பிளஸ் 2 மாணவர்களுக்கு இரண்டு வாரங்களில் விடைத்தாள் நகல்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு 2 வாரங்களில் விடைத்தாள் நகல்கள் அனுப்பப்படும் என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு கடந்த ஆண்டு 86 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு விண்ணப்ப விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.

பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாட மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். இந்தப் பாடங்களில் மதிப்பெண் குறைந்தவர்கள், தேர்வில் தோல்வியடைந்தவர்கள், ஓரிரு மதிப்பெண்ணில் சிறப்பிடத்தை இழந்தவர்கள் என ஏராளமானோர் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் தொடர்பாக தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியது:

விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி தமிழகம் முழுவதும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு மே 27-ம் தேதியளவில் வந்துசேரும். விடைத்தாள் நகல், மறுகூட்டல் விண்ணப்பங்கள் சிறப்பு மையத்தில் வைத்து பரிசீலிக்கப்படும்.

அதன்பிறகு, குறிப்பிட்ட மாணவருக்கு வழங்கப்பட்டுள்ள டம்மி எண் கண்டறியப்பட்டு, அவரின் விடைத்தாள் எந்த விடைத்தாள் திருத்தும் மையத்தில் உள்ளதோ அங்கிருந்து பெறப்படும். சென்னையில் சிறப்பு மையத்தில் வைத்து இந்த விடைத்தாள்கள் நகல் எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு அனுப்பப்படும். இதற்கு ஏறத்தாழ 2 வார காலம் ஆகும்.

மறுகூட்டல், மறுமதிப்பீடு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் ஒரு மாத காலத்தில் நிறைவடையும். அதன்பிறகு, திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகம், மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு போன்றவற்றுக்கு கலந்தாய்வு தேதிக்கு முன்னதாக அனுப்பப்படும். மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் இருந்தால், அந்த மாணவருக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைவாகப் பெற்றாலும் அந்தப் புதிய மதிப்பெண் சான்றிதழே இறுதியானது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் விண்ணப்ப விற்பனை தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கியது. முதல்நாளிலேயே ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். பல இடங்களில் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து உடனடியாகச் சமர்ப்பித்துவிட்டனர்.

இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு கடைசி நாள் வெள்ளிக்கிழமை (மே 25) ஆகும்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், இணை இயக்குநர் (கல்வி) புதுச்சேரி, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பெரும்பாலான மையங்களில் மாணவர்களும், பெற்றோர்களும் மிக நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர். சென்னையில் டாக்டர் அம்பேத்கர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (சென்னை வடக்கு) அலுவலகத்தில் மட்டும் ஒரே நாளில் 1,200 விண்ணப்பங்கள் விற்பனையாகின. மறுகூட்டல், விடைத்தாள் நகலைப் பெற அதற்குரிய தொகையை வரைவோலையாக (டி.டி.) சமர்ப்பித்துவிட்டு மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.

விடைத்தாள் நகலைப் பெறுவதற்கு மொழிப்பாடங்கள், ஆங்கில பாட விடைத்தாள்களைப் பெற ரூ.550-க்கான டி.டி.யைச் சமர்ப்பிக்க வேண்டும். பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275-க்கான டி.டி.யைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மொழிப்பாடம், ஆங்கிலம், உயிரியல் பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.305-ஐ மறுகூட்டலுக்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இதரப் பாடங்களுக்கான கட்டணம் ரூ.205. இந்த டி.டி.க்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் Director of Government Examinations, Chennai-6 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் இருக்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: