தமிழகத்தில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரத்தை உடனே வெளியிட வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதப் பட்டியலை 17–ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் திருப்பூரைச் சேர்ந்த பூபாலசாமி பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
எனது மகள் கவிப்பிரியா பிளஸ்–2 முடித்துவிட்டு என்ஜினீயரிங் கல்வியில் சேர்வதற்கு முயற்சி செய்கிறார். இதுபோல் வேறுபல மாணவர்களும் நல்ல என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்வதற்கான முயற்சியில் உள்ளனர்.
ஆண்டொன்றுக்கு பிளஸ்–2 தேர்வு எழுதும் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரையான மாணவர்களில், இரண்டரை லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர முயற்சிக்கின்றனர். இவர்களில் பலர் ஊரகப் பகுதியில் இருப்பவர்கள் என்பதால், கல்லூரிகளின் உண்மையான நிலவரங்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை.
தமிழகத்தில் 521 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 29 தவிர மீதியுள்ள கல்லூரிகள் அனைத்தும் சுயநிதிக் கல்லூரிகளாகும். இந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை ஏ.ஐ.சி.டி.இ. அளித்து வருகிறது. 2000–ம் ஆண்டுக்குப் பிறகு காளான்கள்போல் என்ஜினீயரிங் கல்லூரிகள் முளைக்கத் தொடங்கின.
எனவே ஒவ்வொரு கல்லூரிகளின் தரம் பற்றி தனித்தனியாக அறிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் 521 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் இணைப்பு வழங்கியுள்ள அண்ணா பல்கலைக்கழகம், அந்த கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், ரேங்க் பட்டியல் போன்ற விபரங்களை சேகரித்து வெளியிட்டால், அவற்றில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பயனளிக்கும்.
மேலும் ஒரே பெயரில் பல பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இதுவும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இப்படி 151 கல்லூரிகள் இயங்குகின்றன. உதாரணத்துக்கு, அருணை காலேஜ் ஆப் என்ஜினீயரிங் என்று ஒன்றும், அருணை என்ஜினீயரிங் காலேஜ் என்று மற்றொரு கல்லூரியும் உள்ளன. இதில் தரமானதை தேர்வு செய்ய முடிவதில்லை.
எனவே பல்வேறு குழப்பங்கள் வராமல் சரியான கல்லூரிகளில் சேர்வதற்காக அனைத்து கல்லூரிகளின் விவரங்களையும் (மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட விவரங்கள்), என்ஜினீயரிங் கல்வியில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அந்த விபரங்களை அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்வித்துறை ஆகியவை வழங்கும் குறிப்பேட்டில் (புக்லெட்) சேர்க்க வேண்டும்.
ஒரே பெயரில் மற்றொரு பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி அளிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளின் உண்மையான தகவல்களை அனைத்து மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கமிட்டி (ஏ.ஐ.சி.டி.இ), கல்வித்துறை போன்றவை கொடுப்பதற்கு வகை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுபோல் மேலும் பலர் மனுதாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்களை தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு வருமாறு:–
இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொரு என்ஜினீயரிங் கல்லூரிகளின் 2011–12–ம் ஆண்டுக்கான மாணவர் தேர்ச்சி விகிதப் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் உடனடியாக வெளியிட வேண்டும்.என்ஜினீயரிங் கல்வி சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கும் 17–ந்தேதிக்கு முன்பு, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் அந்த விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். இந்த வழக்கு 2 வாரங்களுக்குத் தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: