Category Archives: வரையறுக்கப்பட்ட விடுமுறை

அரசு ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியலில், பகவான் வைகுண்டசாமி பிறந்தநாள் சேர்க்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள சாஸ்தான்கோவில்விளை என முன்பும், தற்போது சாமிதோப்பு என அழைக்கப்படும் ஊரில் 1809-ம் ஆண்டு பிறந்தவர் முத்துக்குட்டி. இவர் இளமையில் நோய்வாய்ப்பட்டதால் கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ந் தேதி, அதாவது 1833-ம் ஆண்டு திருச்செந்தூர் கடலுக்கு சென்று தீர்த்தமாடினார். அவர், கடலுக்குள் 2 நாட்கள் இருந்துவிட்டு 3-வது நாள் விஞ்சை பெற்று தெய்வீக விஷ்ணுவாக அவதரித்தார். ஐயா வைகுண்டரின் தலைமை பதியாக சாமிதோப்பு விளங்குகிறது.
இதுபோல அவருடைய வழிபாட்டுத் தலங்கள் நிழல்தாங்கல் என அழைக்கப்பட்டு பல இடங்களில் இருக்கின்றன. பகவான் வைகுண்டசுவாமியை வழிபடுபவர்கள் ஐயா வழி பக்தர்கள் என அழைக்கப்படுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சாமிதோப்பில் இருக்கும் ஐயா வைகுண்டசுவாமி வழிபாட்டு தலத்துக்கு சென்று வழிபட்டார்.
தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பல மத பண்டிகைகள், கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுவரை ஐயா வழி பக்தர்களுக்கு, பகவான் வைகுண்டசுவாமி அவதரித்த திருநாளான மாசி 20-ந் தேதி விடுமுறை நாளாக இல்லை. இப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகவும் அக்கறை எடுத்து ஐயா வைகுண்டசுவாமி அவதரித்த மார்ச் 3-ந் தேதியை கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாளாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அரசாணைப்படி, மாநில அரசு ஊழியர்கள் ஓராண்டில் 3 நாட்களை கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். 35 திருவிழாக்கள், கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பகவான் வைகுண்டசுவாமி பிறந்த நாளை, விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வந்தது. இந்த கோரிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்து பகவான் வைகுண்டசுவாமி பிறந்த நாளை, கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.