தமிழ்ச் சங்க இலக்கியங்கள் "பெரிசுகளின் மொழியா?’ : மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் கவலை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கம், தமிழுணர்வு பொங்க நேற்று காலை துவங்கியது. பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை வாசிக்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாக பல்வேறு அரங்குகளில் சங்கமித்திருந்தனர். மலேசியாவில் இருந்து, “மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்’ சார்பில் 250 பேர் வந்திருந்தனர்; இவர்களில் 34 பேர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கின்றனர்.
இக்குழுவினரை கோவைக்கு அழைத்து வந்திருந்த, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள, மலேசியாவில் ஆறு மாதத்துக்கு முன்பே செம்மொழி அலுவலகத்தை திறந்தோம். உலகம் தழுவிய தமிழறிஞர்களை ஒரே வளாகத்தில் கண்டு தமிழுறவாட வேண்டும், என்ற ஆவலில் கோவை வந்துள்ளோம்; மாநாடு முடியும் வரை தங்கி அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளோம். பதினான்கு மாநிலங்களை கொண்ட மலேசியாவின் மக்கள்தொகை 2.5 கோடி; இதில், 23 லட்சம் பேர் தமிழர். மலேசியாவின் மொத்த மக்கள்தொகையில் 30 சதவீதத்தை சீனர்கள் பிடித்துள்ளனர். ஆனால், அந்நாட்டின் பொருளாதாரத்தின் 60 சதவீதம் சீனர்கள் வசமுள்ளன. தமிழர்களின் நிலை பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது. எனினும், நாங்கள் குடியேறிய மலேசிய நாட்டில் தமிழுணர்வுடன் இலக்கியத்தை பரப்பவும், தமிழர் குடும்பங்களிடையே நல்லதொரு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் எழுத்தாளர் சங்கம் நடத்துகிறோம்.
தற்போதைய காலச்சூழலில், நமது சங்க இலக்கியம் என்பது, “பெரிசுகளின் மொழி’ என்பதாகவே தவறான கண்ணோட்டத்துடன் இளைஞர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. வயதானோர் மட்டுமே தமிழிலக்கியங்கள் மீதான ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என்பதை போன்ற தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. எனவே, இளைஞர்கள் மத்தியிலும் தமிழுணர்வை ஊட்ட வேண்டும். தமிழ் இலக்கியங்களின் மேன்மை குறித்து மனதில் ஆழமாக பதியச் செய்ய வேண்டும். செம்மொழியான தமிழின் ஆற்றல், தொன்மை, பெருமை, அருமை குறித்து, ஒவ்வொரு தமிழரும் தங்களது பிள்ளைக்கு எடுத்துரைக்க வேண்டும்; இதற்கான கடமை தாய், தந்தையை சாரும். இதை அரசும், சமூக அமைப்பும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. இதை அடிப்படியாக கொண்டே, எமது பிள்ளைகளுக்கு தமிழின் பெருமைகளை அன்றாடம் கூறி, உணர்வூட்டி வருகிறோம். தமிழின் மீதான தீவிர பற்று காரணமாக நாங்கள் ஒவ்வொருவரும் 40 ஆயிரம் ரூபாய் வரை சொந்தமாக செலவிட்டு, இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளோம்; நிதிச்செலவு ஆனாலும், தமிழ் மாநாட்டில் பங்கேற்ற அனுபவம் இதயத்துக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. தமிழக அரசு, மிகவும் நேர்த்தியான முறையில் மிகச்சிறப்பாக இம்மாநாட்டு திட்டங்களை வடிவமைத்து வெற்றிகரமாக செயல்படுத்தியிருப்பதை, மலேசிய தமிழ் எழுத்தாளர்களான நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வாறு, ராஜேந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: