாகிவிடும்.
17.சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கடந்த அரசு டெண்டர் கொடுத்தது. புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. இதுதெரிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய பாடபுத்தகங்களை அச்சடிக்க டெண்டர் கொடுத்தது. இது தவறானது. இதை அனுமதிக்க முடியாது. இது உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
18.சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு பின்பற்றவில்லை.
19.கடந்த 2005ம் ஆண்டின் தேசிய பாடதிட்ட வரைவை கடந்த சரியாக பின்பற்றியது. அதை சரியாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.
20.சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒரு சில தவறுகள் உள்ளது என்றும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தவறுக்களுக்காக ஒரு சட்டத்தையே திருத்த வேண்டிய அவசியம் இல்லை.
21.ஆரம்ப பள்ளி சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தலைவரின் படங்கள், கவிதைகள், தத்துவம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அது இளம் மாணவர்களை கவரும் வகையில் உள்ளது , அவர்கள் மனதில் அரசியல் சாயம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழக அரசு கூறியதால் அந்த பகுதிகளை நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை அரசு ஏற்று இருக்க வேண்டும். இதை அரசு ஏற்காதது தவறானது. அதற்கு மாறாக சமச்சீர் கல்வியை காலவரையற்ற அளவில் தள்ளிவைத்துள்ளது.
22.தமிழக அரசின் கல்வித்துறை இணைய தளத்தில் 10 வகுப்பு பாடங்கள் வெளியிடப்பட்டதை தெரிந்து கொண்ட மாணவர்கள் அவற்றை நகல் எடுத்து படித்து வந்துள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய முடியாது. 2010 &2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.அந்த நம்பிக்கையை அரசு பாழ்படித்துள்ளது.
23.சமச்சீர் கல்வியை மேலும் வலுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அரசு அமுல்படுத்திருக்க வேண்டும்.
24.ஒரு சில பள்ளிகள் தங்களுக்கு விரும்பமான பாட திட்டங்களை தேர்வு செய்யலாம் என்ற காரணத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது.
25.உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்தை செல்லும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அப்படி இருக்கும்போது தற்போது 2011ம் ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது.
சமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்த, சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான். சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு செல்லும்.
ஒவ்வொரு கட்சியும் அரசு மாறும் போது மாணவர்கள் பாதிக்கும் அளவு நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது. தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்களின் அடிப்படை அதிகாரத்தை பறிப்பதாகும். மாணவர்களுக்கு பாதிப்பதாக உள்ளது. அரசியில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் என்ற காரணத்தை காட்டி மாணவர்கள் படிப்பு பாழாக்க கூடாது. பாழக்கியது தவறு. அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அதை ஏற்க முடியாது. குழந்தைகள் எதிர்காலம் பாதிக்காதவகையில் அரசு செயல்பட வேண்டும். அரசியில் உள்நோக்கத்துடன் அரசு நடவடிக்கை எடுத்ததாக தெளிவாக தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்கிறோம்.

சமச்சீர் கல்வி : நிபுணர் குழு அறிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

 தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து பரிந்துரை செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழு, சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படிதான் இந்தக் குழு அமைக்கப்பட்டது என்ற போதிலும், இதிலுள்ள உறுப்பினர்களை தேர்வு செய்தது தமிழக அரசுதான். எனவே தமிழக அரசு நினைத்ததை இக்குழு செய்து முடித்திருக்கிறது.

 இந்தக் குழுவில் சமச்சீர் கல்விக்கு எதிரான தனியார் பள்ளிகளின் முதலாளிகளை உறுப்பினர்களாக நியமித்தபோதே, சமச்சீர் கல்வி முறைக்கு இக்குழு சமாதி கட்டிவிடும் என்று அச்சம் தெரிவித்திருந்தேன். அதன்படியே இப்போது நடந்திருக்கிறது.   சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்காக தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறிவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யவில்லை. மாறாக ஒன்றாம் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ஆணையிட உச்சநீதிமன்றம், மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை தெரிவிக்கும்படிதான் 9 பேர் குழுவுக்கு அறிவுறுத்தியிருந்தது. சமச்சீர் கல்விமுறை செல்லும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஏற்கனவே உறுதி செய்திருப்பதால், சமச்சீர் கல்வி முறையை மாற்றுவது குறித்து இக்குழு ஆராயக் கூடாது- மாறாக சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து மட்டுமே இக்குழு ஆராய வேண்டும்மு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.   ஆனால், தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவோ, உச்சநீதிமன்றம் சொன்ன பணிகளை செய்யாமல், சொல்லாத விசயங்களை செய்து விட்டு சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும், அறிக்கை களையும் ஆராய்ந்துதான் இந்த முடிவுக்கு வந்ததாக வல்லுநர் குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், அக்குழு ஆராய்ந்ததாக கூறப்படும் அறிக்கைகளின் பட்டியலில், சமச்சீர் கல்வி தொடர்பான முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தாக்கல் செய்த அறிக்கை இடம் பெறவில்லை. சமச்சீர் கல்வி முறைக்கு அடிப்படையான முத்துக்குமரன் குழுவின் அறிக்கையையே படிக்காமல் வல்லுநர் குழு எப்படி இந்த முடிவுக்கு வந்தது என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. வல்லுநர் குழு அறிக்கையை படிக்கும்போது ஒரு விசயம் தெளிவாக புரிகிறது. சமச்சீர் கல்வி வரக்கூடாது என்று தமிழக அரசு காலால் இட்ட பணியை வல்லுநர் குழு தலையால் செய்து முடித்திருக்கிறது.   வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு எதிராகவே இருப்பதால், அவற்றை சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய் துள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின்படி சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

நிபுணர்குழுவினர் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்து 4 முறை ஆய்வு செய்தனர். இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் 597 பக்க அறிக்கையாக தயாரிக்கப்பட்டது.

சமச்சீர் கல்வி வழக்கு 7ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அன்று முதல் நாள்தோறும் வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.

உயர்நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிபுணர் குழு அறிக்கையில் கீழ்கண்ட தகவல் கூறப்பட்டு உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த முடியாத அளவுக்கு குறைகள் உள்ளன. கல்விக்கான தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) 2005-ல் வடிவமைத்தை தேசிய பாடத்திட்டம் வடிவமைப்புக்கு ஏற்ப சமச்சீர் பாடத் திட்டங்கள் தரமானதாக இல்லை. அதற்கு இணையாகத் தயாரிக்கப்பட வில்லை. அவசர கோலத்தில் இந்த பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மெட்ரிக் குலேசன் தரத்திற்கு சில பாடங்கள் அமைந்துள்ளன. இதனை மாணவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்ததில் தவறுகள் நிறைந்துள்ளன. மொழி பாடத்தில் இலக்கண பிழைகள், கருத்து பிழைகள் உள்ளன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஆகவே இந்த சமச்சீர் பாடத் திட்டத்தை கொண்டு இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்த இயலாது. இந்த பாடத்திட்டம் முழுமையாக திருத்தி அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், தி.மு.க., கொடியின் நிறத்தை போல கறுப்பு, சிவப்பு நிறத்துடன் சட்ட காந்தம் படம் அச்சிடப்பட்டுள்ளது. படத்தை, ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


கடந்த தி.மு.க., ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மே மாதம் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு சமச்சீர் கல்விக்கு தடை விதித்தது. இந்நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நடப்பாண்டில், ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடப்புத்தகங்களில், சில பகுதிகளை நீக்கியும், ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வெளியிட தமிழக அரசு முடிவு செய்தது. சில நாட்களாக கல்வித்துறை அறிவுரைபடி, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடங்களில் குறிப்பிட்ட பகுதிகளை மறைக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், 81ம் பக்கத்தில் தி.மு.க.,வின் கறுப்பு, சிவப்பு வர்ண கொடியை மாணவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், கறுப்பு – சிவப்பு நிறத்துடன் கூடிய சட்டகாந்தம் படம் அச்சிடப்பட்டுள்ளது. அதனால், அந்த படத்தையும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அறிவியல் பாடத்தில் சட்டகாந்தம் படத்தை ஆசிரியர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து நிபுணர்குழு ஆராயந்து முடிவு எடுக்கலாம்.நிபுணர்குழு 2 வாரத்திற்குள் அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்


ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்த சமச்சீர்கல்வி திட்டத்தை ரத்து செய்து மேலும் மாற்றங்கள் கொண்டு வந்து மேன்படுத்த வேண்டியிருக்கின்ற காரணத்தினால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி தொடர முடியாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
அரசின் உத்தரவை இந்த எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதில் சென்னை ஐகோர்ட் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து ‌சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்‌தது.

இந்த மனுவை விசாரித்த கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்ததுது. இதர வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து நிபுணர்குழு ஆராயந்து முடிவு எடுக்கலாம்.நிபுணர்குழு 2 வாரத்திற்குள் அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். நிபுணர் குழு அறிக்கை மீது சென்னை ஐகோர்ட் தினமும் விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் .

மேலும் தமிழக தலைமை செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்பட வேண்டும். குழுவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இரண்டு அதிகாரிகளும், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் இரண்டு அதிகாரிகளும், கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனரும் இடம் பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் வகுப்புகளில் பாடம் நடத்த வேண்டாம். சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு பின்னர் பாடம் நடத்தலாம் இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும், இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


மேலும், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் அரசின் சட்ட திருத்ததுக்கு இடைகால தடைவிதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முந்தைய திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு நிறுத்தி வைத்தது. பாடத் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி. இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் சமச்சீர் கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, இக்கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக புதிய சட்டத் திருத்தம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வழக்கறிஞர் ஷியாம் சுந்தர், பெற்றோர் மனோன்மணி உள்பட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனிடம் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது? பெற்றோர்கள் – ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா? பாடத் திட்டங்கள் தரமில்லை என்று எந்தக் கமிட்டி பரிந்துரை செய்தது? என்று நீதிபதி கேள்விகளை அடுக்கினார்.

மேலும், அரசின் இந்த முடிவால் பாதிக்கப்படபோவது பெற்றோரும், மாணவர்களும்தான். சமச்சீர் கல்வி சட்டம் சரியானது என்று இந்த நீதிமன்றமும் (சென்னை உயர் நீதிமன்றம்) உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி சில உத்தரவுகளை முந்தைய அரசு பின்பற்றவில்லை என்பதற்காக சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதா? அந்த உத்தரவுகளை புதிய அரசு பின்பற்ற வேண்டியதானே?

சமச்சீர் கல்வி பாடத்தில் முந்தைய அரசின் புகழ் பாடுவது போல பாடங்கள் இருந்தால், அதை நீக்க வேண்டியது அவசியம்தான். அதை விடுத்து ஒட்டு மொத்த பாடத்தையும் ரத்து செய்வது ஏன்?

இது மக்களின் பணம். இந்த பணம் பெரிய விஷயமில்லை என்று அட்வகேட் ஜெனரல் கூறுவதை ஏற்க முடியாது. இந்த அரசு கொண்டு வந்த திருத்த சட்டமானது, இந்த நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்பை ஒன்றும் இல்லாதது போல் செய்கிறது.

பள்ளிப் பாட புத்தகத்தில் எந்த ஒரு தனி நபர் அல்லது கட்சிகளின் புகழ் பாடும் விதமாக இருக்கக் கூடாது என்ற அரசின் வாதத்தை நாங்கள் ஏற்கிறோம்,” என்று கூறினார், தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்.

இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் நவ நீதகிருஷ்ணன், “சமச்சீர் கல்விக்கான பாடங்கள் தரமற்றவை. இது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் கொடுத்த ஏராளமான புகார்களின் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதென்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்,” என்று வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கில் இன்று மாலை உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும், இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் அரசின் சட்ட திருத்ததுக்கு இடைகால தடைவிதித்தும் அவர்கள் உத்தரவிட்டனர்.

ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கும், எஞ்சிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலும் தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.