மருத்துவப் படிப்புக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ரத்து செய்த தமது தீர்ப்பை, மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் ஜூலை 18-ம் தேதி தீர்ப்பளித்தது.
மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இரு நீதிபதிகள் இதனை அறிவித்தனர். மற்றொரு நீதிபதி இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் 3-ல் இருவர் நுழைவுத் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டதால் அதுவே இறுதித் தீர்ப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில், தீர்ப்பை வழங்கும் முன்பு நீதிபதிகள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், பொது நுழைவுத் தேர்வு நடத்தினால்தான் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஊழல் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை விற்பனை செய்வதைத் தடுக்க முடியும். பொது நுழைவுத் தேர்வு இல்லை என்றால் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலானவை நல்ல லாபம் சம்பாதிக்கும் தொழிலாக மருத்துவப் படிப்பை நடத்துவார்கள் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
i am wellcome to the above decition of indian medical council of india.