தமிழகம் முழுவதும் 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் 65 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு தமிழக வனத்துறையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் ஏற்பாடு செய்து இருந்தன. அதன்படி, நேற்று 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கியது.சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள நீச்சல் குளத்துக்கு அருகில் இந்த திட்டத்தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் ஆலமரக்கன்று ஒன்றை அங்கு நட்டு, அதற்கு தண்ணீர் ஊற்றினார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் வன வளத்தினை அதிகரிக்கவும், உயிர்ப் பன்மையினைப் பாதுகாத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், தமிழகத்தின் இயற்கை வளத்தைப் பேணிப்பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வாகன எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், காற்று மண்டலம் மாசு அடைந்து வருகிறது. மரங்கள் காற்று மண்டலத்தில் உள்ள சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கின்றன.

சூழலியல் சமன்பாட்டினை நிலை நிறுத்தவும், வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்குடனும், வனப் பகுதிகளில் மட்டுமின்றி, வனத்திற்கு வெளியே இருக்கும் காலி இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் ‘மாபெரும் மரம் நடும் திட்ட’த்தை செயல் படுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, தமிழ்நாடு முழுவதும் சென்ற ஆண்டு 64 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டு 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்–அமைச்சர் நேற்று சென்னை, மெரினா கடற்கரை சாலை ஓரத்தில் ஆலமரக்கன்றினை நட்டு தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் கட்டமாக பிப்ரவரி 24 முதல் 28 வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 6,500 கன்றுகள் வீதம் 2 லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். இந்த மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றி, பராமரித்து பாதுகாத்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், சாலையோரங்களில் உயரமான மரக்கன்றுகள் நட்டு, பாதுகாப்பு கூண்டு வைத்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவ மழை தொடங்கியவுடன், தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 625 மரக்கன்றுகள் வீதம் 61 லட்சத்து 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

இந்தப் பணியானது இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும், வடகிழக்கு பருவமழையினை ஒட்டி ஒரு மாவட்டத்திற்கு 5 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 1 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள், குறிப்பாக சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், தெரு ஓரங்களிலும் நடப்படவுள்ளன.இதில் சுமார் 50 விழுக்காடு மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு காவலர்களை பணி அமர்த்தியும், பாதுகாப்பு கூண்டுகள் பொருத்தியும், நீர் ஊற்றியும் பராமரிக்கப்பட உள்ளது. மீதமுள்ள மரக்கன்றுகள் அந்தந்த இடங்களில் உள்ள பயனாளிகளால் பராமரித்து பாதுகாக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு உள்ளிட்ட வறட்சியை தாங்கக் கூடிய மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: