தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 4,431 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 4,431 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. ஆனால், அந்த எண்ணிக்கையில் 25 சதவீதம் பேர் மட்டுமே பட்டயப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பதாரர்களில் 4,000 பேர் மாணவிகள், 431 பேர் மாணவர்கள் ஆவர். பெண்களே இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.  கடந்த ஆண்டு சுமார் 3,800 பேர் மட்டுமே இந்தப் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
2 லட்சத்துக்கும் அதிகமானோர் காத்திருப்பு: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள்தான் தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். இந்தப் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மற்றும் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
ஆசிரியர் பட்டயப் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்கெனவே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.
அதோடு, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் அதிக காலியிடங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதும் இந்தப் படிப்பில் ஆர்வம் குறைவதற்கு ஒரு காரணம் என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆண்டுதான் சுமார் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். எனவே, புதிதாக பெரிய எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் இப்போதைக்கு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் இடையே இந்தப் படிப்புக்கு வரவேற்பு மிகவும் குறைவாக உள்ளது. ஆசிரியர் பட்டயப் படிப்பு வழங்குவதற்காக தமிழகத்தில் இப்போது 39 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் மட்டும் 2,720 இடங்கள் உள்ளன. இதுதவிர 500-க்கும் அதிகமான அரசு உதவி பெறும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன. ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு மட்டும் சுமார் 30 ஆயிரம் இடங்கள் உள்ளன.
இதில் கலந்தாய்வுக்கு மட்டும் 17 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கலந்தாய்வின் மூலம் இந்தப் படிப்பில் சுமார் 2 ஆயிரம் மாணவியர் மட்டுமே சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மூடப்படும் பயிற்சி நிறுவனங்கள்: ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு வரவேற்பு இல்லாததாலும், ஏற்கெனவே தேவைக்கும் அதிகமானோர் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளதாலும், ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் தங்களது அங்கீகாரத்தை ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திடம் திருப்பி ஒப்படைத்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் அதிகமான பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வரும் நிலையில், பி.எட். கல்லூரிகளைத் தொடங்குவதற்கு தனியாரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு: இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்தப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மே 17 முதல் ஜூன் 12 வரை விநியோகம் செய்யப்பட்டன.  இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 மாணவர்கள் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: