Category Archives: IMPORTANT DAYS

>ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

>

“ஆசிரியர்களிடம் மாணவர்கள் படிக்கிறார்கள்
ஆசிரியர்கள் மாணவர்களைப் படிக்கிறார்கள்“
“பெற்றோர்கள் குழந்தைகளை மட்டுமே உலகத்துக்குத் தருகி்ன்றனர்.
ஆனால் குருவோ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார்.“
  ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இவர்….
(செப்டம்பர் மாதம் 5,ஆம் தேதி 1888ஆண்டில் – பிறந்தார்) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.
திருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர். இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் 42 டாக்டர் பட்டங்களைப் பெற்றவராவார். ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
   ஒரு ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தம்பணியை நேசித்து அர்பணிப்பு உணர்வுடன் வாழ்ந்துகாட்டிய டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களை இவ்வேளையில் ஒப்புநோக்கி தம் பணியை சீர்தூக்கிப்ப பார்ப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.
  தமது வாழ்க்கையை வடிவமைத்த, வடிவமைக்கும் ஆசிரியர்களை நன்றியுடன் எண்ணிப்பார்ப்பது மாணாக்கர்களின் கடமையாகும்.
அ – அம்மா
ஆ – ஆசான்
இ – இனிமை
ஈ – ஈகை
உ – உண்மை
ஊ – ஊக்கம்
எ – எளிமை
ஏ – ஏக்கம்
ஐ – ஐயம்
ஒ – ஒழுக்கம்
ஓ – ஓம் என்னும் பிரணவ மந்திரம்
ஃ – அஃதோடு இல்லாமல் தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்க்கு சொல்லிக் கொடுப்பதிலே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அனைத்து ஆசான்களுக்கும்  என் வாழ்த்துக்கள்………

>உலக புகையிலை எதிர்ப்பு தினம்

>

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். போர்ச்சுகீசிய நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் மூலம் 16 ம் நூற்றாண்டுகளில் புகையிலை இந்தியாவுக்கு அறிமுகம் ஆனது. தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2020ல் 16 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள், நன்மைகள் குறித்து மதுரை மனநல டாக்டர் சி. ராமசுப்பிரமணியன், டாக்டர் ரத்தினவேல், உளவியல் நிபுணர் ரவிச்சந்திரன், பேராசிரியர் கண்ணன் கூறியதாவது :புகையிலையால், நுரையீரல், கண் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கும். புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்றவற்றை வாங்க தினமும் 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. தோலின் தன்மைமாறி, சுருக்கங்கள் ஏற்பட்டு, எண்ணெய் பசை குறைந்து, இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போல் இருக்கும். எப்போதும் வாய் நாற்றம், இருமல் இருக்கும். பற்கள் மஞ்சளாகவும், கை விரல்கள் கறுப்பாகவும், ரத்தசோகை பிடித்தது போல் இருக்கும்.
புகையை கைவிடுவது எளிது : புகைப்பதை ஏன் விட்டுவிட வேண்டும் என்று பட்டியல் தயார் செய்ய வேண்டும். நன்மைகளை கைப்பட எழுதி வைத்திருக்க வேண்டும். எப்போது, ஏன், யாருடன், எந்த சூழலில் புகைபிடிக்கிறோம் என அட்டவணை தயார் செய்ய வேண்டும். லைட்டர், தீப்பெட்டி, ஆஷ்டிரே, மீதமுள்ள சிகரெட்டை, காலி பாக்ஸ்களை வீட்டிற்கு வெளியே போட்டு விட வேண்டும். வீட்டை நறுமண பினாயில் போட்டு சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். நெருக்கமான உறவினர்கள், நண்பர்களிடம் எந்த தேதியிலிருந்து புகைபிடிப்பதை விட்டுவிட போகிறீர்கள் என தெரிவிக்க வேண்டும். பின் சொன்னதை செய்ய வேண்டும்.
புகைப்பதை விட்டுவிட்டால் ஏற்படும் நன்மைகள் : ரத்தஅழுத்தம், நாடித்துடிப்பும் சாதாரண நிலைக்கு வரும். கை, காலில் அபரிமிதமான சூடு உஷ்ணம் குறையும். உடலில் தீங்கு விளைவிக்கும் கார்பன் மோனாக்ஸைடு குறையும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். நாக்கில் சரியான ருசி தெரியவரும். மாரடைப்பு வாய்ப்பு குறையும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. இருவாரங்களுக்கு பின், ரத்தம் ஓட்டம் சீராக இருக்கும். நடக்கவே சிரமப்பட்டவர்கள், நுரையீரல் விரிவடைந்து பிராண வாய்வு அதிகமாக சென்றுவிடுவதினால் மிக வேகமாக நடக்கவும், ஓடவும் முடியும்.
ஒன்பது மாதங்களுக்கு பின், இருமல், மூக்கடைப்பு குறைந்து சளி வருவது நிற்கும். ஓராண்டிற்கு பின், மாரடைப்பு வருவது பாதியாக குறையும். ஐந்து ஆண்டுகளுக்கு பின், பக்கவாதம், மாரடைப்பு, ரத்தஅழுத்தத்தினால் மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவற்றிலிருந்து விடுதலை ஏற்படும்.பத்தாண்டுகளுக்கு பின், புற்றுநோயால் இறப்பது பாதியாக குறையும். பதினைந்து ஆண்டுகளுக்கு பின், புகைப்பதை நிச்சயம் விட்டுவிட முடியும் என்று உறுதியாக நம்பி, மற்றவர்களையும் இதைப்போல நடந்துகொள்ளும் வகையில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

>அறி​வுப் புரட்​சிக்கு அடித்​த​ளம்

>

இங்​கி​லாந்​திலே பிறந்து வளர்ந்​த​வர் தாமஸ் பெயின்.​ பன்​னி​ரெண்​டாம் வயது வரை மட்​டுமே பள்​ளிக்​கூ​டத்​துக்​குச் சென்று படிக்​கிற வாய்ப்​பைப் பெற்ற பெயின்,​​ இள​மை​யி​லேயே வறு​மை​யின் கோரப்​பி​டி​யில் உழன்​றார்.​ ஒரே வேலை​யில் நிலைத்து நிற்க முடி​யாத சூழ​லி​லும்,​​ குடும்ப நிலைமை கார​ண​மாக வெவ்​வேறு வேலை​க​ளை​யும் செய்து பார்த்​தார்.​

க​லால் அலு​வ​ல​கத்​தில் பணி​செய்த போது அங்​குள்​ள​வர்​க​ளைத் திரட்டி உரி​மைக் குரல் எழுப்​பி​ய​தால் உயர் அதி​கா​ரி​க​ளால் அவ்​வே​லையி​லி​ருந்து விரட்​டப்​பட்​டார் பெயின்.​ வறு​மை​யின் உச்​சத்​தில் வாடிய அக்​கால கட்​டத்​தில்​தான்,​​ பின்​னர் உல​கப் புகழ்​பெற்​ற​வ​ராக விளங்​கிய பெஞ்​ச​மின் பிராங்​கி​ளி​னைச் சந்​தித்​தார்.​ பெஞ்​ச​மின் பிராங்​கி​ளின் அப்​போது இங்​கி​லாந்து காலனி நாடு​க​ளின் கமி​ஷ​ன​ரா​கப் பணி​யாற்​றிக் கொண்​டி​ருந்​தார்.

பெ​யி​னின் பிரச்​னை​யைப் பரி​வு​டன் கேட்​ட​றிந்த பிராங்​கி​ளின்,​​ பெயி​னுக்​குள் உறங்​கிக்​கொண்​டி​ருந்த உள்​ளொ​ளியை ஓர​ளவு புரிந்​து​கொண்ட நிலை​யில் அவ​ருக்கு ஒரு பரிந்​து​ரைக் கடி​தத்​தைக் கொடுத்து அமெ​ரிக்​கா​வில் அப்​போது வசித்​து​வந்த தனது மரு​ம​க​னி​டம் அனுப்​பி​னார்.​ 1977-ம் ஆண்டு தனது முப்​பத்​தே​ழா​வது வய​தில் பெயின் அமெ​ரிக்​கா​வில் உள்ள ஃபி​டெல்​பியா நக​ருக்​குச் சென்​றார்.​

“பென்​ஸில்​வே​னியா மேக​ஸின்’ என்ற இத​ழின் ஆசி​ரி​யர் பொறுப்பு நம்​பிக்​கை​யு​டன் பெயி​னுக்கு அளிக்​கப்​பட்​டது.​ கறுப்பு இன நீக்ரோ மக்​க​ளுக்கு அமெ​ரிக்​கா​வில் இழைக்​கப்​பட்ட கொடு​மை​கள் குறித்து ஒரு கட்​டுரை எழு​தி​னார்.​ இக்​கட்​டுரை வெளி​வந்து ஐந்து வாரங்​க​ளில் அமெ​ரிக்​கா​வில் முதன் முத​லாக “அடிமை எதிர்ப்​புச் சங்​கம்’ உரு​வா​னது.​ச​மூ​கக் கொடு​மை​கள் குறித்​தும், மக்​கள் படும் அவ​தி​கள் குறித்​தும் தொடர்ந்து கட்​டு​ரை​க​ளும் சிறு பிர​சு​ரங்​க​ளும் எழுதி வெளி​யிட்டு வந்​தார் தாமஸ்​பெ​யின்.​ இப்​பி​ர​சு​ரங்​க​ளுக்கு மக்​க​ளி​டத்​தில் அமோக வர​வேற்​புக் கிடைத்​த​தோடு,​​ படிப்​ப​டி​யாக விழிப்​பு​ணர்வு ஏற்​ப​டத் தொடங்​கி​யது.​

“இங்​கி​லாந்தி​லி​ருந்து அமெ​ரிக்கா பிரி​வது தவிர்க்க முடி​யாது’ என்ற கருத்தை அழுத்​தம் திருத்​த​மா​கத் தனது எழுத்​து​கள் மூலம் தொடர்ந்து வாதிட்டு வந்​தார் தாமஸ்​பெ​யின்.​ “இங்​கி​லாந்து’ எனும் தேசத்​துக்கு கீழ்ப்​ப​டிந்த அடிமை நாடாக எக்​கா​ர​ணம் கொண்​டும் அமெ​ரிக்கா நீடிக்​கக் கூடாது என்​ப​தற்கு அடுக்​க​டுக்​கான ஆதா​ரங்​களை அடிப்​ப​டை​யா​கக் கொண்டு “பகுத்​த​றிவு’ எனும் தலைப்​பில் ஒரு சிறு நூலை எழுதி வெளி​யிட்​டார்.​
​இங்​கி​லாந்​தில் பிறந்​தி​ருந்​தா​லும்,​​ பெயி​னுக்கு,​​ அமெ​ரிக்கா புகுந்த வீடாக விளங்​கி​னா​லும்,​​ இங்​கி​லாந்​தின் முடி​யாட்​சிக்கு எதி​ரா​கக் குடி​யாட்​சித் தத்​து​வத்தை வலி​யு​றுத்தி அவர் எழு​திய “பகுத்​த​றிவு’ நூல் அமெ​ரிக்​கர்​க​ளையே ஆச்​ச​ரி​யத்​தில் ஆழ்த்​தி​யது.​
1776-ம் ஆண்டு ஜன​வரி 10-ம் தேதி,​​ “பகுத்​த​றிவு’ நூல் வெளி​யி​டப்​பட்​டது.​ “ஓர் ஆங்​கி​லே​ய​ரால் எழு​தப்​பெற்​றது’ என்ற குறிப்​பு​டன் வெளி​யான இந்த நூல், வெளி​வந்த மூன்று மாதங்​க​ளில் 1,20,000 பிர​தி​கள் விற்​றுத் தீர்ந்​தன.​ வெகு விரை​வில் ஐந்து லட்​சம் பிர​தி​கள் எவ்​வித முயற்​சி​யும் எடுக்​கா​ம​லேயே விற்​ப​னை​யா​னது.​
​அன்​றி​ருந்த மக்​கள் தொகை​யைக் கணக்​கில் எடுத்​துப் பார்த்​தால்,​​ அமெ​ரிக்​கா​வில் அன்​றி​ருந்த பதி​மூன்று கால​னி​க​ளில் வாழ்ந்த எழு​தப்​ப​டிக்​கத் தெரிந்த அனை​வ​ரின் கையி​லும் இந்​தச் சிறு​நூல் இருந்​தி​ருக்க வேண்​டும் என்று கணிக்க முடி​கி​றது.​
சிங்​கம் அமர வேண்​டிய இடத்​தில் ஒரு கழுதை அமர நேரிட்டு மனித சமூ​கமே கேலி செய்​யும்​ப​டி​யான ஒரு நிலை​மையை அது அடிக்​கடி தோற்​று​வித்து விடு​கி​றது” என்று முடி​யாட்​சி​யால் ஏற்​ப​டக்​கூ​டிய கேடு​கள் குறித்து இந்நூ​லில் எரி​ம​லை​யாய் வெடித்​தி​ருக்​கி​றார் தாமஸ்​பெ​யின்.​ “”முட்​டாள்​கள்,​​ போக்​கி​ரி​கள்,​​ தகு​தி​யற்​ற​வர்​கள் ஏற்​றம் காண்​ப​தற்கு அது வழி​யைத் திறந்து விடு​கி​றது” என்று எழுத்​துச் சாட்டை கொண்டு விளா​சி​யுள்​ளார் பெயின்.​
தா​மஸ்​பெ​யி​னின் அர்த்​த​மும் அழுத்​த​மும் ஆவே​ச​மும் அடங்​கிய வாதங்​கள் நிறைந்த “பகுத்​த​றிவு’ எனும் துண்​டுப் பிர​சு​ரம் போன்ற வெறும் 47 பக்​கங்​களை மட்​டுமே உள்​ள​டக்​கிய இச்​சி​று​நூல் அமெ​ரிக்​கா​வில் ஒரு பெரும் அர​சி​யல் அதிர்​வ​லையை உரு​வாக்​கி​யது.​
“உட​ன​டி​யா​கப் பய​ன​ளித்து,​​ படர்ந்து,​​ செல்​வாக்​குள்​ள​தாக நீடித்து நிலைத்​து​விட்ட வேறு எந்த நூலை​யும் எந்த மனி​த​னும் இப்​படி எழு​தி​ய​தில்லை” என்று “பகுத்​த​றிவு’ நூல் குறித்து தனது கருத்தை “அமெ​ரிக்​கப் புரட்​சி​யின் வர​லாறு’ என்ற தனது நூலில் பதிவு செய்​துள்​ளார் ஜார்ஜ் டிரெவி​லி​யன்.​
தா​மஸ்​பெ​யி​னின் “பகுத்​த​றிவு’ நூல் வெளி​யான ஆறு மாதங்​க​ளுக்​குள் அமெ​ரிக்​கக் கண்​டத்து காங்​கி​ரஸ், ஃபி​ல​டெல்​பி​யா​வில் உள்ள அர​சாங்க மாளி​கை​யில் கூடி அமெ​ரிக்க ஐக்​கிய நாடு​க​ளின் ​ சுதந்​தி​ரத்​தைப் பிர​க​ட​னம் செய்​தது.​
இங்​கி​லாந்​தி​ட​மி​ருந்து சுதந்​தி​ர​மாக,​​ சுயேச்​சை​யாக அமெ​ரிக்கா செயல்​பட அடித்​த​ள​மிட்ட நூல்​க​ளில் பிர​தா​ன​மான நூலா​கிய “பகுத்​த​றிவு’ போலவே அமெ​ரிக்​கா​வில் நில​விய நிற​வெ​றிக்​கெ​தி​ராக உரு​வெ​டுத்த நூல்​தான் “அங்​கிள் டாம்ஸ் கேபின்’
“ஹேரி​யட் பீச்​சர் ஸ்டோவ்’ என்ற பெண்​மணி அமெ​ரிக்கா நாட்​டில் சின்​சி​னாட்டி நக​ரில் ஒரு மத போத​க​ரின் மக​ளா​கப் பிறந்​தார்.​ அன்று அமெ​ரிக்​கா​வில் இருந்த நிற​வெறி கொண்ட எஜ​மா​னர்​க​ளாக விளங்​கிய வெள்​ளை​யர்​கள் பல​ரால் சித்​தி​ர​வதை செய்​யப்​பட்ட கறுப்பு நிற நீக்ரோ இன அடிமை மக்​கள் மத​போ​த​கர் நடத்​திய பாட​சா​லைக்​குத் தப்​பித்து வந்து தஞ்​சம் புகுந்​த​னர்.​
அவர்​க​ளின் கண்​ணீர்க் கதை​க​ளைக் கேட்​டுக் கேட்டு மத​போ​த​க​ரின் மகள் ஹேரி​யட் பீச்​சர் ஸ்டோவ் மனம் நெகிழ்ந்து எழு​திய காவி​யம்​தான் “அங்​கிள் டாம்ஸ் கேபின்’.​
இரண்டு பாகங்​க​ளைக் கொண்ட மிகப்​பெ​ரிய நூலாம் “அங்​கிள் டாம்ஸ் கேபின்’ 1852-ம் ஆண்டு வெளி​யி​டப்​பட்​டது.​ இது​தான் ஹேரி​யட் எழு​திய முதல் நூல்.​ அந்​நூல் அச்​ச​டித்து வெளி​யான ஐயா​யி​ரம் பிர​தி​க​ளில் முதல் நாளே மூவா​யி​ரம் பிர​தி​கள் விற்​றுத் தீர்ந்​தன.​ மீத​முள்ள இரண்​டா​யி​ரம் பிர​தி​க​ளும் அடுத்த நாளே விற்​கப்​பட்​டு​விட்​டன.​
இந்​நூல் வெளி​யான ஓராண்​டுக்​குள் மூன்று லட்​சம் பிர​தி​கள் அமெ​ரிக்​கா​வில் மட்​டும் விற்​றன.​ அக்​கா​லத்​தி​லேயே நவீன விசை​யால் இயங்​கிய எட்டு அச்சு இயந்​தி​ரங்​கள் இரவு பக​லாக ஓடி இந்த நூலைத் தொடர்ந்து அச்​ச​டித்த வண்​ண​மி​ருந்​தன.​ இரண்டே ஆண்​டு​க​ளுக்​குள் உல​கெங்​கும் சுமார் அறு​பது மொழி​க​ளில் இந்​நூல் மொழி​யாக்​கம் செய்​யப்​பட்டு வெளி​வந்​தது.​
ஹே​ரி​யட்​டின் நூல் ஆதிக்க நிற​வெ​றிக்கு எதி​ராக ஒரு பெரும் போரை உரு​வாக்க மக்​களை ஆயத்​தப்​ப​டுத்த முனைந்​தது.​ “”இந்த உள்​நாட்டு யுத்​தத்தை உரு​வாக்​கிய புத்​த​கத்தை எழு​திய சிறு​பெண்” என்று ஹேரி​யட் குறித்து,​​ ஆப்​ர​காம் லிங்​கன் கருத்​துத் தெரி​வித்​துள்​ளார்.​
ச​மூ​கப் போக்​கு​க​ளைச்​சாடி மனித குலத்​தைச் சிந்​திக்க வைக்​கும் புத்​த​கங்​கள் வெளி​வந்​த​தைப் போலவே,​​ இயற்கை குறித்​தும்,​​ மனி​த​குல வர​லாறு பற்​றி​யும்,​​ ஆய்வு நோக்​கி​லும் அறி​வி​யல் பார்​வை​யி​லும் நூல்​கள் பல வெளி​வ​ரத் தொடங்​கின.​ இந்த வரி​சை​யில் டார்​வின் எழு​திய “உயி​ரி​னங்​க​ளின் தோற்​று​வாய்’ மனி​த​னின் வழி​வ​ழி​யாக வந்த சிந்​த​னைப் போக்​கையே மடை​மாற்​றம் செய்​வித்​தது.​
“பீகிள்’ என்ற ஆய்​வுக் கப்ப​லில் பய​ணித்து ஐந்​தாண்​டு​கள் மேற்​கொண்ட கட​லாய்​வுக்​குப் பிறகு அப்​போது கிடைக்​கப்​பெற்ற விலங்​கு​க​ளின் எலும்​புக் கூடு​கள்,​​ ராட்​சத ஆமை​கள்,​​ புழு பூச்​சி​கள்,​​ விநோத விலங்​கி​னங்​கள்,​​ தாவ​ரங்​கள் போன்​ற​வற்​றைக் கொண்டு ஆழ​மா​க​வும் வித்​தி​யா​ச​மா​க​வும் ஆய்​வு​களை மேற்​கொண்​டார் விஞ்​ஞானி ​ டார்​வின்.​
இந்த ஆய்​வின் விளை​வாய் “இயற்​கை​யின் தோற்​றம்’,​ “வாழ்க்​கைப் போராட்​டம்’,​ “தகுதி மிக்​கது மிஞ்​சு​வது’ என்ற தனது அரி​தி​னும் அரி​தான கண்​டு​பி​டிப்​பு​களை உள்​ள​டக்கி “உயி​ரி​னங்​க​ளின் தோற்​று​வாய்’ என்ற பூவு​ல​கச் சிந்​த​னை​யைப் புரட்​டிப் போட்ட நூலை எழு​தி​மு​டித்​தார்.​ இந்​நூல் புதிய கேள்​வி​யை​யும் பல​ரின் மத்​தி​யில் சர்ச்​சை​யை​யும் உரு​வாக்​கி​யது.​ ஆனால்,​​ காலத்தை வென்ற கருத்​துக் கரு​வூ​ல​மாக அந்​நூல் இப்​போது உல​கோ​ரால் ஒப்​புக் கொள்​ளப்​பட்​டுள்​ளது.​
டார்​வி​னின் சம​கா​லத்​தில் வாழ்ந்த கார்ல் மார்க்​ஸின் “மூல​த​னம்’ என்ற நூல் இதே அள​வுக்கு உல​கின் கவ​னத்தை ஈர்த்​தது.​ மனி​த​குல சமூ​கப் பொரு​ளா​தார அடிப்​படை மாற்​றம் குறித்து “மூல​த​னம்’ நூல் அலசி ஆராய்ந்​துள்​ளது.​
“இது​வரை அகில உல​க​ள​வில் தோன்​றிய அறி​ஞர்​கள் அனை​வ​ரும் உல​கின் போக்​கு​களை விமர்​சித்​துள்​ள​னர்,​​ வியாக்​கி​யா​னம் செய்​துள்​ள​னர்.​ ஆனால்,​​ கார்ல் மார்க்ஸ் தனது “மூல​த​னம்’ நூலின் மூல​மாக உலகை மாற்றி அமைக்​கிற சூத்​தி​ரத்​தைச் சொல்​லி​யி​ருக்​கி​றார்’ என்று “மூல​த​னம்’ வெளி​வந்த பிறகு தத்​து​வக்​கீர்த்​தி​மிக்​கோர் தங்​க​ளது கருத்தை வெளி​யிட்​டுள்​ள​னர்.​
“மூல​த​னம்’ நூலை உரு​வாக்​கப் பதி​னைந்து ஆண்​டு​கள் முழுக்க முழுக்க ஐக்​கி​யப்​பட்டு ஈடு​பாட்​டோடு அர்ப்​ப​ணித்து உழைத்​தார் கார்ல் மார்க்ஸ்.​ இந்த நூலை உரு​வாக்​கு​வ​தில் உட​னி​ருந்து அரும்​ப​ணி​யாற்​றி​ய​தோடு,​​ முறைப்​ப​டுத்தி அச்​சிட்டு வெளிக்​கொ​ணர்​வ​தில் தோழ​மைக்கு இலக்​க​ணம் வகுத்த கார்ல் மார்க்​ஸின் நெருங்​கிய தத்​து​வ​யி​யல் ஆய்​வா​ளர் பிர​ட​ரிக் எங்​கெல்ஸ் பெரும் பங்​காற்​றி​யுள்​ளார்.​ ஒரு நூல் சமூக அமைப்பை மாற்​றும் வல்​ல​மை​யு​டை​யது என்​ப​தற்கு “மூல​த​னம்’ ஒரு சிறந்த முன்​னு​தா​ர​ணம்.​
“எத்​தனை நூல்​களை வாசிக்​கி​றோம் என்​ப​தல்ல…​ எத்​த​கைய நூல்​களை வாசிக்​கி​றோம் என்​ப​து​தான் முக்​கி​யம்” என்​றார் ஜவா​ஹர்​லால் நேரு.​ ​
ஒரு “சத்​திய சோதனை’ நெல்​சன் மண்​டே​லாவை சிந்​திக்​கத் தூண்​டி​யது போல,​​ ஒரு “திருக்​கு​றள்’ மகாத்மா காந்​தி​ய​டி​களை வியப்​புக்​குள்​ளாக்​கி​யது போல,​​ நம் மண்​ணில் தோன்​றிய மாபெ​ரும் மனி​தர்​க​ளின் மகத்​தான கருத்​து​கள் ஞானப் பெட்​ட​கங்​க​ளா​கப் புத்​தக வடி​வில் நம்​முன் விரிந்து கிடக்​கின்​றன.​
இல்​லந்​தோ​றும் நூல​கங்​களை உரு​வாக்க நாம் உறு​தி​யேற்க வேண்​டும்.​ “நூல​க​மில்லா ஊரில் குடி​யி​ருக்க வேண்​டாம்’ என்ற புது​மொ​ழியை திக்​கெட்​டும் பரப்ப வேண்​டும்.​ “நல்ல நூல்​களே நல்ல நண்​பர்​கள்’ என்ற சிந்​தனை இளைய நெஞ்​சங்​க​ளின் இத​யத்​தில் கல்​வெட்​டாய்ப் பதிக்​கப்​பட வேண்​டும்.

>உழைப்பாளர் தினம் (1.5.2010)

>

இன்பம், துன்பம் இரண்டும் இணைந்த இந்த மனித வாழ்வில் கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவை மூன்றும் வெற்றிக்கான அடிப்படை என்று சாகர் என்ற சிந்தனையாளர் கூறுகிறார்.
உழைப்பு என்பது நாம் உயிர்வாழ்வதற்கான கடவுள் வழிவகுத்துள்ள தெய்வீகச் சட்டம் என்றார் மாஜினி. உழைப்பில்லாமல் எந்த ஒரு நாடும் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்ததில்லை. செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு.
எல்லா விஷயங்களையும் இயக்குவதும் அதுவே. உழைப்பு என்பது பிழைப்பிற்காக மட்டுமல்லாமல் உண்மைக்காகவும் இருக்க வேண்டும். அந்த மகத்தான உண்மையை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து உயர்ந்தவர் நம் தேசப்பிதா.
மனித வாழ்க்கை என்பது உழைப்பில் உள்ளது. உழைக்கும் மனிதனின் உறக்கம் மிகவும் இனிமையானது. ஆம் அடிமை போல் உழைப்பவன் அரசனைப் போல் உண்கிறான் என்கிறார் கால்மர்ஸ் என்ற சிந்தனையாளர்.
உழைப்பு, தொந்தரவு, தீயொழுக்கம் மற்றும் தரித்திரம் என்ற மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகின்றன.
கடின உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி, உறுதியான சிந்தனை வெற்றிக்கான அடிப்படை என்கிறார் சிந்தனையாளர் வால்டேர். வாழ்க்கையில் வெகு முக்கியமாய் கற்றுக்கொள்ள வேண்டியது எங்ஙனம் வாழ்வது என்பதே என்று கூறிய அறிஞர் ஆவ்ப்ரி, மனிதனுடைய ஆசைக்கு அளவே இல்லை. அவன் ஆற்றலுக்கும் எல்லையில்லை. மனிதனுடைய அந்த ஆசையை நிறைவு செய்யும் பொருட்டு, மனித னுடைய அளப்பறிய ஆற்றலைப் பயன்படுத்தி கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஆம், உழைப்பின்றி வெற்றி எதுவும் செழிப்பதில்லை.
வாழ்வில் நமக்கு ஏற்படு கின்ற ஒவ்வொரு துன்பமும் நம் முன்னேற்றத்திற்காக கடவுள் அளித்துள்ள வாய்ப்புகள் என்று எண்ண வேண்டும். அந்த வாய்ப்பு களை வெற்றியாக மாற்றுவதற்கு விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் கூறியதைப் போல் நம்மிடம் இருக்கும் அளவற்றஆற்றலை வெளிப்படுத்த முடியாத போதுதான் நமக்கு தோல்வி ஏற்படுகின்றது.
அத்தகைய தோல்வியை வெற்றியாக்க நம்மிடம் இருக்கும் அளவற்ற ஆற்றலை விடா முயற்சியுடன் உழைத்து வெளிப் படுத்த வேண்டும்.
வாழ்க்கை என்பது போராட்டம்தான் அதை சந்தித்து வெல்லவேண்டும். பொறுமையும், விடாமுயற்சியும் உள்ளவர் கள் சிரமங்கள் எனும் மலைகளை மிதித்தே கடந்து விடுகின்றனர் என்கிறார் நம் தேசபிதா.
மனிதனின் முயற்சிகளில் தோல்வி இருக்கலாம் ஆனால் முயற்சியே தோல்வியாக இருக்கக்கூடாது. அப்படி முயற்சி தோல்வியாகாமல் இருக்க விடாமுயற்சியுடனும், மன உறுதியுடனும், எதற்கும் அஞ்சாத திட சிந்தனையுடனும் உழைக்க வேண்டும். பொதுவாக நம்பிக்கையை இறைநம்பிக்கை, தன்னம்பிக்கை என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.
“வாழ்க்கையில் உங்களுக்குத் தரப்பட்டசுமைகள், உங்களை வாழ்வில்
உயர்த்துவதற்காக இறைவன் அளித்துள்ளதாக உண்மையில் நம்புங்கள்”
இப்படிப்பட்ட மனோபாவமே மகிழ்ச்சியையும், அதன் மூலம் முன்னேறிச் செல்லத் தூண்டுதலையும் அளிக்கிறது” என்று கூறுகிறார் சிந்தனையாளரான காப்மேயர்.
ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இல்லாதவன் தன் இடத்திலேயே தன்னம்பிக்கை அற்றவன் என்கிறார் விவேகானந்தர். ஆம்! இறைவனிடத்தில் நம்பிக்கை வைத்து வாழ்வில் உயர்வதற்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதோ சில தன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சில வெற்றிச் சிந்தனைகளை நினைவில் கொள்வோம்.
• பெரிய செயல்களை சாதிக்க மிக முக்கியமானது தன்னம்பிக்கை.
•சிக்கல்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிகவும் வசதியான வெற்றிகளையும் உருவாக்குகிறது.
• தன்னம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி.
• தன்னம்பிக்கையுடைய ஆன்மாவின் ஆற்றல் அளவற்றது.
சிந்தனையாளர் வில்கி “என் வாழ்க்கையில் நான் ஒரு மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்தேன். பயப்படும் விஷயங் களை எதிர்த்து தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்படும்போது அவை இருக்கும் இடமே தெரியாதபடி ஓடி மறைகின்றன என்பதே அந்தக் கண்டுபிடிப்பு” என்கிறார்.
எவனொருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப் பிட்டன. புதிய மதமோ தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று கூறுகிறது என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்.
ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்பட்ட தோல்வியை நினைத்து மனதை தளரவிடக்கூடாது. ஒவ்வொரு தோல்வியிலும் வெற்றிக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அச்சத்தை வெல்வதே முதல் வெற்றி. எந்த பெரிய வெற்றியும் மிகவும் எளிதான முறையால் கிடைத்துவிடுவதில்லை. வேதனையின்றி வெகுமதியும், முள் இன்றி அரியணையும் இல்லை என்றே கூறுகிறார் வில்லியம் பென் என்ற சிந்தனையாளர். இத்தகைய அச்சத்தையும், வேதனையையும் வெல்வதற்கு தன்னம்பிக்கை யுடன் விடாமுயற்சியை இணைத்து உழைக்க வேண்டும்.
தன்னம்பிக்கையுடன் இருக்கும்போது எந்த காரியமும் கடினமாகத் தெரிவதில்லை. தீவிர தன்னம்பிக்கை இருந்தால் தேடும்பொருள் கிடைத்தே தீரும். ஆம், ஒழுக்கமும், தன்னம்பிக் கையுடன் கூடிய ஆற்றலும் மதிப்புள்ள முதலீடாகும்.
“துயரப் புயல்கள் வீசிய போதிலும்
தோல்வி இருட்டு தொடர்ந்த போதிலும்
சோதனை அடுக்கு சூழ்ந்த போதிலும்
நினைவில் வைக்க வேண்டிய மந்திரம்
உனக்கு நீயே ஒளியாக இரு”
என்ற புத்தரின் தன்னம்பிக்கைக்குச் சான்றான வரிகளை மனதில் நிறுத்தி,
கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம் பிக்கை இவை மூன்றும் வெற்றிக்கான அடிப் படையாகக் கருதி, விண்ணைத்தொட முயலுங்கள் உங்களுக்கு மேகங்களாவது கிடைக் கட்டும் என்று எண்ணங்களை உயர்வானதாக எப்பொழுதும் மனதில் இருத்தி,
ஒவ்வொரு மனிதனும் வெற்றி என்ற மிக உயர்ந்த சிகரத்தை அடைய முயற்சி என்ற ஊன்றுகோல் மூலம் தன்னம்பிக்கையுடன், தளரா மனம் பெற்று விடாமுயற்சியுடன் உழைத்து பார்போற்ற வாழ்வோம்.

>இன்று சர்வதேச புத்தக தினம்

>

நூலகம்; இல்லையெனில் சிறை: நான் மட்டுமே வாழ வேண்டும் எனும் நிர்ப்பந்தத் தோடு தனித் தீவுக்கு அனுப்பினாலும், போவதற்கு நான் தயார்… புத்தகங்களோடு போக அனுமதித்தால். – நேரு
நேரம் வீணாகிறதே என்று பதட்டப்பட வேண்டிய அவசியம் அற்றவர்கள், புத்தகங் களை வாசிப்பவர்கள் மட்டுமே. – அண்ணாதுரை.
உங்களிடம் ஒரு பத்து ரூபாய் இருந்தால் என்ன செய் வீர்கள்…? நான் ஒரு புத்தகம் வாங்குவேன் – அப்துல் கலாம்.
தொலைக்காட்சியால் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். யாராவது அதை ‘ஆன்’ செய் தாலே, நான் பக்கத்து அறைக் குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து விடுவேன். – க்ரூசோ மார்க்ஸ்.
என் முப்பதாண்டுக் காலத் தில் ஒரே போக்கிடமாய் இருந் தவை புத்தகங்களே. – நெல்சன் மண்டேலா.
நூலகங்களைக் கட்டுங்கள்; இல்லையேல் சிறைச்சாலைகளைக் கட்ட வேண்டி வரும். – மாவீரன் நெப்போலியன்.

புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது: புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்ள புத்தகங்களை வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர் இளைஞர்கள். புத்தகம் படிப்பதற்காக, ஷாப்பிங், சினிமா, விளையாட்டு என, அனைத்தையும் கூட தியாகம் செய்து விடுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான்! ஆனால், இது இங்கல்ல… அமெரிக்காவில்! சமீபத்திய ஆய்வில் தான் இவ்விஷயம் தெரிய வந்துள்ளது. இந்தியா நிலை என்ன? நம் இளைஞர்களும் சளைத்தவர்கள் அல்ல; படிக்கின்றனர். இணையம், இ-புக், இ-ரீடர் என்று நவீன தொழில்நுட்பம் பெருகியுள்ள இக்காலத்தில், இளைய தலைமுறையினர் மற்றும் குழந்தைகளிடம், புத்தகத்தின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது என்பது, சிலரின் கருத்தாக, ஆதங்கமாக, வேதனையாகக் கூட இருக்கிறது. உண்மை அதுதானா என்பது தீர ஆராயப்பட வேண்டியதுதான்.
இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்ட இளைய சமுதாயத்தினர் தான். இவர்களில் 20 லிருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்களில், 33 சதவீதம் பேர் பட்டப்படிப்பு மற்றும் பிற படிப்புகள் படித்தவர்கள்; 59 சதவீத இளைஞர்கள், பணிபுரிபவர்கள். சமீபத்தில், டில்லியில் புத்தகச் சந்தை நடந்தது. உலக அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சந்தை இது. இந்திய மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் 1,200 பேர், இதில் கலந்து கொண்டனர். மொத்தம் 2,400 கடைகள்; இவற்றில் 35 கடைகள், வெளிநாடுகளைச் சேர்ந்தவை.
இப்புத்தகச் சந்தையைத் துவக்கி வைத்த மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகையில்,’நவீன தொழில் நுட்பம், குழந்தைகளின் புத்தக வாசிப்பைக் குறைத்து விட்டது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என, கூறினார். டில்லி புத்தகச் சந்தைக்கு, இரண்டு லட்சத்துக்கும் மேலான புத்தகப் பிரியர்கள் வந்துள்ளனர். இவர்களில் இளைஞர்கள் தன்னம் பிக்கை ஊட்டும் புத்தகங்கள், வெற்றி பெற வழிகாட்டும் நூல்கள், யோகா புத்தகங்கள், தேர்வை எதிர்கொள்ள வழிகாட்டும் நூல்களை விரும்பி வாங்கியதாக, நாளிதழ் செய்திகள் கூறுகின்றன. அண்மையில் நேஷனல் புக் டிரஸ்ட், புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றி, இந்திய இளைஞர்களிடையே ஓர் ஆய்வு நடத்தியது. அதில், செய்திகள் மற்றும் தகவல்கள் அறிவதற்காக, 63 சதவீத இளைஞர்கள், நாளிதழ்களையும், 17 சதவீதம் பேர், வார, மாத பத்திரிகைகளையும் நாடுகின்றனர் என்றும், செய்திகளுக்காக இணையத்தை நாடுவோர், வெறும் 7 சதவீதம் தான் என்பதும், தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு, இந்திய இளைஞர்களிடையே, படிக்கும் பழக்கம் இன்னும் குறைந்து விடவில்லை என்பதை காட்டுகிறது.
தமிழகத்தில்? மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் கூறியதாவது: புத்தகம் படிப்பது, குறைந்து கொண்டே வருகிறது. புத்தகப் படிப்பு குறைவதற்கு, ஊடகங்கள் தான் காரணம். ஊடகங்கள், செய்திகளை மட்டுமே தருவன; நாம் விரும்புவதைத் தருவது புத்தகம். செய்திகளைத் திணிப்பது, ஊடகம். இதனால், ஊடகத் தகவல்களை, நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் இருக்கிறது. புத்தக விற்பனை அதிகரித்துள் ளது உண்மை தான். ஆனால், இன்றைய இளைஞர்களின் கல்வியறிவுப் பெருக்கத்தோடும், மக்கள் தொகையோடும் ஒப்பிடும் போது, இது ஒன்றுமே இல்லை. இன்று எந்த அரசியல் அமைப்புக்கும், புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை. எனது வகுப்பில் பாடம் எடுக்கும்போது, உணர்ச்சிபூர்வமான எந்த விஷயத்தைச் சொன்னாலும், மாணவர்களிடம் எவ்வித சலனமும் ஏற்படுவதில்லை. கிராமப்புற மாணவர்களிடம் கொஞ்சம் உணர்ச்சி இருக்கிறது. இவ்வாறு, பேராசிரியர் ராஜாங்கம் கூறினார்.
நூலகத் துறையின் முன்னாள் இயக்குனர் தில்லைநாயகம் ஓர் இணையதளப் பேட்டியில் கூறியிருப்பதாவது: வாசிப்புத் திறன் அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரம், மாயையே. வாசிப்புத் திறன் கூடியிருந்தால், இந்த நாடு மேன்மையான சமூக மாற்றத்தைச் சந்தித்திருக்கும். கல்லூரி, பள்ளிகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களின் வாசிப்பு, தொழில்முறை வாசிப்பாக (புரொபஷனல் ரீடிங்) மட்டுமே இருக்கிறது. மன அழுத்த நோய் அதிகரிப்பதற்குக் காரணம், புத்தக வாசிப்புப் பழக்கம் இல்லாததுதான். முன்பு பள்ளிகளில் நூலகத்துக்கு என்று ஒரு வகுப்பு இருந்தது. இப்போது அது இல்லை. இவ்வாறு தில்லைநாயகம் கூறியிருக்கிறார்.
இதற்கு நேர்மாறாக, புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது என்பது, நெல்லை மனோன்மணியம் பல்கலை தமிழியல்துறைத் தலைவர் பேராசிரியர் அ.ராமசாமியின் கருத்து. ‘கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ் பதிப்பகங்களின் எண்ணிக்கையும், புத்தக விற்பனையும் அதிகரித்துள்ளது. இளைஞர்களில் குறிப்பாக ஐ.டி., துறையில் இருப்பவர்கள், புத்தகம் மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்’ என்பது, அவர் வாதம். காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் கண்ணனும், இதே கருத்தை முன்வைக்கிறார். அவர் கூறியதாவது: புத்தகம், இ-புக், இ-ரீடர் என்ற பாகுபாடு அவசியமற்றது. மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு கணிசமான அளவில் இளைஞர்கள் வந்திருந்தனர். ஆங்கில புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது என்றாலும், தமிழ்வழிக் கல்வி தடுமாறும் இக்காலத்தில், எப்படி இவ்வளவு இளைஞர்கள் தமிழ் புத்தகங்களை நாடி வருகின்றனர் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. ஆனால், தமிழில் வாசிப்பு குறைவதற்கு, தமிழ்வழிக் கல்விக்கு முக்கியத்துவமின்மை, ஆங்கிலத்தில் உள்ளது போல், குழந்தை இலக்கியம், தரமான பதிப்பு, பரந்து விரிந்த சந்தை, உடனடி வெளியீடு ஆகியவை தமிழ் பதிப்புலகில் இல்லாதது என, பல காரணங்களைச் சொல்லலாம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்ப் பதிப்புலகில் ஏற்பட்ட மாற்றம் தான், வாசிப்புப் பழக்கம் குறையவில்லை என்று காட்டுகிறது. ஆனால் நம் மக்கள் தொகைக்கு முன், இதெல்லாம் சாதாரணம் தான். இவ்வாறு கண்ணன் கூறுகிறார்.
கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி கூறியதாவது: இளைஞர்கள், கதைகளை விட, பிறதுறைப் புத்தகங்களை அதிகம் நாடுகின்றனர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புத்தக வெளியீடு அதிகமாகியிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பை விட இப்போது, இரண்டு, மூன்று மடங்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஆங்கில மோகத்தைக் கண்டு, நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆங்கில மோகம் என்பதும், ஆங்கிலத்தில் புலமை என்பதும் வேறு,வேறு. இன்று தினப்பத்திரிகைகள் அதிகம் விற்பனையாகின்றன. புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன. தமிழிலும் படிக்கின்றனர்; ஆங்கிலத்திலும் படிக்கின்றனர். இணையம் மூலமாக அதிக நேரம் படிக்க இயலாது. இவ்வாறு பத்ரி சேஷாத்ரி கூறினார்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து, இணையதளத்தில் கூறியுள்ளதாவது: இன்றைய இளைய தலைமுறையினர் மென்பொருள், ஊடகம், வங்கி, கல்லூரி, பன்னாட்டு நிறுவனங்கள் என்று பணிபுரிந்தபடியே, கூர்ந்து தமிழ் இலக்கியப் போக்குகளை கவனிக்கின்றனர். படிக்கின்றனர். இன்னொரு சந்தோஷம்… இத்தனைத் தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகும் மக்கள் புத்தகங்களின் மீது காட்டும் அக்கறையும், அதை வாங்குவதற்காக அலைமோதுவதைக் காண்பதும் வியப்பாக இருக்கிறது. இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 இந்தியாவில் முதன்முதலாக, பொதுநூலகச் சட்டம் போடப்பட்டது தமிழகத்தில்தான். தமிழகத்தில் 4,600 உயர்நிலைப் பள்ளிகளில் 85 சதவீதப் பள்ளிகளிலும், 5,100 மேல்நிலைப் பள்ளிகளில் 98 சதவீதப் பள்ளிகளிலும் நூலகங்கள் உள்ளதாக, 2002ல் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. மொத்தமுள்ள 48,062 அரசு ஆரம்பப் பள்ளி நூலகங்களில், இரண்டு கோடி புத்தகங்கள் உள்ளன.

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தக வாசிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சில திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. கோவில்களில் நூலகங்கள் படிப்படியாகத் துவக்கப் பட்டு வருகின்றன. பள்ளிகளில் சில புத்தகங்களை ஒன்றாகக் கட்டி, வகுப்புகளில் தொங்கவிடும், ‘புத்தகப் பூங்கொத்து’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் புத்தகங்களை அந்தந்த வகுப்பு மாணவர்கள் படித்த பின், இவை அடுத்த வகுப்புக்கு மாற்றப்படும். கடந்த 2009, செப்டம்பர் 17ல் சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடந்த விழாவில் பேசிய, பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தமிழக மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், வாரம் ஒருமுறை மாணவர்கள், நூலகங்களுக்கு அழைத்துச் செல் லப்படுவர்’ என்று அறிவித்தார். இதற்காக, ‘நமது உலகம் நூலகம்’ என்ற திட்டம் உருவாக்கப் பட்டது. 2009 அக்டோபர் 16ம் தேதி முதல் 2010 அக்டோபர் 15ம் தேதி வரை, ‘நூலக எழுச்சி’ ஆண்டாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறந்துவிடவில்லை, ஒட்டுமொத்தமாக நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமையாகி விடவில்லை என்பதையே இவர்களின் கருத்துக்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
பார்வையற்றோரும் புத்தகச் சந்தையும்: பார்வையற்றோரும் புத்தகம் வாசிப்பதற்கான வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரி, டில்லி புத்தகச் சந்தையின் முன், 300 பார்வையற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வெளியாகின்றன. இவற்றில் 700 மட்டுமே பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காகத் தயாராகின்றன. உலக பார்வையற்றோர் யூனியன், ஒவ்வொரு நாட்டிலும் வெளியாகும் புத்தகங்களில் 5 சதவீதமாவது இவர்களுக்காகத் தயாராக வேண்டும் என்று கூறியிருந்தாலும், இந்தியாவில் 0.5 சதவீதப் புத்தகங்களே இவர்களுக்காகத் தயாராகின்றன. புத்தகங்கள் இல்லாவிட்டாலும் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இ-புக், இ-ஆடியோ போன்ற வசதிகளையாவது அதிகரிக்க வேண்டும் என்பதுதான் இவர்களது கோரிக்கை. இந்தியாவில் புத்தகச் சந்தை நடக்கும் டில்லி, மும்பை, கோல்கட்டாவில் இவர்கள் ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களின் அமைப்புக்கு நாடு முழுவதும் 600 எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
32 பக்கங்கள்தான்: ஒவ்வொருவரும் சராசரியாக ஓராண்டில், 2,000 பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந் துரை செய்கிறது. ஆனால் நம்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக, 32 பக்கங்கள் மட்டுமே படிக்கின்றனர் என, யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.
இது புத்தகக் காலம்: ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரை புத்தகச் சந்தைகளின் காலமாகக் கருதப்படுகிறது. சென்னை, டில்லி, கோல்கட்டா ஆகிய இந்திய நகரங்களில் புத்தகச் சந்தை முடிந்துவிட்டது. சர்வதேச அளவில் பொலோக்னா, பீனஸ் ஏர்ஸ், கெய்ரோ, ஜெருசலம், லண்டன், பாரீஸ், செயின்ட் பீட்டர் ஸ்பர்க், தாய்பே ஆகிய நகரங்களில் முன்பின்னாக புத்தகச் சந்தைகள் தொடங்கிவிட்டன. விரைவில் அவை முடிவடைய இருக்கின்றன. பல இணையதள நூலகங்கள் இணைந்து உலக இணையதளப் புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. இதில் 25 லட்சம் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள முகவரி :
சர்வதேச புத்தக தினம்: இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளில் குழந்தைகளுக்குப் புத்தகங்களைப் பரிசளிப்பது வழக்கம். பல ஆண்டுகளாக மார்ச் 5 அன்று உலகப் புத்தக நாள் அந்நாடுகளில் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 23 புனித ஜார்ஜ் தினம். அன்று காதலன் காதலிக்கு ரோஜா கொடுத்து, அன்பைப் பரிமாறுவது மேலை நாட்டுப் பழக்கம். 1923ல் ஸ்பெயின் நாட்டில், ‘கேடலோனியா’ நகர புத்தக விற்பனையாளர்கள் ‘மிகையில் டே செர்வாண்டிஸ்’ என்ற எழுத்தாளர் மறைந்த ஏப்ரல் 23ம் தேதி புத்தக தினமாகப் பரிந்துரைத்தனர். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் என்பதற்காக ஏப்ரல் 23ம் தேதி சர்வதேச புத்தக தினமாக 1995ல் யுனெஸ்கோ அறிவித்தது.

>மார்ச் 15-ம் நாள் நுகர்வோர் விழிப்புணர்வு தினம்

>

1983-ம் ஆண்டிலிருந்து ஒவ்வோராண்டும் மார்ச் 15-ம் நாள் நுகர்வோர் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.​ வாடிக்கையாளரை மையமாக வைத்துத்தான் வியாபாரம் நடத்த வேண்டும் என்றும் நுகர்வோரே மன்னர் என்ற அளவில் போற்றுதலுக்குரியவர் என்றும் கூறினாலும்,​​ நடைமுறையில் இது நேர்மாறாக இருப்பதைக் காண்கிறோம்.​ மற்றவர்களை மிதித்தாவது நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்;​ எப்படியாவது பணம் சம்பாதிப்பதுதான் பிரதானம் என்ற நிலை வந்துவிட்டது.​ ​
நுகர்வோர் புறக்கணிப்புக்கு முக்கியக் காரணம் நுகர்வோரே என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.​ நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதின் முக்கிய நோக்கங்கள்,​​ நுகர்வோரின் உரிமைகளைப் பற்றிப் புரிதல் ஏற்படுத்துதல்,​​ பாதுகாப்பு அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்துதல் ஆகும்.
​விற்கப்படும் பொருள் பற்றிய குறிப்பு தெளிவாக இருக்க வேண்டும்.​ ​ தகவல் பெறுவது இரண்டாவது உரிமை.​ எந்தப் பொருளை எப்படி வாங்க வேண்டும்,​​ எவ்வாறு எங்கு வாங்க வேண்டும் என்று ​ தேர்ந்தெடுக்கும் உரிமை மூன்றாவது உரிமையாகும்.​ நுகர்வோர் குறைகள் கேட்கப்பட வேண்டும்,​​ கோரிக்கைகளுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பது நான்காவது உரிமை.
​நுகர்வோர் பாதுகாப்பு,​​ தகவல் அறிதல்,​​ தெரிவு சுதந்திரம்,​​ விசாரணைக்கு வழி.​ இந்த நான்கு உரிமைகளும் நுகர்வோர் பாதுகாப்புக்கு அரண்களாக விளங்கும் தூண்கள்.​ ​
தமிழரின் பண்டைக்கால வணிகமுறை கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறை கொடாது எவ்வளவு போற்றுதலுக்குரிய அணுகுமுறை.​ வாடிக்கையாளர்களே முதன்மையானவர் என்றார் மகாத்மா காந்தி.​ ​ நுகர்வோரைப் புறக்கணித்தாலோ,​​ ஏமாற்றினாலோ வியாபாரம் முடிவில் படுத்துவிடும்.​ பண்டமாற்று முறையில் வணிகம் செய்த காலத்தில் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.​ ​ உழைப்புக்கு ஏற்றவாறு பண்டம் கொடுக்கப்பட்டது.​ ஆனால்,​​ காலப்போக்கில் இது மாறிப் பணத்தின் ஆதிக்கம் தலைதூக்கிவிட்டது.​ நாணயம் வியாபாரத்தின் நாணயத்தை நசுக்கிவிட்டது.​ ​
அவசர உலகில் அடாவடித்தனமும்,​​ ஆர்ப்பரிப்பும் பெருகிவிட்டது.​ இந்தச் சூழலில் கேள்வி கேட்கத் தயங்குகிறோம்.​ ​ சகிக்கக்கூடாதவை சகிக்கப்படுவதால்,​​ சகிக்கக்கூடாதவை சகிக்கக்கூடியதாகிவிடுகிறது.​ அனுபவரீதியாக இதைப் பார்க்கிறோம்.​ ​ அநீதியைக் கண்டால் தட்டிக்கேட்கத் துணிவில்லை.​ நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்குகிறோம்.​ நாம் பணம் கொடுத்து பொருள் வாங்கும் பொழுது அது தரமானதாக உள்ளதா என்று பார்க்க வேண்டியது நமது பொறுப்பு.
​காட்சிக்கு இனியதாக இருந்தால் மட்டும் போதாது.​ அது மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருக்க வேண்டும்.​ தரம் நிர்ணயிக்கும் ஆணையத்தின் அங்கீகாரம்,​​ ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.​ ​ பொதுவாக பிரபலமான மற்றும் மக்களின் ஆதரவைப் பெற்ற பொருள்கள் போலிகள் தயாரிப்பில் சிக்குகின்றன.​ இத்தகைய பொருள்களை வாங்கும்பொழுது மேலும் கவனம் செலுத்த வேண்டும்.​
ஏமாற்றாதே ஏமாறாதே என்பதில் அர்த்தம் புதைந்திருக்கிறது.​ ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தழைப்பார்கள்.​ அதிக வட்டி என்று முதலீட்டாளர்களை ஈர்த்து முடிவில் ஏமாற்றப்பட்டு பல வழக்குகள் பதிவாயின.
​ நாட்டில் இத்தகைய மோசடி அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம்.​ சுமார் 10 லட்சம் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை இழந்துள்ளார்கள்.​ இழந்த பணம் சுமார் ரூ.​ 3,000 கோடி.​ இவ்வளவு நடந்த பிறகும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேல்நாட்டுப் பொருள்கள் மீதுள்ள மோகம் இன்றும் குறைந்தபாடில்லை.​ மேலைநாடுகள் அல்லது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரை இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு வாங்குகின்றனர்.
​மக்களின் இந்த மனநிலையை வைத்து போலிப் பொருள்கள் மேலை நாடுகளில் தயாரிக்கப்பட்டதாக முத்திரை குத்தப்பட்டு விற்பனை ​செய்யப்படுகிறது.​ அழகுசாதனப் பொருள்கள்,​​ சோப்பு,​​ தைலம்,​​ வாசனைப் பொருள்களில் போலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
​டிரேட் மார்க் ​ வணிகக் குறி சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முதல் அறிக்கைகளின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.​ ​ காவல்துறைக்கு இருக்கும் வேலைப்பளுவில் இத்தகைய குற்றங்களைப் பற்றி தகவல் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.​ அவர்களாகச் சென்று கண்டுபிடிப்பது வெகு சில வழக்குகளே.
கொடுங்கையூரில் 1998-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றிய தகவலில் ஏராளமான வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.​ ​ இப்போது போலி மருந்து வகைகள் சிக்கியுள்ளன.​ இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏராளமான மருந்து வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
​காலாவதியான மருந்து வகைகள் உள்கொள்வதால் மருந்தின் பலன் குறைவாக இருக்கும்;​ வேறு பாதிப்பு இருக்காது என்ற தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது.​ ​ இத்தகைய மருந்துகள் உடம்புக்கு தீராத தீங்கு இழைக்கும் என்பதை உணர வேண்டும்.​ ​
ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு போலி மருந்து வகைகள் மற்றும் காலாவதியான மருந்துகள் அதிகமாக நடமாடும் நாடு இந்தியா என்று தனது ஆண்டறிக்கையில் கூறியுள்ளது.
​இத்தகைய மருந்து வகைகளின் புழக்கத்தின் மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.​ 5,000 கோடி என்று மதிப்பிட்டுள்ளது.​ ​ இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்து வகைகளின் வியாபாரத்தில் 20 சதவிகிதம் ஆகும்.​ ​ உலகில் புழக்கத்தில் இருக்கும் போலி மருந்துவகைகளில் 35 சதவிகிதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது பெருமைக்குரியது அல்ல.​ ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உலகின் 23 சதவிகித போலி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.​ ​
மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டம் 1940,​ திருத்திய சட்டம் 1982-ல் போலி மருந்து செய்தலுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.​ ​ வேறு ஒரு மருந்துபோல தோற்றம் கொடுக்க போலி லேபிள்கள் முத்திரைகள் பொருத்தப்பட்டு ​ அசல் போன்ற தோற்றத்தோடு தயார் செய்தல் இந்தச் சட்டத்தில் அடங்கும்.
​உலக அளவில் போலி மருந்துகள் நடமாட்டத்தின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.​ ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ்,​​ வியட்நாம்,​​ கம்போடியா போன்ற நாடுகளில் போலி மருந்துகளால் பலர் உயிரிழந்துள்ளனர்.​ நைஜீரியாவில் 1998-ம் ஆண்டு மூளைக்காய்ச்சலுக்கு போலி மருந்து உள்கொண்டதால் சுமார் 2,500 ஏழை மக்கள் உயிரிழந்தனர்.​ ரஷியாவில் போலி மருந்துகள் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் பத்து மடங்காக அதிகரித்துள்ளது.​ ​ ​
இந்தியாவைப் பொறுத்தவரை போலி மருந்துகளின் உறைவிடம் வடமாநிலங்களான பஞ்சாப்,​​ ஹரியாணா,​​ உத்தரப்பிரதேசம்,​​ பிகார்.
​தில்லிக்கு அருகில் உள்ள குர்கான் என்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து பருகிய 33 குழந்தைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு பரிதாபமாக இறந்தன.​ ​ அந்த மருந்தில் டையெத்தலீன் க்ளைகால் என்ற பொருள் கலந்திருந்ததால் குழந்தைகளின் சிறுநீரகம் செயலிழந்து மரணம் ஏற்பட்டது.
​இம்மாதிரி பெரியதும்,​​ சிறியதுமாக நிகழ்வுகள் நமது நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.​ இத்தகைய குறைபாடுள்ள மருந்து வகைகளால் இந்தியாவில் நாளொன்றுக்கு 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.​ ​
போலி மருந்துகள்,​​ காலாவதியான மருந்துகள் நடமாட்டம் குறித்தும்,​​ கலப்பட மருந்துகள் பற்றியும் போதுமான விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறிப்பாக ​ மருத்துவர்கள் மத்தியில் இல்லை என்பது வேதனைக்குரியது.​ ​ தில்லி,​​ ஹரியாணா மாநிலங்களில் அவ்வப்போது பறிமுதல் செய்யப்படும் போலி மருந்துகள் மத்திய ஆசிய நகரங்களிலிருந்து கடத்தப்பட்டு வந்துள்ளது என்று தெரிகிறது.​ ​ ஹரியாணாவில் உள்ள பதிண்டா என்ற இடம் போலி மருந்துகள் தயாரிப்பின் புகலிடம்.​ இத்தகைய போலி மருந்து நிறுவனங்களைக் கண்காணிக்கவும்,​​ பதிவு பெற்ற தயாரிப்பாளர்கள் முறையாக தரமான மருந்து வகைகள்தான் தயாரிக்கின்றனரா என்பதைத் தணிக்கை செய்யவும் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.​ ​ ​
மக்களது பொதுநலன் பேணுவது மிக முக்கியமான பொறுப்பு.​ ​ போலி மருந்துகளால் பாதிக்கப்படுபவர் ஏழை மக்கள்.​ சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றாலும் இருக்கும் சட்டத்தை சரிவர அமல்படுத்த வேண்டும்.​ ஊழலின்றி அவரவர் நிலையில் பணிகளை முனைப்புடனும் நேர்மையாகவும் செய்தால் இத்தகைய பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை.
“மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பது ஆன்றோர் வாக்கு.​ மக்களுக்குச் சென்றடையும் அரசுப் பணி தெய்வீகப்பணி என்றால் ஐயமில்லை.​ ​ அரசுப் பணிகளை நுகரும் மக்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய பலன் சரியாகக் கிடைக்காவிட்டால் முறையிட வேண்டும்.​ உலகெங்கும் மனித உரிமைகளில் கண்ணியமும்,​​ சமத்துவமும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.
​பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துப் பாகுபடுத்தலை அறவே தவிர்த்து நியாயமான முடிவுகள் எடுக்க வேண்டும்.​ தரமான நேர்மையான சேவை மக்களுக்கு சென்றடைய வேண்டும்.​ விற்பனைக்குரிய பொருளின் தரத்தை நிர்ணயம் செய்து வாங்குவதுபோல மக்கள் வரிப்பணத்தில் அரசுப்பணி புரியும் அலுவலர்களின் பணிகளும் தரமானதாகவும்,​​ மக்களுக்குப் பயனுள்ளதாகவும் அமைய வேண்டும்.​ ​ அரசு அலுவலகங்களுக்கு முறையிடவோ,​​ தகவலறியவோ,​​ அரசு அளிக்கும் பயன்பெறவோ வரும் மக்கள் மற்றும் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவரும் பாதிக்கப்பட்டவர் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.​ இதுவும் ஒரு முக்கியமான மனித உரிமை.
நுகர்வோர் உரிமையும்,​​ அடிப்படை மனித உரிமை.​ மக்களிடம் அவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவு.​ உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பலப்படுத்துவது நமது கடமை.​ ஆரோக்கியமான சமுதாயம் தழைக்கவும்,​​ ஜனநாயகத்தின் ஆளுமை பெருகவும் நுகரும் மக்களின் விழிப்புணர்வு இன்றியமையாதது.

>ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம்

>

ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம்
 இன்று ஏப்ரல் முதல்  தேதி முட்டாள்கள் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாளை ஆண்டின் துவக்கமாக கருதி வந்தனர். அதன் பின் 16ம் நூற்றாண்டில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர்.
1582ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு ஜனவரி 1ம் தேதி பிறப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஸ்கொட்லாந்து, ஜெர்மனி, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் படிப்படியாக இந்த மாற்றத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டன.
ஆனால் பல நாடுகள் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர்.
அத்தோடு நில்லாமல், ஏப்ரல் 1ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளைச் சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர்.
இது தான் காலப்போக்கில் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறப்படும் உண்டு.
ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்ற நாளை கடைப்பிடித்ததாகவும் வரலாற்றாசிரியர்கள கூறுகின்றனர்.
தற்போது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
பெரியளவிலான கொண்டாட்டங்கள் போன்றவை இல்லை என்றாலும், நண்பர்கள், குடும்பத்தினர் என தெரிந்த நபர்களிடம் வேடிக்கை செய்வதும் அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதிலும் பெரும்பாலான மக்கள் ஈடுபடுகிறார்கள்.
அதோடு பிரபல டிவி, ரேடியோ, பத்திரிகைகள் போன்றவையும் முட்டாள்கள் தினத்தை ஒட்டி, தங்கள் வாசகர்களையும், நேயர்களையும் ஏமாற்றி பொய் செய்திகளை வெளியிடுவதுண்டு.
முன்பு ஒரு தமிழ் வார இதழ் குஷ்புவுக்கும், பாலச்சந்தருக்கும் கல்யாணம் என்று சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் கூட கடந்த 2005ம் ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டுள்ளது.
‘மார்ஸில் (செவ்வாய் கிரகம்) தண்ணீர்’ என்று கொட்டையாக ஒரு தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுதிவைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது.
பின்னர் அதை ஜோக் என்றது நாசா.
அதேபோல் 2003ல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை கொன்றுவிட்டார்கள் என சில இணையத்தளங்கள் பொய் செய்தியை பரப்பி அதனால் தென்கொரியா பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கு 1.5 சதவீதம் சரிந்தது.
ஆனால், வரலாற்றில் ஏப்ரல் 1 என்ற தினத்தில் பல்வேறு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனம் தனது ஜி-மெயில் சேவையை அறிவித்தபோது அதை பெரும்பாலானவர்கள் நம்பவில்லை.
முட்டாள்கள் தினத்தை ஒட்டி போலி அறிவிப்பை செய்வதாக பலர் கருதினார்கள். ஆனால் உண்மையில் அதே தினத்தில் இருந்துதான் அந்த சேவை தொடங்கப்பட்டது.
அதோடு இந்திய ரிசர்வ் வங்கியே இந்த நாளில் தான் 1935ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
ஆக, முட்டாள்கள் தினம் கடைப்பிடிப்பது உபயோகமற்ற ஒரு விஷயமாக பலர் கருதுவதுண்டு. ஆனால் முட்டாள் ஆகாமல் இருக்க ஒரு நாளைக்கு மட்டுமாவது நம்மால் முழு விழிப்புணர்வுடன் இருக்க முடியுமா என்பதை பரிசோதித்துப் பார்க்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.