>கொசு கடித்தால் மலேரியா வராது: விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு

>

மலேரியாவை தடுக்க, மரபணு மாற்றப் பட்ட கொசு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொசு நோயை பரப்புவதற்கு பதிலாக, மலேரியா வராமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை பரப்புகிறது’ என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஜப்பானை சேர்ந்த ஜிசி மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஷிகெடே யோஷிடா கூறியதாவது:இந்த ஆய்வு, மனிதர்களிடம் மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் வகை கொசுவை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டது. கொசுக்கள் மனிதர்களிடம் இருந்து ரத்தத்தை உறிஞ்சும் போது நோய்க் கிருமிகளை பரப்புகிறது. இதனால், மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட்டு, ஆண்டுக்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில், பெரும்பாலும் ஆப்ரிக்காவை சேர்ந்த குழந்தைகளே உயிரிழக்கின்றனர்.

கொசுக்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானதாக உள்ளது. எனவே, மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை பரப்புவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் கொசு கடித்ததும், பாரம்பரிய தடுப்பு மருந்துகள் போன்று பாதுகாப்பான நோய் எதிர்ப்பு திறன் தூண்டப்படுகிறது. இவ்வாறான கொசுக்கள் தொடர்ந்து கடிக்கும் போது, வாழ் நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு திறன் இயற்கையாகவே அதிகரிக்கிறது.இதனால், இந்த பூச்சி இனம், தீங்கு விளைவிப்பதில் இருந்து, ஆதாயம் தருவதாக மாறுகிறது. இந்த ஆய்வு மலேரியாவை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் குறித்த நம்பிக்கையை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment