Category Archives: POLLUTION

>குப்பை இல்லா நல்லுலகம்?

>

உலகில் சீனாவுக்கு அடுத்ததாக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடு என்ற பெருமையைப்பெற்ற இந்தியாவில் மக்கள் நெருக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சுகாதாரக்கேடு, புதுப்புது நோய்கள், குடிநீர்ப் பஞ்சம், உணவுப் பற்றாக்குறை என பல பிரச்னைகள் பெருகி வருகின்றன. இவற்றில் பெரும் ஆபத்தை விளைவிப்பவை பெருகிவரும் மாசுக்கள்தான்.
வழக்கம்போல மாசுபடுதலுக்கு முக்கிய காரணம் ரசாயனப் பொருள்களின் பயன்பாடு, மரங்களை அழித்தல் போன்றவற்றைக் கூறலாம். இப்படியே நிலைமை பூதாகரமாகிப் போவதால் புவிவெப்பமயமாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு என பல கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்தியாவைப் பொறுத்தவரை குப்பைகள் மிகுந்த நாடு என வெளிநாட்டவர்களால் கேலி பேசப்படும் அளவுக்கு மாறிவிட்டது. சரி இவர்கள்தான் நம்மை இளக்காரமாகப் பேசுகிறார்களே என்றால் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் பேசும்போது, குப்பைகள் அதிகமாக இருப்பதற்காக இந்தியாவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டலாகப் பேசியுள்ளார். கிண்டலோ..சீரியúஸô இன்றைய நிலையில் குப்பைகள் குவிந்த நாடு இந்தியாதான் என்பதை மறுப்பதற்கில்லை.
இல்லாவிட்டால் வெளிநாடுகளிலிருந்து இலவசமாகக் கதிரியக்கக் குப்பைகளை இறக்குமதி செய்வோமா? ஏதோ இலவசமாகக் கொடுக்கிறார்களே என்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீணான கம்ப்யூட்டர்கள், கதிரியக்க உலோகத் துண்டுகள், பழைய இரும்புப் பொருள்கள் என வாங்கிக் குவித்து நாட்டை மேலும் சீரழிக்கிறோம். அமெரிக்கா போன்ற நாடுகள் நல்லது செய்வது போல செய்து அவர்கள் நாட்டை தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.
இது தேசிய அளவில் செய்யப்படும் காரியம். ஆனால் மாநிலம் வாரியாக சேரும் குப்பைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
நாட்டில் நாளுக்குநாள் குப்பைகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
அண்மையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரே நாளில் 150 டன் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதேநிலை தினமும் ஏற்பட்டால் நிலைமை என்ன ஆகும்?
குப்பைகளைச் சேகரித்து அதை இயற்கை உரமாக மாற்றுதல், மின்சாரம் தயாரித்தல் என பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
ஆனாலும், இதை அனைவரும் பின்பற்றினால்தான் குப்பைகள் இல்லா நல்லுலகம் அமையும்.
நம்மில் பலர் குப்பைகளை முறையாக அகற்றுவதில் அலட்சியம் காட்டுகிறோம்.
இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தால் மட்டுமே சுகாதாரத்தைப் பேணலாம்.
மக்காத குப்பைகள் என பார்த்தால் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளைக் கூறலாம்.
மக்காத குப்பையால் மண்ணில் மழைநீர் தேங்குகிறது. தண்ணீரை மண் உறிஞ்சாத நிலை ஏற்படுகிறது.
சிங்கப்பூர், மலேசியா, கொரியா போன்ற பல நாடுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. குப்பைகளை எங்குமே பார்க்க முடியாது. ஆனால், நம் நாட்டிலோ குளம், குட்டை, ஆறு, நீர்த்தேக்கங்களில் கழிவுகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. நம் ஊரில் அவசரத்துக்கு டிரான்ஸ்பார்மர்களும் கூட ஒதுங்குமிடமாகிவிட்டது வேதனை தரும் விஷயம்.
எனவே, இதைத் தவிர்ப்பதில் ஒவ்வொருவருமே அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக, வீட்டில் உள்ள குப்பைகளை உரமாக மாற்ற சிறிய கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தலாம். பாலிதீன் கவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் ஏட்டளவில்தான் உள்ளது. அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. குமரி மாவட்டம் மட்டும் முன்னோடியாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.
பொதுவாக, சில கடைகளில் மட்டுமே காகிதத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் பல கடைகளில் பாலிதீன் கவர்களின் உபயோகம் காணப்படுகிறது. இதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும். புகை பிடிப்போருக்கு அபராதம், நடவடிக்கை என சில காலம் பரபரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்புறம் பழைய மாதிரியாகி விட்டது. அதே நிலைதான் பாலிதீன் தடுப்பு நடவடிக்கையிலும் காணப்படுகிறது. எனவே மாற்றம் என்பது மக்கள் மனதில் தானாக ஏற்பட வேண்டும்.
கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இலைகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதில் மண் பானைகளைப் பயன்படுத்தலாம். வீடுகளில் உள்ள குப்பைகளைத் தோட்டங்களில் உரமாகப் பயன்படுத்தலாம்.
இதுபோல அலுவலகம், ஹோட்டல் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருமே ஒன்றிணைந்து செயல்பட்டால் குப்பைகளை அறவே இல்லாது அகற்றலாம். சுகாதாரக்கேட்டையும் தவிர்க்கலாம்.
மேலும், தொண்டு நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், சுயஉதவிக் குழுவினர், பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் குப்பைகளை அகற்றுவதைச் சேவையாகச் செய்யலாம்.
சாலைப் பாதுகாப்பு வாரம், சுகாதார வாரம் என்பதைப் போல குப்பை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கலாம். நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றலாம்.
இது தவிர, அரசு மகளிர் குழுக்களைப் பயன்படுத்தி குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகியவற்றைச் செம்மையாகச் செயல்படுத்தலாம்.
இந்த விஷயத்தில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் குப்பை இல்லா நல்லுலகு தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது. மனது வைப்பார்களா?

>ஒலி மாசுவின் விஸ்வரூபம்

>

வாழ்வதற்கு ஏற்ற நல்ல சூழல் என்பது, நல்ல காற்று, குடிநீர், இருப்பிடம் ஆகியவற்றோடு முடிந்துவிடுவதில்லை. அமைதியும் முக்கியம். ஓசை என்பது ஓசையாகவே இருக்க வேண்டும்; அது ஒலியாக மாறி நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது.
மாசு நிறைந்த நீர், நிலம், காற்று ஆகியவற்றால் உடல் ஆரோக்கியம் எப்படிப் பாதிக்கப்படுகிறதோ அதற்கு இணையாக ஒலி மாசு உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணராவிடில் உடல் உறுப்புகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
ஒலியற்ற வாழ்வை நம்மால் கற்பனை செய்ய முடியாது. அதே நேரத்தில், ஒருவருக்கு விருப்பமான ஒலி மற்றவருக்கு விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். இதில், சப்தம், ஓசை, இரைச்சல், கூச்சல், உருமல் ஆகிய விதங்களில் வெளிப்படும் ஒலிகளில் எது மனித உடலையும் உள்ளத்தையும் பாதிப்படையச் செய்கிறதோ அது ஒலி மாசாகக் கருதப்படுகிறது.
ஆனால், பெரும்பாலானோர் சப்தம் நம்மை என்ன செய்துவிடும் என்றே கருதுகின்றனர், அதிலும் இளைஞர்களின் விருப்பம் இவ்விஷயத்தில் மோசமாக உள்ளது.
அதிக ஒலியே இன்பம் தரும் என்ற தவறான எண்ணத்தால் மின்னணு ஒலியால் கவரப்பட்டு அதில் மயங்கிக் கிடக்கின்றனர் இன்றைய இளைஞர்கள்.
ஆனால், ஒலி என்பது அமைதியாகக் கொல்லும் தன்மையுடையது என்பதை அவர்கள் உணரவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளை நம் செவி ஏற்றுக்கொண்ட பின்னர், அதை நாம் புரிந்து செயல்பட மூளை துணை புரிகிறது.
அதேநேரத்தில் செவியால் குறிப்பிட்ட அளவுக்கு மேலான அதிர்வுகளைத் தாங்க முடியாது. அதாவது, 20 ஆயிரம் அதிர்வுகளுக்கு மேல் செவியால் கேட்க முடியாது, 120 டெசிபல் வரையிலான ஒலி அழுத்தங்களை மட்டுமே நன்றாகக் கேட்க முடியும். இதன் அளவு அதிகரித்தால் செவிகள் பாதிக்கப்படும்.
ஆனால், நமது கிராமங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியானாலும் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலியுடன் அதிக நேரம் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம்.
இதை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தால், அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் இந்த ஒலி அளவை மீறியே பிறரிடம் பேசும் சூழலில், அவர்களது செவித்திறன் பாதிக்கப்படும்.
மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள் ஆகியவை ஒலி மாசினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.
ஒலி மாசைக் கட்டுப்படுத்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது செவித்திறனின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு இயக்கத்தின்போதும் வெளியாகும் ஒலியின் அளவு, அதன் தீவிரம் குறித்து வகுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் உலகில் 5 சதவீத சிறுவர்கள் (10 வயதுக்கு உள்பட்டோர்) ஒலி மாசு காரணமாக, கேட்புத் திறனை இழந்துள்ளதாகவும் 85 டெசிபல் இரைச்சல் சூழலில் பணியாற்றிய பலரும், காது இரைச்சல், தலைவலி, அயர்ச்சி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்டோமொபைல் தொழிலகங்களில் பணிபுரிவோரில் நான்கில் ஒரு பங்கினர் கேட்கும் சக்தியை இழக்கத் தூண்டும் இரைச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கிறது.
மேலும், 90 டெசிபலுக்கு மிகையான இரைச்சல் சூழலில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு செவிப்புல அயர்ச்சி ஏற்படுகிறது. நம் நாட்டில் சென்னை, கொல்கத்தா, தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள சாலையோர பழ வியாபாரிகள், ஓட்டுநர்களில் 40 சதவிகிதத்தினர் காது இரைச்சல் பற்றி முறையிட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் ஒலி மாசினால் 10 சதவிகிதத்தினர் செவித்திறனை இழப்பதாகவும், ஏறத்தாழ 8 கோடி மக்கள் ஒலி மாசினால் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், 1000 பேருக்கு 35 பேர் எனும் விகிதத்தில் காது இரைச்சல் நோயால் பாதிப்படைவதாகவும் நம் நாட்டில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 10 சதவிகிதத்தினரும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 7 சதவிகிதத்தினரும் கேட்கும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிக ஒலி ஒரு மனிதனை நிம்மதியாக உறங்கவிடுவதில்லை. குறைவான ஒலியும் மூளையின் முக்கிய மையங்களைப் பாதித்து இயல்பான உறக்கத்தைக் குலைத்துவிடுகிறது.
நரம்புத்தளர்ச்சி மற்றும் இதய நோய் உள்ளவர்கள் அதிக ஒலியையோ, எதிர்பாராத சப்தத்தையோ கேட்க நேரிட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர். இரைச்சல் தொடர்ந்தால் அதுவே மனிதனின் இறப்புக்கு வழிகோலும். எனவே, இரைச்சலைக் கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆனால், இன்றைய சூழல் எப்படி இருக்கிறது என்பதை நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்தால் புரிந்துவிடும். தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திலிருந்து துக்க நிகழ்ச்சிகள் வரை தொடரும் பட்டாசு சப்தம் நம் காதுகளைப் பதம் பார்க்கிறது.
கனரக வாகனங்கள், பஸ்களில் பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை போதாது என்று இரு சக்கர வாகனங்களிலும் தங்கள் பங்குக்கு பலவகை வினோத ஒலி எழுப்பும் மின்னணு ஒலிப்பான்களைப் பொருத்தி, பாதசாரிகளை மிரட்டி வருகின்றனர் வாகன ஓட்டிகள்.
இதைக் கண்காணித்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
2000-வது ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒலி மாசுக் கட்டுப்பாடு சட்டத்தைத் திருத்தி விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும்.
மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவித குறுக்கீடுகளோ, இடையூறுகளோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒலி மாசால் மனிதனுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இயற்கை நமக்கு அளித்துள்ள சிறந்த ஒலி மாசுத் தடுப்பு சாதனமாகத் திகழும் மரங்களை சாலையோரங்களில் பெருமளவில் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இப்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒலி மாசு என்னும் அரக்கனை அழிக்க வேண்டும்.

>மாசற்ற வாழ்வே மகத்தான வாழ்வு

>

தொழில் வளர்ச்சி என்பது நாட்டின் பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கை தரத்தையும் வெகுவாக உயர்த்துவதாக இருந்தாலும், அதனால், வெளியேற்றப்படும் மாசடைந்த கழிவுநீர், காற்று மற்றும் திடக்கழிவுகள், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களை பாதிப்பதாக இருக்கக் கூடாது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், இந்தியா தொழில் வளர்ச்சியில் அடியெடுத்து வைத்த போது, மிகக்குறைவான தொழிற்சாலைகளே இருந்தன. அவைகளால் வெளியேற்றப்பட்ட, திரவ, திட, வாயுக்கழிவுகள், எந்த சுத்திகரிப்புகளும் இல்லாமல் வெளியேற்றப்பட்டாலும், ஆரம்ப காலங்களில் சுற்றுப்புற சூழலை, வெகுவாக பாதிக்கவில்லை. காரணம், மாசற்று இருந்த சூழலில், மாசடைந்த பொருட்களின் விகிதாச்சாரம் மிக குறைந்த அளவே இருந்தது.அசுர வேகத்தில் தொழில் வளர்ச்சிடையும் போது, சுற்றுச்சூழல் மாசடைவதில் இருந்து தப்பிக்காத நாடே கிடையாது.
மெல்ல சாகடிக்கும் கழிவுநீர்: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் அதிக பாதிப்புக்கு உள்ளானது வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள். அதற்கு அடுத்த படியாக பின்னாலடை, ஆயத்த ஆடை, வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை, சேலம் மாவட் டங்களில் உள்ள சாய, சலவை பட்டறைகள், ஈரோட்டைச் சுற்றியுள்ள தோல் பட்டறைகள். ஆரம்ப காலங்களில் விவசாய கிணறுகளின் நீராதாரத்தை வைத்து தொட்டிகளில் நீரை தேக்கி பல கெமிக்கல்களை கலந்து சலவை பட்டறை மற்றும் சாயப் பட்டறைகள் செயல்பட்டு வந்தன. இவைகளின் கழிவுநீர் நேரடியாக அருகில் உள்ள ஓடைகளில் வெளியேற்றப்பட்டாலும், அப்போது ஓடைகளிலும், நொய்யல், பவானி, காவிரி ஆறுகளிலும் அதிகளவில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததாலும், நிலத்தடி நீர் அதிகமாக இருந்ததாலும், கழிவுநீர் கலப்பதால் ஏற்பட்ட பாதிப்புகளை யாரும் உணரவில்லை. தங்கள் தேசத்தில் உள்ள நிலம், நீர், காற்று பாதிக்கப்பட்டு, மக்களின் தரமான வாழ்க்கைக்கு கேடு வரக்கூடாது என்ற நோக்கில் நமது நாட்டிற்கு அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகளை கொடுப்பதில் ஐரோப்பிய நாடுகள் முனைப்பாக இருந்தன.
கடந்த 20 ஆண்டுகளில் 500 கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகத்தில் இருந்து இன்று 15 ஆயிரம் கோடி ரூபாயை எட்டி, கொங்கு மண்டலம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இது, நமக்கு பெருமையாக இருந்தாலும், இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர், நொய்யல், பவானி, காவிரி ஆறுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மீட்க முடியாத அளவு கெட்டுப் போய் சீரழிந்துள்ளன. இன்று இது ஒரு மிகப்பெரிய பிரச்னையாக சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளது. சுற்றுப்புற சூழல் மாசுபடுவதால் ஏற்படும் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, அதை ஒரு கொலை குற்றமாக வெளிநாட்டவர்கள் பார்க்கும் அதே நேரத்தில், “மாசு இருந்தால் என்ன; நமக்கு வேண்டியது காசு தான்’ என்று நாம் இருப்பது, எதிர்கால சந்ததிக்கு பெரிய சவாலாக உள்ளது.
நமது மக்கள், மாசுபடுவதை அன்றாடம் பார்த்து பார்த்து, உணர்ச்சியற்ற ஜடமாய் மாசோடு மாசாக, தங்கள் உடம்பை மாசுபடுத்தி இன்று கொடிய வியாதிகளான கேன்சர் முதல் கிட்னி பழுதாவது வரை பாதிக்கப்படுகின்றனர். நாளும் பலர் செத்துக்கொண்டிருப் பதை தலையெழுத்து என நினைத்து, சர்வசாதாரணமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த கொடுமைக்கு காரணம், சாயசலவைக்கும், தோல் பதனிடுவதற்கும், உபயோகப்படும் சில மில்லி கிராம் வேதிய பொருட்கள், அவர்கள் குடிக்கும் குடிநீரிலும், குளிக்கும் நீரிலும், கலப்பதால் தான். நொய்யல், பவானி, காவிரி நதிகளின் இரு மருங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் இந்த கழிவுநீர் வேதிகள் கலப்பதால், அந்த மண் மலடாகி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் அழிந்துவிட்டது. மனிதர்களும், மாடுகளும் மலடாகி கொண்டிருப்பதற்கு சான்று, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாநகரங்களிலே துரிதமாக முளைத்துக் கொண்டிருக்கும் செயற்கை கருவூட்டல் மருத்துவமனைகளும், தோல் சிறப்பு மருத்துவமனைகளும்.
இறந்த நிலத்தையும், ஆறுகளையும் மீட்போம்: கழிவுநீர் வேதிகளால் மாசடைந்து சீரழிந்து போன நிலத்தையும், நிலத்தடிநீரையும் மீண்டும் பழைய நிலைக்கு மீட்பதற்கு இன்னும் 10 ஆண்டுகள் மழை நீரை நிலத்தில் இறக்கினால் மட்டுமே முடியும். ஜப்பானில் இருந்து வந்த நிபுணர் குழுவின் அறிக்கைபடி, இறந்துவிட்ட நொய்யல் நதிக்கு மறுவாழ்வு கொடுக்க நிச்சயம் முடியும். ஆனால், ஆலை அதிபர்களும், அரசும், பொதுமக்களும் ஒருங்கிணைந்து விழிப்புணர்வோடு மேலும் மாசடைவதை முழுவதுமாக, (நகராட்சி, மாநகராட்சி கழிவுகள் உட்பட) நிறுத்த வேண்டும்.
தொடர்ந்து மழைநீரை அரை கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டி தேக்கி வைக்க வேண்டும். மாசற்ற சூழலை ஏற்படுத்த தீர்வு உள்ளது. எப்படி அடைவது என்று தெரியாமல் இல்லை. தீர்வை அடைவதில் உறுதியாக யாரும் இல்லை என்பது தான் உண்மை. பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தை பெற அவர்களின் கெடுபிடியால், “குழந்தைத் தொழிலாளர்கள் இங்கு இல்லை’ என்று, தங்களின் வாசலில் எழுதி மார்தட்டும் ஏற்றுமதி நிறுவனங்கள், “சாயக்கழிவுநீர் இங்கு முழுமையாக சுத்திகரிக்கப்படுகிறது’ என, ஏன் எழுதிபோடக்கூடாது. லாபத்தை பெருக்க, உற்பத்தியையும், தரத்தையும் உயர்த்த, உலகின் எந்த மூலையில் இருந்தும் நவீன தொழில் யுக்திகளையும், இயந்திரங்களையும் வரவழைக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள், சாயக்கழிவுநீரை முறையாக சுத்திகரித்து மேலாண்மை செய்ய முடியாதா?
லாப இலக்கை அடைவதற்காக சிறுசாயப் பட்டறைகளுக்கு வேலையை கொடுக்கும் இவர்களுக்கும் மாசற்ற சூழலை ஏற்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது. பல்லாயிரம் கோடி அன்னிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டித்தரும் இந்த ஜவுளித் தொழிலால், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலும், அரசு இந்த தொழிலை காப்பாற்ற தவறிவிட்டது. சமுதாய அழிவை பார்த்துக் கொண்டு கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கான படித்தவர்கள், மருத்துவர்கள், சமுதாய ஆவலர்கள், பொதுநல சங்கங்கள், மனித உரிமை கழகங்கள் இருந்தும், மக்களை, தெளிவான விழிப்புணர்வு சென்று அடையாதது இப்பகுதி மக்கள் மாசால் மரத்து விட்டனரா என ஆச்சரியப்பட வைக்கிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பாழ்பட்டு வாழ வழி தெரியாமல் தவிக்கும் பச்சை துண்டு விவசாயி என்ன செய்து விட முடியும் என, 10 ஆண்டுகளாக அவர்களை, சுப்ரீம் கோர்ட் வரை அலையவிட்டனர்.
இன்று சுப்ரீம் கோர்ட், விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. ஆலை அதிபர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இருந்தாலும், இறுதிக்கட்டத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளை இயக்குவதன் மூலமும், அங்கீகரிக்கப்படாத சிறு, குறு சாயப்பட்டறைகளை முற்றிலும் அகற்றுவதன் மூலமும் இவர்கள் லாபம் அதிகரிக்கும். நிரந்தரமான தீர்வும் கிடைக்கும்.
பிரச்னைகளை தற்காலிகமாக சமாளிக்க மாற்றுவழிகளை தேடாமல், முழு சுத்திகரிப்பை ஆலை அதிபர்கள் செயல்படுத்துவது, அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய முன்வருவது, மீறி கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளை பொதுமக்கள் கண்காணிப்பது என அனைத்து தரப்பினரும் சமுதாய பொறுப்புணர்வோடு செயலாற்ற வேண்டும். மண் வளம் காத்து, நீர் வளம் காத்து மாசற்ற காற்றை விட்டு சென்றாலே போதும், எதிர்கால சந்ததிகள் வாழ்ந்து காட்டுவர். நாம் வைத்து விட்டு போகும் பணத்தாலோ, சொத்தாலோ வளமான தரமான வாழ்க்கை அவர்களுக்கு கிடைக்காது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.