Monthly Archives: February, 2013

அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில், மேல்நிலை கல்வியில் தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக கற்பிக்கப்படுகிறது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்து, ஒரு யூனிட் பாடம் மட்டுமே இருக்கும். தனியார் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் உள்ளது. தற்போதைய உலகில், கம்ப்யூட்டர் அறிவு இல்லாமல், 10ம் வகுப்பு வரை படித்தால், அது அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, தமிழக அரசு,6 முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டு முதல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை, அறிமுகப்படுத்த உள்ளது.இதற்காக, அரசு பள்ளி மாணவர்களின் விகிதம், தேவைப்படும் கம்ப்யூட்டர்கள், நியமிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கணக்கெடுத்துள்ளனர். வகுப்பு வாரியாக பாட புத்தகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தை, சிறப்பாக நடைமுறைப்படுத்த, பள்ளி கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் கட்டணம் உயர்வு அமலாகிறது

பிராட்பேண்ட் சேவைக்கான கட்டணத்தை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் உயர்த்தி உள்ளது. இக்கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும், 1.5 கோடி பேர்,”பிராட்பேண்ட்’ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில், 1 கோடி பேர் பி.எஸ்.என்.எல்., சேவையை பயன்படுத்துகின்றனர். தமிழக மற்றும் சென்னை தொலைபேசி வட்டத்தில், 9 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சிறிய, நடுத்தர மற்றும் பெரிய என பல வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப, திட்டங்களை அறிவித்துள்ளது. இத்திட்டங்களுக்கான கட்டணத்தை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சீரமைத்துள்ளது.மறு சீரமைப்பின் படி, புதிய கட்டண உயர்வு நாளை முதல் அமலாகும் என்று, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை தொலைபேசி வட்டம் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., நிறுவனம், கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. தனியார் தொலைபேசி நிறுவனங்களுடன் போட்டியை சமாளிக்க, கட்டண சீரமைப்பு அவசியமாகிறது. புதிய கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. மாத சந்தா வாடிக்கையாளர்களுக்கு, இப்புதிய கட்டண உயர்வு, உடனே அமலாகிறது. ஏற்கனவே, பிராட்பேண்ட் சேவையை பெற, ஓராண்டு, இரண்டாண்டு மற்றும் மூன்று ஆண்டு சந்தா செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் காலக்கெடு முடிந்த பின்னரே, கட்டண மறு சீரமைப்பு அமலாகும். கட்டண உயர்வை, வாடிக்கையாளர்களுக்கு, குறுஞ்செய்தியில் தெரிவித்து வருகிறோம். விரிவான கட்டண விவரங்களை, சென்னை தொலைபேசியின் இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அவர் கூறினார்.

திட்டத்தின் பெயர் பழைய கட்டணம் புதிய கட்டணம்
பி.பி.ஹோம் யு.எல்.டி., 499 499 525
பி.பி.ஹோம் காம்போ யு.எல்.டி., 625 625 650
பி.பி.ஹோம் காம்போ யு.எல்.டி., 750 750 800
பி.பி.ஹோம் யு.எல்.டி., 750 750 800
பி.பி.ஜி. ஹோம் காம்போ யு.எல்.டி., 850 850 900
பி.பி.ஹோம் காம்போ யு.எல்.டி., 900 900 950

ரேசன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும் பணி மார்ச் 15 வரை நீட்டிப்பு

ரேசன் கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணியை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவு அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேசன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி கடந்த ஜனவரி 1-ம் தேதி துவங்கியது. தற்போது குடும்ப அட்டைதாரர்களின் கோரிக்கையை ஏற்று வரும் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அறிவியல் பாடத்திற்கான செய்முறை பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பித்து அதற்கான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு போதிய வருகை நாட்கள் இருந்தும் கருத்தியல் (தியரி) தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் விடுபட்டுள்ள தனித்தேர்வர்கள் மட்டும் தியரி தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மேலும் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் செய்முறைத்தேர்வு எழுத இன்னொரு நாளில் அனுமதிக்கப்படுவார்கள். மேற்கண்ட தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்: 2020 தேர்வு மையங்களில் மேல்நிலைப் பொதுத்தேர்வினை எழுத உள்ள 5,769 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ–மாணவிகளுக்கும், சிறப்பான பங்களிப்பை நல்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், முதுகலை ஆசிரிய பெருமக்களுக்கும் கல்விச்சோலையின் இனிய நல்வாழ்த்துக்கள்.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

பிளஸ்–2 தேர்வு (வெள்ளிக்கிழமை) தொடங்கி 27–ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5,769 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 பேர் மாணவிகள். அதாவது மாணவர்களை விட 56 ஆயிரத்து 958 மாணவிகள் கூடுதலாக தேர்வில் கலந்துகொள்கிறார்கள். இதற்காக 2020 தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை மாநகரில் 406 பள்ளிகளில் இருந்து 51 ஆயிரத்து 531 பேர் 140 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் மாணவர்கள் 23 ஆயிரத்து 717 பேர். மாணவிகள் 27 ஆயிரத்து 814 பேர் ஆவர். புதுச்சேரியில் 30 தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 919 மாணவிகள் உள்பட 12 ஆயிரத்து 611 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். பள்ளி மாணவர்களைத்தவிர, தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), பார்வை இழந்தோர், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் உள்பட இதர மாற்றுத்திறனாளிகளுக்கான சொல்வதை எழுதுபவர் ஆகியோருக்கு தேர்வில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேர்வுக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும். மேலும் ஒரு மொழிப்பாடம் கிடையாது.

தேர்வுக்கான வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைந்துள்ளதா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து அமைக்கப்பட்டு இருக்கின்றன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வினாத்தாள் காப்பு மையங்களிலும் கூடுதல் கண்காணிப்புக்கு இரவு காவலர்கள் பணியாற்றுவார்கள். ஆய்வு அதிகாரிகள் அடிக்கடி மையங்களுக்கு சென்று கண்காணிப்பார்கள்.

தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனினும் முன்னேற்பாடாக ஜெனரேட்டர் வசதி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் நல்ல முறையில் செய்யவும் பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் போலீஸ் எஸ்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி, சப்–கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். தேர்வுக்குழுவினர் தேர்வு மையங்களை பார்வையிட்டு முறைகேடுகள், எதுவும் நடைபெறா வண்ணம் கண்காணிப்பார்கள்.

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்களும் மாவட்டங்களில் தேர்வு நாட்களில் கண்காணிப்பு குழுக்களுடன் தேர்வு மையங்களை மேற்பார்வையிடுவார்கள். தேர்வு மையங்களை பார்வையிட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். ஒருசில மையங்களில் கண்காணிப்புக்குழுவினர் தேர்வு தொடங்கி முடியும் வரை அங்கேயே தங்கி தேர்வு பணிகளை பார்வையிடுவார்கள்.

தொழிற்படிப்பு சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய 6 பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 11, 14, 18, 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. அந்த தேர்வுகளின்போது, அனைத்து தேர்வு மையங்களிலும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாக இருந்து தேர்வை நடத்துவார்கள். மேலும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிறப்பு பார்வையாளர்களாக தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள்.

எக்காரணம் கொண்டும் தேர்வு நேரத்தின்போது அந்த பள்ளியைச்சேர்ந்த தாளாளர்களோ, ஆசிரியர்களோ, பணியாளர்களோ தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக்கூடாது. தேர்வின்போது காப்பி அடித்தல், பிட் அடித்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்தகொள்ளல், விடைத்தாள் மாற்றல் செய்தல், ஆள்மாறாட்டம் செய்வது ஆகிய செயல்பாடுகள் ஒழுங்கீனமாக கருதப்பட்டு, அத்தகை செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விதிமுறைகளின்படி உரிய தண்டனை வழங்கப்படும்.

ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையம் ரத்துசெய்யவும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பள்ளிக்கல்வி இயக்குனர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்மாறாட்டத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வர்களின் போட்டோக்கள் பெயர் பட்டியலிலும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலும் அச்சிடப்பட்டு உள்ளது.

தமிழ்வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 5 லட்சத்து 59 ஆயிரத்து 964 மாணவ–மாணவிகள் தமிழ்வழியில் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் பகுதி–3–ல் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களையும் தமிழ்வழியோடு ஆங்கிலவழி வினாக்களும் ஒரே வினாத்தாளில் இடம்பெறும் வண்ணம் இருமொழி வடிவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு, வணிகவியல், பொருளாதாரம், கணக்கியல் ஆகிய பாடங்களுக்கு சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய மொழிகளிலும் வினாத்தாள் வழங்கப்படும். அந்த வினாத்தாள்களில் ஆங்கிலவழியிலும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

ஜெயில் கைதிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிடும் வகையில் ஜெயிலிலே கடந்த சில ஆண்டுகளாக தேர்வு மையம் அமைக்கப்பட்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வுக்கு சென்னை புழல் ஜெயிலில் தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டு அங்கு 40 கைதிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

இவ்வாறு வசுந்தராதேவி கூறி உள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை மற்றும் தொழில்கல்வி பட்டப் படிப்புகளுக்கான தேர்வின் மறுமதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டது.

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை மற்றும் தொழில்கல்வி பட்டப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டன. இந்த தேர்வின் மறுமதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டது. மறுமதிப்பீடு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) மாணவ–மாணவிகள் தெரிந்துகொள்ளலாம் என்று பதிவாளர் கோட்டீஸ்வர பிரசாத் அறிவித்துள்ளார்

வி.ஏ.ஓ. பணிக்கு 4–வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

வி.ஏ.ஓ. பணிக்கு 4–வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5–ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவிகளில் 2012–2013–ம் ஆண்டுக்கான காலி பணி இடங்களை நிரப்புவதற்காக 30.9.2012 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் வெற்றிபெற்று வி.ஏ.ஓ. பதவிக்கு தற்காலிகமாக தேர்வுசெய்யப்பட்ட தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் 3 கட்டங்களாக நடத்தப்பட்டு, அதன்மூலம் 1,685 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த நிலையில், எஞ்சியுள்ள 185 காலி பணி இடங்களை நிரப்புவதற்கு 4–வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு 5–ந்தேதி காலை 8.30 மணிக்கு சென்னை பாரிமுனையில் உள்ள (பிராட்வே பஸ் நிலையம் அருகில்) டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

கவுன்சிலிங் அழைக்கப்பட்டுள்ள தேர்வர்கள் தங்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் செய்யப்பட்ட (அட்டஸ்டேஷன்) ஜெராக்ஸ் நகல்களையும் கவுன்சிலிங்கிற்கு தவறாமல் கொண்டுவர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்கிற்கு தேர்வர்கள் அனுமதிக்கப்படுவது அவர்கள் பரிசீலிக்கப்படும்போது உள்ள காலி பணி இடங்களை பொறுத்தே ஒதுக்கீடு செய்யப்படும். எனவே, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கு உறுதிகூற இயலாது. விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங்கிற்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.இவ்வாறு விஜயகுமார் கூறி உள்ளார்.

2013-14-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் 28 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

2013-14-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் 28 ஆம் தேதி  பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். நாட்டில் நிதிப்பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், இதை கட்டுக்குள் கொண்டு வருவது இந்த பட்ஜெட்டில் அவர் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால் என்று அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதே சமயம், அதிகரித்து வரும் விலைவாசி பிரச்னைக்கும் தீர்வு கண்டாக வேண்டிய நிலையில், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது என்பதால், இந்த பட்ஜெட்டில் மக்கள் நலத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் சிதம்பரம் இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்டார். நடப்பு நிதியாண்டில் பணவீக்க விகிதம் 6.2 சதவிகிதத்திலிருந்து 6.6 சதவிகிதத்துக்குள் இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது. மேலும், வரும் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.1 சதவிகிதத்திலிருந்து 6.7 சதவிகிதத்துக்குள் இருக்கும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் புதிய அமைச்சராக வைகை செல்வன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் புதிய அமைச்சராக வைகை செல்வன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முதுநிலை, இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வு பாடத்திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான தேர்வுகளுக்கு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு 10 ஆண்டுகள் வரை ஆகின்றன.
எனவே, இப்போதைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை மாற்றும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டதால், இதில் மாற்றம் எதுவும் இருக்காது எனவும் தெரிகிறது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் புதிய அமைச்சராக வைகை செல்வன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கில புத்தக பதிப்பாளர்கள், பொது நூலக துறை கட்டுப்பட்டில் இயங்கும் நூலகங்களுக்கு புத்தகங்களை விற்பனை செய்ய வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நூலகத் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கில புத்தக பதிப்பாளர்கள் பொது நூலக துறை கட்டுப்பட்டில் இயங்கும் நூலகங்களுக்கு புத்தகங்களை விற்பனை செய்யவரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, நூலகத் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

செய்திகுறிப்பு: கடந்த, 2010 மற்றும் 11ம் ஆண்டு, தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் பதிப்புகளை, பொது நூலகத் துறை வாங்குகிறது. புத்தகங்களை, பொது நூலகங்களுக்கு வழங்க, http://www.connemarapubliclibrarychennai.com என்ற இணையதளத்தில் உள்ள, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை, பூர்த்தி செய்து, புத்தகங்களின், மாதிரி பிரதிகளுடன், படிவம்-ஏ, படிவம்-பி ஆகியவற்றை இணைத்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், மாவட்ட நூலக ஆணை குழுக்களில், நேற்று, 21ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் வேண்டுகோளை ஏற்று, புத்தகங்களின் மாதிரி பிரதிகளை, அந்தந்த மாவட்ட நூலக ஆணை குழுக்களில் சமர்ப்பிக்க, இம்மாதம், 28ம் தேதி வரை, கால நீட்டிப்பு செய்து அறிவிக்கப்படுகிறது. பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், 044-28524263, 044-28412087 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். இதுவரை, 15 ஆயிரம் பதிப்பாளர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பித்துள்ளனர். 2010, 11 ஆகிய இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து, 25 கோடி ரூபாய் அளவிற்கு, புத்தகங்கள் வாங்கப்பட உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தக தேர்வுக்குழு, புத்தகங்களின் மாதிரி பிரதிகளை ஆய்வு செய்து, தரமான புத்தகங்களை தேர்வு செய்து, பரிந்துரைக்கும். அதன் அடிப்படையில், பொது நூலகத் துறை, புத்தகங்களை வாங்கும். இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து, 25 கோடி ரூபாய் அளவிற்கு, தமிழக அரசு புத்தகங்கள் வாங்குவதால், பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் 65 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு தமிழக வனத்துறையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் ஏற்பாடு செய்து இருந்தன. அதன்படி, நேற்று 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கியது.சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள நீச்சல் குளத்துக்கு அருகில் இந்த திட்டத்தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் ஆலமரக்கன்று ஒன்றை அங்கு நட்டு, அதற்கு தண்ணீர் ஊற்றினார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் வன வளத்தினை அதிகரிக்கவும், உயிர்ப் பன்மையினைப் பாதுகாத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், தமிழகத்தின் இயற்கை வளத்தைப் பேணிப்பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வாகன எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், காற்று மண்டலம் மாசு அடைந்து வருகிறது. மரங்கள் காற்று மண்டலத்தில் உள்ள சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கின்றன.

சூழலியல் சமன்பாட்டினை நிலை நிறுத்தவும், வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்குடனும், வனப் பகுதிகளில் மட்டுமின்றி, வனத்திற்கு வெளியே இருக்கும் காலி இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் ‘மாபெரும் மரம் நடும் திட்ட’த்தை செயல் படுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, தமிழ்நாடு முழுவதும் சென்ற ஆண்டு 64 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டு 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்–அமைச்சர் நேற்று சென்னை, மெரினா கடற்கரை சாலை ஓரத்தில் ஆலமரக்கன்றினை நட்டு தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் கட்டமாக பிப்ரவரி 24 முதல் 28 வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 6,500 கன்றுகள் வீதம் 2 லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். இந்த மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றி, பராமரித்து பாதுகாத்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், சாலையோரங்களில் உயரமான மரக்கன்றுகள் நட்டு, பாதுகாப்பு கூண்டு வைத்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவ மழை தொடங்கியவுடன், தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 625 மரக்கன்றுகள் வீதம் 61 லட்சத்து 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

இந்தப் பணியானது இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும், வடகிழக்கு பருவமழையினை ஒட்டி ஒரு மாவட்டத்திற்கு 5 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 1 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள், குறிப்பாக சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், தெரு ஓரங்களிலும் நடப்படவுள்ளன.இதில் சுமார் 50 விழுக்காடு மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு காவலர்களை பணி அமர்த்தியும், பாதுகாப்பு கூண்டுகள் பொருத்தியும், நீர் ஊற்றியும் பராமரிக்கப்பட உள்ளது. மீதமுள்ள மரக்கன்றுகள் அந்தந்த இடங்களில் உள்ள பயனாளிகளால் பராமரித்து பாதுகாக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு உள்ளிட்ட வறட்சியை தாங்கக் கூடிய மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து 21 நாட்கள் பணிக்கு வரவில்லை என்பதற்காக "போலீஸ்காரரை பணியில் இருந்து நீக்கியது சரியல்ல" மீண்டும் வேலை வழங்க, ஐகோர்ட்டு உத்தரவு

தொடர்ந்து 21 நாட்கள் பணிக்கு வரவில்லை என்பதற்காக போலீஸ்காரரை பணியில் இருந்து நீக்கியது சரியல்ல என்றும், மீண்டும் போலீஸ் வேலை வழங்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆப்பனூரை சேர்ந்தவர் உமயசேகர்(வயது 38). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் வருமாறு:–நான், 1997–ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தேன். 9 ஆண்டுகளாக எந்தவித புகாரும் இல்லாமல் பணியாற்றினேன். ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது 6.7.2006 அன்று விடுமுறையில் சென்றேன். அந்த சமயத்தில் என் மனைவி கர்ப்பமாக இருந்தார். அவரை அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். என் மனைவிக்கு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே குழந்தை பிறந்ததால், அவருடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் பிரசவத்துக்கு பணம் இல்லாததால், பணம் பெறுவதற்காக கடுமையாக அலைந்தேன். இந்த நிலையில் தொடர்ந்து 21 நாட்கள் பணிக்கு வரவில்லை என்று கூறி என்னை பணியில் இருந்து ஓடி விட்டதாக அறிவித்தனர். அதன்பின்பு, என்னை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து 28.8.2007 அன்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.இதை எதிர்த்து ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி, உள்துறை செயலாளர் ஆகியோருக்கு அப்பீல் செய்தேன். அவர்கள் எனது அப்பீலை நிராகரித்து விட்டனர். தற்போது 7 வயதில் குழந்தை உள்ளது. எனது வருமானத்தை நம்பித்தான் எனது குடும்பம் உள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் உடனடியாக என்னால் பணிக்கு திரும்ப முடியவில்லை. எனவே, எனக்கு மீண்டும் போலீஸ் வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.கணபதிசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவில் கூறி இருப்பதாவது:–‘‘உரிய காரணங்கள் எதுவும் இல்லாமல் வேண்டுமென்றே 6 மாதங்கள் தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்தால் மட்டுமே அதிகபட்ச தண்டனையான பணி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனுதாரரை பொறுத்தமட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் உரிய நேரத்தில் பணியில் சேர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு அதிகபட்ச தண்டனையான பணி நீக்கம் என்பது சரியல்ல. எனவே, மனுதாரரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.’’இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள், மாநிலம் முழுவதும் நேற்று துவங்கின. இதில், 10.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச், 27ல் துவங்கி, ஏப்ரல் 12 வரை நடக்கிறது. சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்ததன் காரணமாக, அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும், அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வுக்கு முன்னதாக, இந்த செய்முறைத் தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும் துவங்கியது. மொத்தம், 25 மதிப்பெண்களுக்கு, செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. மீதமுள்ள, 75 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடக்கும். எழுத்து தேர்வை எழுதும் அனைத்து மாணவ, மாணவியரும், செய்முறைத் தேர்விலும் பங்கேற்கின்றனர். அதன்படி, 10.5 லட்சம் மாணவ, மாணவியர், இந்த தேர்வில் பங்கேற்றுள்ளனர். மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, இம்மாதம், 28ம் தேதிக்குள், செய்முறைத் தேர்வுப் பணிகளை முடித்து, அதன் விவரங்களை, தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, "தத்கால்’ திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், உரிய இணைப்புகளுடன், மேலும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 22,23 தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, “தத்கால்’ திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், உரிய இணைப்புகளுடன், மேலும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 22,23 தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.தேர்வுத்துறை அறிவிப்பு: “ஆன்-லைன்’ வழியில், ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள், “கன்பார்மேஷன் காப்பி’ என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய இணைப்புகளுடன், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், 50 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி, சுய முகவரியிட்ட கவரினையும், சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப எண், 1251000001 முதல், 1251001000 வரையில் உள்ள தேர்வர்கள், நாளை நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 1001 முதல், 2099 வரையிலான தேர்வர்கள், 23ம் தேதி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இப்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் மாணவ, மாணவியருக்கு மட்டுமே, “ஹால் டிக்கெட்’ வழங்கப்படும். இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் எவ்வித குளறுபடியும் இன்றி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் சிவபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 1ம் தேதி துவங்குகின்றன. 8.50 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். கடந்தாண்டு, 1,500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இத்தாண்டு, 2,000 மையங்களில் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் சிவபதி, “பிளஸ் 2 தேர்வில், எவ்வித குளறுபடிகளும் இன்றி, மாணவர்களின் நலன் பாதிப்பின்றி, தேர்வுகள் நடைபெற வேண்டும்’ என அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து, தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தாண்டு, 8.50 லட்சம் மாணவர்கள், தேர்வு எழுத தயாராக உள்ளனர். தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய வினாத்தாள், தேர்வு நெருங்கும் நேரத்தில், அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாக, தேர்வு மையங்கள், அதிகரிக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையத்திற்கு அனுமதி கேட்டு, ஏராளமான பள்ளிகள், விண்ணப்பத்திருந்தன. அதில், 2,000 பள்ளிகளில், தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு பணியில், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுவர். 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவர். கண்டறியப்பட்டுள்ள பிரச்னைக்குரிய தேர்வு மையங்களில், தேர்வு முடியும் வரை, அந்த சமயத்தில், “ஸ்டேண்டிங் ஸ்குவாட்’ அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். ஒரு மாவட்டத்திற்கு குறைந்தபட்சம், 30 முதல் 40 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகள், மாணவர்களை, “பிட்’ அடிக்க உதவி செய்வதாக, புகார்கள் வந்துள்ளன. அந்த பள்ளிகள் மீது, அதிக கவனம் செலுத்தப்படும். மாணவர்கள், “பிட்’ அடித்து சிக்கினால், அவர்கள் மீண்டும் தேர்வு எழுத முடியாது. மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர, முக்கிய பாடமாக கருதப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாட தேர்வின் போது, அண்ணா பல்கலை ஆசிரியர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் பணி நியமனம், 4 மாதங்களாக, இழுபறியில் உள்ளது. தேர்வு பெற்றவர்கள், எப்போது வேலை கிடைக்கும் என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்களை பணி நியமனம் செய்வதற்கு, கடந்த ஆண்டு, மே, 13ல், டி.ஆர்.பி., தேர்வை நடத்தியது. பின், ஜூலை, 8ல், தேர்வு முடிவை வெளியிட்டு, ஒரு இடத்திற்கு, இருவர் வீதம், அதே மாதத்தில், 22 மற்றும் அக்டோபர், 4 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியது. கடந்த ஆண்டு, அக்டோபர், 18ம் தேதி, இறுதி தேர்வுப் பட்டியல் வெளியானது. இதேபோல், அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு, கடந்த ஆண்டு ஏப்ரல், 22ல் நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், அக்டோபர், 18ல், தேர்வுப் பட்டியல் வெளியானது. இரு தேர்வுகளிலும், தேர்வு பெற்ற தேர்வர்களின் விவரங்களை, உயர்கல்வித்துறைக்கு, டி.ஆர்.பி., அனுப்பியது. எனினும், 4 மாதங்களாக, இவர்களுக்கு பணி நியமனம் வழங்க, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்குள், அனைவரையும் பணி நியமனம் செய்ய, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்வு பெற்றவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் நியமனத்திற்கு, போலீசாரிடமிருந்து நற்சான்றிதழ் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே சாத்தியம்’ என்ற நடை முறையை அறிமுகப்படுத்த, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் நியமனத்திற்கு, போலீசாரிடமிருந்து நற்சான்றிதழ் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே சாத்தியம்’ என்ற நடை முறையை அறிமுகப்படுத்த, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதனால், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பள்ளிக்கூடத்தில், மாணவ மாணவியரை, கண்டிப்பு என்ற பெயரில், ஆசிரியர்கள் பிரம்பால் அடித்தோ, உடல் ரீதியாக துன்புறத்தவோ கூடாது என, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை அமல்படுத்தும் முகமாக, ஆந்திராவில், ஆசிரியர்கள் நியமனத்தில், புது நடைமுறையை கொண்டு வர, மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், இதற்கு முன் வேலை பார்த்த இடங்களில், எப்படி நடந்து கொண்டார்; வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக, போலீசாரிடம் இருந்த சான்றிதழ் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், போலீசாரிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் இருந்தால் தான், நியமனம் வழங்கப்படும் என, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஆசிரியர்கள் பொறுப்பு பற்றியும், அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை, ஆண்டு தோறும் பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். இதில் தவறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் வலியுறுத்தியுள்ளது. ஆனால், மாநில அரசு இதற்கு, மாறாக நடந்து கொள்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பள்ளி கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், “மாணவர்களை அடித்து துன்புறுத்தாத ஆசிரியர்களை, மாணவர்கள் எதிர்காலம் கருதி தேர்வு செய்வதற்கு இது சிறந்த வழி. ஆசிரியர்களின் முந்தைய கால வரலாற்றின் மூலமே, தண்டிக்காத ஆசிரியர்களை தேர்வு செய்ய முடியும்’ என்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 1 தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியிடப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 1 தேர்வுக்கான தற்காலிக விடைகளை வெளியிட்டுள்ளது.

குரூப் – 1 தேர்வுக்கான தற்காலிக விடைகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. விடைகளில், ஆட்சேபம் இருந்தால், அதுகுறித்து, ஒரு வாரத்திற்குள், தேர்வாணையத்திடம் விண்ணப்பிக்கலாம்.துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., – வணிகவரி உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, கடந்த, 16ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. இதில், 1.26 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வின் தற்காலிக விடைகள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. விடைகளில் ஆட்சேபம் இருந்தால், ஒரு வாரத்திற்குள், தேர்வர்கள், தங்களது கருத்துக்களை, தேர்வாணையத்திடம் தெரிவிக்கலாம். தேர்வர்களின் ஆட்சேபணைகள் குறித்து, ஆய்வு செய்து, அதனடிப்படையில், இறுதி விடைகள் வெளியிடப்படும்.
 
வி.ஏ.ஓ., மதிப்பெண் வெளியீடு: கடந்த ஆண்டு, செப்., 30ல், வி.ஏ.ஓ., தேர்வு நடந்தது. 6.5 லட்சம் பேர் பங்கேற்ற, இந்த தேர்வின் மதிப்பெண்கள், தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும், மூன்று கட்ட, “கட்-ஆப்’ மதிப்பெண் விவரங்களும், இன சுழற்சி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முறைகேடுகளை தடுக்க பறக்கும் படைகள் அமைத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வு 27ம் தேதி துவங்கி ஏப்., 12ம் தேதி வரை நடக்க உள்ளது. மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் 93 தேர்வு மையங்களும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் 137 மையங்களிலும் நடக்கிறது. பிளஸ் 2 தேர்வினை 17 ஆயிரத்து 639 மாணவர்களும், 17 ஆயிரத்து 552 மாணவிகளும் என 35 ஆயிரத்து 191 பேர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வினை 19 ஆயிரத்து 921 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.புதிய மையங்கள் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி புதியதாக 7 தேர்வு மையங்கள் துவக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பெருமங்கலம் அரசு பள்ளி, சோமண்டார்குடி அரசு பள்ளி, கள்ளக்குறிச்சி ஆர்.ஆர்.கேம்பிரிட்ஜ் ஆகிய பள்ளிகளில் புதியதாக தேர்வு மையம் அமைகிறது. பிளஸ் 2 தேர்வுக்கு, திருநாவலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியசிறுவத்தூர் அரசு பள்ளி, அரகண்டநல்லூர் அரசு பள்ளி, கணக்கன்குப்பம் லூர்துஅன்னை பள்ளிகளில் புதிய மையங்கள் துவக்கப்படுகிறது.பறக்கும் படைகள் கலெக்டர் சம்பத் தலைமையில், தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், தேர்வின் போது முதன்மை கல்வி அலுவலர்கள் முனுசாமி தலைமையில் 6 பறக்கும் படை குழுக்களும், முருகன் (எஸ். எஸ்.ஏ.,திட்டம்) தலைமையில் 4 பறக்கும் படை குழுக்களும், விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர் செங்குட்டுவன் தலைமையில் 4 குழுக்களும், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் மணி தலைமையில் 4 குழுக்களும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மல்லிகா தலைமையில் 3 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சப்- கலெக்டர்கள், வருவாய்த் துறையினர் தலைமையிலும் குழுக்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர். தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், வினாத்தாள் காப்பாளர்கள், பறக்கும் படையினர் என 2,307 பேர் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். மாணவர்கள் நல்ல முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என கலெக்டர் சம்பத் கேட்டுக் கொண்டுள்ளார். பிட் அடித்தால்…தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்வுத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்வு மையத்தில் பிட் பேப்பர், புத்தகம் வைத்திருந்தால் அந்த மாணவர் ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். பிட் அடித்தல், காப்பியடித்தால் இரண்டாண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை மிரட்டுவது, மற்ற மாணவரின் பேப்பரை பிடுங்கி எழுதுவது போன்றவற்றில் ஈடுபட்டால், அந்த மாணவர்கள் தேர்வு எழுத நிரந்தர தடை விதிப்பதோடு, போலீசில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகாரம் ரத்து? தேர்வு மையத்தில் தவறாக தேர்வு எழுதப்படுவது தெரிந்தால், தேர்வு மைய தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளியாக இருந்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். தேர்வு மையத்திற்கு மொபைல் போன், பேஜர் எடுத்து வரக்கூடாது. மீறி வந்தால் போலீசில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வின் போது மாணவர்கள் உரிய நேரத்தில் செல்வதையும், தேர்வு முடிந்து வீட்டிற்கு வருவதையும் பெற்றோர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும். உடல் உபாதை தராத உணவுகளை வழங்கி பெற்றோர்கள் உதவிட வேண்டும்.

புதுச்சேரி தூர்தர்ஷனில் இன்று 20ம் தேதி மாலை 5.30 மணிக்கு, தொலைப்பாலம் நிகழ்ச்சியில், "தேர்வு உங்கள் வசம்’ என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது

பயமின்றி எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வெழுத, புதுச்சேரி தூர்தர்ஷனில் மாணவர்களுக்குப் பாடவாரியாக விளக்கம் அளிக்கப்பட உள்ளது. புதுச்சேரி தூர்தர்ஷன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சித்திரப்பாவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூர்தர்ஷனில் இன்று 20ம் தேதி மாலை 5.30 மணிக்கு, தொலைப்பாலம் நிகழ்ச்சியில், “தேர்வு உங்கள் வசம்’ என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. மாணவர்கள், தேர்வினைப் பயமின்றி எதிர்கொள்ளும் விதம், தெளிவாக விடையளித்து அதிக மதிப்பெண்கள் பெற பாடவாரியாக துறை வல்லுனர்களிடம் விளக்கம் பெறும் விதமாக நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. இன்று (20ம் தேதி) தமிழ்ப் பாடம் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதில் உரைநடை, கவிதை, கதை, கட்டுரை, செய்யுள், இலக்கணம் போன்ற பகுதிகளில் சந்தேகம் உள்ளவர்களுக்கு ”ப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி ஆசிரியை பூங்குழலி விளக்கம் அளிக்கிறார். நாளை (21ம் தேதி) ஆங்கிலப் பாடம் குறித்து நாவலர் பள்ளி ஆசிரியை ஜெயஸ்ரீ, வரும் 27ம் தேதி கணிதப்பாடம் குறித்தும், 28ம் தேதி அறிவியல் பாடம் குறித்தும் மார்ச் 3ம் தேதி சமூக அறிவியல் பாடம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 0413-2272487, 2272488 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தில், "சிடி’யில், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தில், “சிடி’யில், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்காக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. தொலைதூர பகுதியில் வாழும் பின்தங்கிய மக்கள், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகம் மூலம் கல்வி கற்று வருகின்றனர். தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை மற்றும் பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் கல்வி கற்கின்றனர். திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகம் மட்டுமே ஆசிரியராக உள்ளதால், அதற்கேற்ப சுவாரசியமாக, பாடங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்பத்தில், மாணவர்களுக்கு பாடங்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, “சிடி, டேப்லெட்’ மூலம் பாடங்கள் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் சந்திரகாந்தா கூறியதாவது: முதுகலை தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட பாடங்கள், மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில், “சிடி’யில் வழங்கப்பட உள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு குறித்து, தமிழறிஞர்கள் கு.வே.பாலசுப்ரமணியன், கந்தசாமி, தமிழன்னல் உள்ளிட்டோரின் சொற்பொழிவு, “சிடி’யில் இடம் பெறும். இதன் மூலம், மாணவர்கள் வீட்டிலிருந்த படி, சொற்பொழிவு மூலமாக, எட்டுத்தொகை, பத்துப்பாட்டை எளிதில் படிக்கலாம். மாணவர்கள் மட்டுமல்லாமல், தமிழார்வம் உள்ளவர்களுக்கும், “சிடி’ பெரிதும் உதவும். இதற்காக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. ஓராண்டுக்குள், இப்பணி முடியும். இவ்வாறு, சந்திரகாந்தா கூறினார்.

முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி தகவலை வெளியிட்டுள்ளது.

முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. சமீபத்தில், 3,000 முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான, தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய மூன்று பாடங்களில் மட்டுமே, தமிழ்வழிப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக, ஏராளமான முதுகலை பட்டதாரிகள்  டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர்.

உண்மையில், எந்தெந்த கல்லூரிகளில், முதுகலை, தமிழ்வழிப் பிரிவு பாடத் திட்டங்கள் உள்ளன என்ற விவரங்களை அறிய, அனைத்து பல்கலைகளுக்கும், டி.ஆர்.பி., கடிதம் அனுப்பி, விவரம் கேட்டது.தற்போது, ஒரு சில பல்கலைகள், டி.ஆர்.பி.,க்கு பதில் அளித்துள்ளன. அதில், “எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், மேற்குறிப்பிட்ட பாடங்களில், தமிழ்வழிப் பிரிவு இல்லை’ என, தெரிவித்துள்ளன.

இந்த பதிலைப் பார்த்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள் குறிப்பிட்டுள்ள பாடங்கள், சம்பந்தப்பட்ட பல்கலையில், தமிழ்வழிப் பிரிவு இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இதன் மூலம், தேர்வர்கள் சிலர், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.எனவே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டில், வேலை கோருவோரின் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டு பட்டியல் இறுதி செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், தமிழ்வழி தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.

பாடநூல் கழக செயலராக இருக்கும் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார். பாடநூல் கழக செயலர் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மெட்ரிக் இயக்குனராக இருந்த செந்தமிழ்ச் செல்வி, டிசம்பரில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. விரைவில், பள்ளி பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இதனால், தேர்வுத்துறை இயக்குனர், தேர்வுப் பணிகளில், முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதை அறிந்து, அவரை, மெட்ரிக் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தமிழக அரசு விடுவித்துள்ளது. பாடநூல் கழக செயலராக இருக்கும் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 – செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள்

முதுநிலை விரிவுரையாளர்களாக தேர்வு பெற்ற, 33 பேரின் பட்டியலை ரத்து செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.

அரசு ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் பணியாற்ற, 33 முதுநிலை விரிவுரையாளர்களை தேர்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான போட்டித் தேர்வு, கடந்த ஆண்டு, மார்ச், 4ல் நடந்தது. 560 பேர், தேர்வை எழுதினர். கடந்த ஆண்டு இறுதியில், ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், 33 பேர், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். பின், எழுத்துத் தேர்வு அடிப்படையில், தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. எனினும், இந்தப் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகத்திடம், இன்னும், டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை. இதற்கான காரணங்கள் குறித்து கேட்டபோது, துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்த பணிக்கு வருவோர், திறமைசாலிகளாக, புத்தி கூர்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியரைப் போல், மிக மிக குறைவான மதிப்பெண்களை வாங்கி உள்ளனர். எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விவாதித்து, முடிவு எடுக்கப்படும். தேர்வுப் பட்டியல் ரத்தாவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. புதிதாக தேர்வை நடத்தி, திறன் வாய்ந்தோர், தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்ட நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவுகிறது.

 அரசு கல்லூரிகளில், 1,093 பணியிடங்களும், அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில், 3,120 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. இப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. டி.ஆர்.பி., மூலம் போட்டி தேர்வு நடத்தாமல், பணி அனுபவம், நேர்முக தேர்வின் மூலமாக தேர்வு நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டது. பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15 மதிப்பெண்ணும், நேர்முக தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும், பி.எச்டி., பட்டத்துக்கு, 9 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. பி.எச்டி., பட்டம் பெறாமல் எம்.பில்., பட்டத்துடன் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், 6 மதிப்பெண்ணும், முதுகலை பட்டத்துடனம், நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால், 5 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. போட்டி தேர்வு மூலம் தேர்வு நடைபெறாமல், நேர்முக தேர்வுக்கும், அனுபவத்துக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால், முறைகேடுகள் அதிகளவில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போட்டி தேர்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவி வருகிறது. ஒரு சீட் 10 லட்சம்: தமிழகத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்கள், கல்லூரி நிர்வாகம் மூலமே நிரப்பப்படுகின்றன. இதனால், அதிகளவில் பணம் விளையாடுவதாகவும் கூறப்படுகிறது. இப்பணியிடங்கள், ஏழு முதல் 10 லட்ச ரூபாய் வரை விலை போவதாகவும் கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை அரசு நிரப்புகிறது. ஆனால், தமிழகத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை, கல்லூரி நிர்வாகங்களே நிரப்புகிறது. இதனால், அதிகளவில் முறைகேடுகள் நடைபெறுகிறது. எனவே, தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தில், திருத்தம் கொண்டு வந்து, அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை அரசே நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயலர் பிச்சாண்டி கூறியதாவது: மாணவர்களுக்கான நேர்முக தேர்வுகளையே ரத்து செய்ய போராடும் நிலையில், நெட், ஸ்லெட் தேர்வுகளில் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு வைப்பது தவறான செயல். போட்டி தேர்வு நடத்தாமல், இப்போது இருக்கும் தேர்வு முறைகளிலேயே, ஒழுங்குபடுத்தி, நேர்மையான தேர்வு நடைபெற வேண்டும். கல்லூரி ஆசிரியர் தேர்வு பற்றி, அமைச்சர் தலைமையிலான குழு விரைவில் விவாதித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு பிச்சாண்டி கூறினார்.

மாநிலம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பதவி உயர்வு பேனலில் பெயர் இடம்பெற்றுள்ள தலைமையாசிரியர்கள், "ரகசிய அறிக்கை’ (கான்பிடென்ஷியல் ரிப்போர்ட்) பெற உயர் அதிகாரிகளை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

 தமிழகத்தில் அரசு உயர்நிலை பள்ளிகளில், 2006ம் ஆண்டு தலைமையாசிரியர்களாக சேர்ந்த 120 பேர், பணிமூப்பு அடிப்படையில் இந்தாண்டுக்கான டி.இ.ஓ., பதவி உயர்வு பேனலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், தலைமையாசிரியராக பணியாற்றியபோது, அவர்களுக்கு உயர் அதிகாரியாக இருந்த டி.இ.ஓ.,க்கள், சி.இ.ஓ.,க்களிடம், தங்களின் பணிக்கால செயல்பாடுகள் குறித்து “ரகசிய அறிக்கை’ பெற்று, அதை பள்ளி கல்வி இயக்குனருக்கு சமர்ப்பிக்க வேண்டும். பேனலில் நீடிக்க ஒரு தலைமையாசிரியருக்கு இது மிக முக்கிய பணி. இந்த நடைமுறை, பேனலில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 2006ம் ஆண்டு முதல் பணியாற்றிய, உயர் அதிகாரிகளை அவர்கள் தேடி அலைகின்றனர். அவர்கள் பணிக்காலத்தில் டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்களாக பணியாற்றிய பலர் வெளி மாவட்டங்களிலும், பணி ஓய்வு பெற்று அவர்கள் எங்கே உள்ளார்கள் என்றே தெரியவில்லை. அவர்களின் முகவரி தேடி தலைமையாசிரியர்கள் அலைகின்றனர். இதில் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். இதனால் “ரகசிய அறிக்கை’யை எப்படி பெறுவது என்று தெரியாமல் தலைமையாசிரியர்கள் தத்தளிக்கின்றனர். தமிழ்நாடு அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது: இம்முறை நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று. பல ஆண்டுகளுக்குமுன் பணியாற்றிய உயர் அதிகாரிகளை தேடி அலைய வேண்டியுள்ளது. இந்த நடைமுறையை மாற்றி, தலைமையாசியர்கள் பணிக்காலத்தின்போது அவர்களின் “எஸ்.ஆர்.’ புத்தகங்களில், 6 மாதங்களுக்கு ஒருமுறை, அவ்வப்போது பணியில் உள்ள டி.இ.ஓ.,க்கள், சி.இ.ஓ.,க்கள் அறிக்கை அளித்து, அதையே “ரகசிய அறிக்கை’யாக அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றம் கொண்டுவரவேண்டும். அப்போதுதான் அது ரகசிய அறிக்கையாகும், என்றார். இடிக்கும் “லாஜிக்’: “ரகசிய அறிக்கை’ என்பது ஒரு தலைமையாசிரியர் அவர் பணிக்காலத்தின்போது, அவருக்கு தெரியாமல் அவரது பணி செயல்பாடு, சிறப்புக்கள், நடத்தை குறித்து உயர் அதிகாரிகள் அளிக்கும் சான்று. ஆனால், தற்போதுள்ள நடைமுறையால் “ரகசிய அறிக்கை’யின் “லாஜிக்’ கேள்வி குறியாகிறது. “தன்னுடைய உயர் அதிகாரியிடம் அல்லது உயர் அதிகாரியாக பணியாற்றியவரிடம் சென்று, “”நான், உங்களுக்கு கீழ் பணியாற்றிய காலத்தில் என் பணி செயல்பாடு குறித்த ரகசிய அறிக்கையை என்னிடமே தாருங்கள்” என்பது எப்படி ரகசிய அறிக்கையாக இருக்க முடியும் என்று, தலைமையாசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ மாணவியர் "ஆன்-லைன்’ வழியில் அறிவியல் பாடத்தில் செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அதன் தலைவர் வினீத் ஜோஷி அறிவுறுத்தி உள்ளார்.

பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 மாணவ, மாணவியர் மட்டும், அறிவியல் பாடங்களில், செய்முறை தேர்வுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமில்லாமல், தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும், 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கும், செய்முறை வகுப்புகள் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளன. இதனால், பள்ளிகளில் உள்ள ஒரு ஆய்வகத்தையே, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஒவ்வொரு பிரிவாக பயன்படுத்த வேண்டி உள்ளது. மேலும், செய்முறைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், சரிவர கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர், திருப்தியான முறையில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்கின்றனரா என்பதையும், உறுதியாக கூற முடியாது. இது போன்ற நிலையில், ஆன்-லைன் வழியாக, செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளும் திட்டத்தை, சி.பி.எஸ்.இ., அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் உள்ள மத்திய அரசின் சி.டி.ஏ.சி., (சென்டர் பார் டெவலப்டு ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்) மையமும், கேரளாவில் உள்ள அம்ரிதா பல்கலையும் இணைந்து, இந்த ஆன்-லைன், “லேப்’பை உருவாக்கி உள்ளன. தீதீதீ.ணிடூச்ஞண்.ஞிணி.டிண என்ற இணையதளத்திற்குள் சென்று, 9, 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், எத்தனை முறை வேண்டுமானாலும், முப்பரிமாண தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளலாம். செய்முறைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், படங்களாக, இணையத்தில் உள்ளன. இதை பயன்படுத்தி, செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது தொடர்பான சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், சி.பி.எஸ்.இ., தலைவர் வினீத் ஜோஷி கூறியதாவது: பள்ளிகளில், செய்முறை பயிற்சியை மேற்கொள்ள, போதிய நேரம் கிடைக்காது. ஆன்-லைன் வழியில், எப்போது வேண்டுமானாலும், செய்முறை பயிற்சியில் ஈடுபடலாம். மாணவர்களின் செய்முறை தேர்வை மதிப்பீடு செய்யும் தொழில்நுட்பமும், இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை, மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தி உள்ள இத்திட்டத்திற்கு, ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அறிவியல் ஆசிரியை ஷீலா கூறுகையில், “”இத்திட்டம், அறிவியலை, மாணவ, மாணவியரின் வீட்டிற்கே கொண்டு செல்வதாக உள்ளது. ஆன்-லைன் வழியில், மாணவ, மாணவியர், உற்சாகமாக, செய்முறை பயிற்சிகளில் ஈடுபடுவர். இதன் மூலம், அவர்களது அறிவியல் அறிவு மேம்படும்,” என, தெரிவித்தார்.