Category Archives: NOBEL PRIZE

நோபல் வாங்கித்தந்த ‘கடவுள்’ துகளுக்கு நன்றி!

அனைவருக்கும் அறிமுகமாகிவிட்ட ‘கடவுள் துகள்’ இப்போது நோபல் பரிசைக்கூட பெற்றுத்தரக்கூடிய ‘அதிர்ஷ்டக்கார’த் துகளாகிவிட்டது. ‘பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்துள்ள எண்ணற்ற துகள்களின் நிறை, பன்மைத்தன்மை போன்றவற்றுக்குக் காரணம், கண்ணுக்குத் தெரியாத பெருங்கடலான ஆற்றல் எங்கும் நிறைந்திருப்பதுதான்’ என்று கூறிய இரு இயற்பியலாளர்களுக்குத்தான் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு.
ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் டபிள்யு. ஹிக்ஸ் (84), பெல்ஜியத்தில் உள்ள லிபர் டி பிரஸெல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஃபிரான்ஸ்வா ஆங்லெர் (80) ஆகியோர் நோபல் பரிசு பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பரிசுத் தொகையான சுமார் ஏழரைக் கோடி ரூபாயை இவர்கள் சமமாகப் பகிர்ந்துகொள்வார்கள். நோபல் விருதும் விருதுத் தொகையும் ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்படும்.
‘ஹிக்ஸ் போஸான்’என்று இதைப் பற்றி முதலில் கூறிய ஹிக்ஸ் பெயரால் இந்தத் துகள் அழைக்கப்பட்டாலும் ஊடகங்களால் கடவுள் துகள் என்ற பெயர் பிரபலமாகிவிட்டது. கடவுள் துகள் குறித்த கருதுகோள் 1964-லேயே உருவாகிவிட்டது. ஆனால், ஒரு தலைமுறை விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து, கடந்த ஆண்டில் ஹிக்ஸ் போஸானைக் கண்டுடித்துவிட்டனர். சுவிட்சர்லாந்தில் உள்ள ‘செர்ன்’ஆய்வகத்தில் துகள் தாக்குவிப்பான்களில் கோடிக்கணக்கான முறை அணுத் துகள்களை மோதவிட்டுப் பார்த்ததில் ஒருவழியாகக் கடந்த ஆண்டு ஹிக்ஸ் போஸானின் இருப்பு உறுதிசெய்யப்பட்டது.
அணுவின் அமைப்பைப் பற்றி ‘செர்ன்’அறிவியலாளர்கள் உருவாக்கிய வடிவம்தான் படித்தர வடிவம் (Standard Model). இந்த ‘படித்தர வடிவம்’நம் பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களையும் அதற்கு ஆதாரமான விசைகளையும் (ஈர்ப்புவிசையைத் தவிர) அவற்றுக்கு இடையேயான தொடர்பையும் வரையறுத்தாலும் அது முழுமையடையத் தேவையான கடைசிக் கூறு இந்த ஹிக்ஸ் போஸான்தான். இந்தப் ‘படித்தர வடிவ’த்தைப் பொறுத்தவரை, பிரபஞ்சப் பாகுபோல் செயல்படும் ஆற்றலால் இந்தப் பிரபஞ்சமே நிரம்பியிருக்கிறது. அதன் ஊடாகச் செல்லும் துகள்களுக்கு அந்த ஆற்றல் நிறையைக் கொடுக்கிறது. இந்த ஆற்றல் புலம்தான் ‘ஹிக்ஸ் புலம்’. காந்தத்தைச் சுற்றி காந்தப்புலம் இருப்பதைப் போலத்தான் ஹிக்ஸ் போஸானைச் சார்ந்து ‘ஹிக்ஸ் புலம்’ விரவியிருக்கிறது. ஹிக்ஸ் புலம் இல்லையென்றால், எலெக்ட்ரான்கள் போன்ற அடிப்படைத் துகள்கள் ஒளிவேகத்தில் சென்று ஒன்றையொன்று இறுக்கிக்கொள்ளும். அப்புறம் அணுக்களும் இருக்காது, நாமும் இருக்க மாட்டோம்.
இந்தப் பிரபஞ்சமானது துல்லியமான, எளிமையான, எழில்மிகு இயற்கை விதிகளுக்கு உள்பட்டு இயங்குகிறது என்பதை ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறது என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த எழிலில் காணப்படும் குறைகளும் இடைவெளிகளும்தான் எல்லாவற்றையும் (நாம் உட்பட) விநோதமானவையாகத் தோன்றச் செய்கின்றன. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, அறிவியல் அறிஞர்கள் தங்களுடைய ஆற்றலைப் போருக்குத் தேவைப்படும் அழிவுக் கருவிகளைத் தயாரிப்பதிலிருந்து திசைதிருப்பி இயற்கையை ஆராயத் தலைப்பட்டதால்தான் மேற்குறிப்பிட்ட பார்வை உருவாகியது. பேரண்டத்தை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்ட அவர்களின் ஆய்வின் விளைவுதான் ஹிக்ஸ் போஸான்.
ஹிக்ஸ் போஸான் என்பது இயற்கையின் சீர்மையுடன் தொடர்புடையது. எல்லாவற்றிலும் இயற்கை ஒரு சீர்மையையும் ஒழுங்கான அமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. பிரபஞ்சத்தின் அடிப்படை விசைகள் யாவுமே, இயற்கையானது எல்லாவற்றிலும் சீர்மையையும் ஒழுங்கையும் ஏற்படுத்த முயல்வதால்தான் என்று 1954-ல் ஆராய்ச்சியாளர்கள் சென் நிங் யாங், ராபர்ட் எல். மில்ஸ் என்போர் அறிவித்தனர். அவர்கள் புரூக்ஹேவன் தேசிய ஆய்வகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாகவும் விளைவாகவும் ஹிக்ஸ் போஸானின் கண்டுபிடிப்பைக் கருதலாம்.
1964-ல் மூன்று வெவ்வேறு இயற்பியல் அறிஞர்கள் ஹிக்ஸ் துகள் குறித்து வெவ்வேறு இடங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால், இது குறித்து முதலில் பதிப்பித்தவர்கள் டாக்டர் ஆங்லெரும் அவருடைய சகா ராபர்ட் பிரௌட்டும்தான். ராபர்ட் பிரௌட் 2011-ல் இறந்துவிட்டார். ஆராய்ச்சியில் அவருக்கும் பெரும் பங்கு உண்டு என்றாலும், இறந்தவர்களுக்கு விருது தருவது மரபு இல்லை என்பதால், அவருக்கு விருது தர மாட்டாது.
டாக்டர் ஆங்லெர் பெல்ஜியம் நாட்டின் எட்டர்பீக் நகரில் 1932-ல் பிறந்தார். பொறியியல், இயற்பியல் படித்தார். 1959-ல் பிரஸெல்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டபோது டாக்டர் பிரௌட்டுடன் சேர்ந்துகொண்டார். ஆங்லெர் பெல்ஜியத்துக்குத் திரும்பியபோது டாக்டர் பிரௌட் அவருடன் சென்றார். இருவரும் இந்தக் கோட்பாடு குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தபோதுதான் இங்கிலாந்து நாட்டின் நியூகேசலைச் சேர்ந்த டாக்டர் ஹிக்ஸ் என்ற இளைஞரும் இந்தத் துகள் குறித்துத் தன்னுடைய பாணியில் ஆய்வுகளை மேற்கொண்டுவந்தார்.
ஹிக்ஸ் அனுப்பிய ஆய்வறிக்கையை செர்னில் உள்ள ‘பிசிக்ஸ் லெட்டர்ஸ்’ பிரசுரிக்க ஏற்க மறுத்தது. அந்த அறிக்கையை அவரே திருத்தி அதன் போட்டியாளரான ‘பிசிகல் ரெவ்யூ லெட்டர்ஸ்’ நிறுவனத்துக்கு அனுப்பினார். அந்த அறிக்கையின் கடைசிப் பகுதியில் அடிக்குறிப்பாக, புதிய துகள் குறித்தது இந்த ஆய்வு என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதுதான் ஹிக்ஸ் போஸான் என்று இப்போது உலகப் புகழ் பெற்றுவிட்ட கடவுள் துகள். டாக்டர் ஆங்லெர், பிரௌட் ஆகியோரின் ஆய்வுகளையும் குறிப்பிட்டே தீர வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அந்த ஆய்வுக் கட்டுரை பிரசுரிக்க ஏற்கப்பட்டது.
இதனிடையே லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாம் கிப்பிள், ரோசஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்ல் ஹேஜன், பிரௌன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெரால்ட் குரால்நிக் என்ற மூன்று இயற்பியலாளர்கள் தங்களுடைய ஆய்வுகளை அறிக்கையாகத் தயாரித்துவந்தனர். அவர்கள் அதைப் பிரசுரத்துக்காக அனுப்ப முற்பட்டபோது தபால்துறையினர் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். எனவே, ஹிக்ஸ், ஆங்லெர் –பிரௌட் ஜோடி தயாரித்த இரண்டு அறிக்கைகள் மட்டுமே பிரசுரத்துக்கு வந்தன. அதிலிருந்தே யார் முதலில் ஆய்வு செய்தது, யார் முதலில் கண்டுபிடித்தது என்று அவர்களுடைய நண்பர்கள், ஆதரவாளர்கள் வட்டத்தில் பெருத்த சர்ச்சை நடந்துகொண்டேயிருக்கிறது.
கடந்த ஆண்டு ஹிக்ஸ் போஸான் குறித்து ஜூலை 4-ம் தேதி இறுதியாக அறிவித்ததை அடுத்து சர்ச்சைகள் ஓய்ந்தன. அன்றுதான் ஹிக்ஸும் ஆங்லெரும் முதல்முறையாகச் சந்தித்துக்கொண்டனர்.
நோபல் விருது கிடைத்த செய்தியை நிருபர்கள் எங்க்லெர்ட்டிடம் கூறி வாழ்த்துத் தெரிவித்தனர். அவரும் நகைச்சுவையாக, ‘இது வருத்தத்துக்குரிய செய்தியல்ல என்றே நீங்களும் நினைத்திருப்பீர்கள்’ என்றார்.
சுவீடன் நாட்டு ராயல் அறிவியல் அகாதெமி நிர்வாகிகளால் ஹிக்ஸைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. “வரும் செவ்வாய்க்கிழமை நான் ஊரிலேயே இருக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டுத்தான் எங்கோ போனாராம். இயற்பியலில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக இருந்தாலும் கைபேசியையும் கணினியையும் அவர் பயன்படுத்தவே மாட்டாராம் என்கிறார் அவருடைய நண்பரும் மற்றொரு இயற்பியல் அறிஞருமான ஆலன் வாக்கர்.
ஹிக்ஸ் மிகவும் எளிமையானவர். அவர் ஆய்வுக்கு வருவதும் ஆய்வுக்கூடத்தைவிட்டுப் போவதும் யாருக்கும் தெரியாது. அவருக்கு விருது கிடைக்கும் என்று மோப்பம் பிடித்து, பேட்டி வாங்கிவிட ஒரு நிருபர் எப்படியோ அவருடைய வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். ஒரு ஈயைப் பிடித்து அவருடைய காதில் போட்டு வெளியே அனுப்பிவிட்டாராம் ஹிக்ஸ். ஆனால், எடின்பர்க் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். அடிப்படை அறிவியலுக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் இது போன்ற நுண் ஆராய்ச்சிகளுக்குள்ள முக்கியத்துவத்தை மக்களிடையே உணர்த்தும் என்று நம்புகிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஹிக்ஸ் துகள் குறித்த ஆய்வை ஆயிரக் கணக்கான அணுத்துகள் இயற்பியலாளர்கள் செர்ன் நகரில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் ஆண்டுக் கணக்காக மேற்கொண்டுவந்தனர். 2012 ஜூலை 4-ம் தேதி இறுதியாக ஹிக்ஸின் கண்டுபிடிப்பை உறுதிசெய்தனர். இந்தக் கண்டுபிடிப்புக்கான நோபல் விருதின் பெருமையில் செர்ன் இயற்பியலாளர்களுக்கும் பங்கு இருக்கிறது. செர்ன் கூடத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பல குழுக்களில் ஒன்றின் தலைவரான பேபியோலா கியானட்டி என்பவர், இது மிகவும் பெருமிதத்தையும் திருப்தியையும் தந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
(எங்கும் நிறை பரப்பிரம்மம், யாதுமாகி நின்றது, எங்கெங்கு காணினும் சக்தி என்றெல்லாம் வெவ்வேறு மகனீயர்களால் கூறப்பட்ட வாசகங்கள் அனைத்தும் இந்தத் துகளுக்குப் பொருந்துகிறது. அதனாலேயே இதைக் கடவுள் துகள் என்று பெயரிட்டுவிடவில்லை. இந்தக் கூத்தைச் செய்தது லியோன் லெடர்மேன் என்பவர். பெர்மிலேப் என்பதன் முன்னாள் இயக்குநர். டிக் தெரசி என்பவருடன் சேர்ந்து இந்தத் துகள் குறித்து அவர் புத்தகம் எழுதினார். “இதுவென்ன சனீஸ்வரன் துகள்” என்பதுபோல் எழுதவந்து, வார்த்தைச் சிக்கனம் கருதி – “ஈஸ்வரன் துகள்” என்பதுபோல எழுதிவிட்டார். அதாவது, “கடவுள் படைத்த கண்றாவி துகள்” என்று எழுதப் புகுந்து “கடவுள் துகள்” என்று கைதவறி எழுதி, திருத்தச் சோம்பல்பட்டு அப்படியே அச்சாகியதுதான் இந்தப் பட்டப்பெயர். பத்திரிகையாளர்கள் எப்போதுமே நல்லதை விட்டுவிட்டு, பஞ்ச் வசனங்களையே தேடுகிறவர்கள் என்பதால், இந்தப் பெயரே அவர்களுக்குப் பிடித்துவிட, கடவுள் துகள் என்ற பெயர் நிலைத்துவிட்டது.)