Category Archives: மனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மெயின் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 312 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில், 73 பேர் சென்னையில் உள்ள மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் படித்தவர்கள்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்காக 890 இடங்களுக்காக நடந்த மெயின் தேர்வில், தமிழ்நாட்டில் இருந்து 312 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில், 73 பேர் சென்னையில் உள்ள மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் படித்தவர்கள்.
ஆண்டுதோறும் இந்தியா முழுவதுமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு 890 பணிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இதற்காக விண்ணப்பித்திருந்தனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 12.6.2011 அன்று முதல்நிலை தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய 4 லட்சம் பேர்களில், 12 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதில், 2,970 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியா முழுவதும் பல இடங்களில் நடந்தது. இந்த தேர்வில் இந்தியா முழுவதிலும் இருந்து 2,391 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 312 பேர். இதில், சைதை துரைசாமியின் மனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் இலவச தங்கும் வசதி, உணவு வசதியோடு கூடிய பயிற்சியை பெற்ற 73 மாணவ-மாணவிகள் தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்காக 145 பேர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இனி அடுத்த ஒரு மாதத்தில் நேர்முகத்தேர்வு டெல்லியில் நடக்கும். இந்தியா முழுவதிலும் இருந்து மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இந்த 2,391 பேர்களிலிருந்து, 890 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வதற்காக மனிதநேயம் பயிற்சி மையம் சார்பில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு மாதிரி நேர்முகத்தேர்வுகள், ஆளுமைக்கான வகுப்புகள், டெல்லிக்கு நேரில் அழைத்துச்சென்று, அதிகபட்சமாக ஒருமாத காலம் தங்குவதற்கும், உணவு மற்றும் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் இலவசமாக வழங்குவதற்கும் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று மனித நேய அறக்கட்டளை நிர்வாகி வசுந்தரா வெற்றி தெரிவித்தார்.
இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களோடு சென்னை-35, சி.ஐ.டி. நகரில் உள்ள இந்த மைய அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் பதிவு செய்துகொள்ளலாம் என இந்த மைய இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார். தங்கள் மையத்தில் படித்து மெயின் தேர்வில் வெற்றிபெற்ற 73 பேர்களுக்கும், சைதை துரைசாமி, மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.